பக்கம் - 271 -
அப்பாஸின் தூதர் ஏறக்குறைய 500 கிலோ மீட்டர் உள்ள தூரத்தை மூன்றே நாட்களுக்குள் அதிவிரைவில் கடந்து நபி (ஸல்) அவர்களிடம் அக்கடிதத்தை ஒப்படைத்தார். அன்று நபி (ஸல்) அவர்கள் ‘குபா’ பள்ளிவாசலில் தங்கியிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு அக்கடிதத்தை உபை இப்னு கஅப் (ரழி) படித்துக் காண்பித்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அச்செய்தியை வெளியில் கூறாமல் மறைத்து விடுங்கள் என்று கட்டளையிட்டு மதீனா விரைந்தார்கள். அங்கு அன்சாரி மற்றும் முஹாஜிர் தோழர்களிலுள்ள தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.
அவசர நிலை
மதீனாவில் முஸ்லிம்கள் எந்நேரமும் ஆயுதமேந்தியவர்களாக இருந்தனர். எதிரிகளின் தாக்குதலைச் சமாளிக்க எந்நேரமும் தயாராக இருந்தனர். ஆயுதங்களைத் தொழுகையிலும் தங்களுடன் வைத்திருந்தனர்.
அன்சாரிகளின் ஒரு குழு நபி (ஸல்) அவர்களின் பாதுகாப்புக்காகத் தயாரானார்கள். அவர்களில் ஸஅது இப்னு முஆது, உஸைது இப்னு ஹுழைர், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகியோர் இருந்தனர். இவர்கள் நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாம்லில் ஆயுதம் ஏந்தி காவலில் ஈடுபட்டனர். மேலும், திடீர் தாக்குதலைத் தடுக்க மதீனாவின் நுழைவாயில்கள் மற்றும் சந்து பொந்துகள் அனைத்திலும் சிறுசிறு படைகளாக பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தங்கள் மீது தாக்குதல் நடத்த எதிரிகள் எந்தெந்த வழிகளிலெல்லாம் வர இயலுமோ அந்த அனைத்து வழிகளிலும் எதிரிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்காக ரோந்துப் பணியிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
எதிரிகள் மதீனா எல்லையில்
மக்கா படை வழக்கமான மேற்குப் பாதையில் தனது பயணத்தைத் தொடர்ந்தது. அப்படை ‘அப்வா’ என்ற இடத்தை அடைந்ததும் அபூஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா நபி (ஸல்) அவர்களின் தாயாருடையக் கப்ரைத் தோண்டி அவரது உடலை வெளியே எடுக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால், படையின் தளபதிகள் இக்கோரிக்கையை நிராகரித்ததுடன் இவ்வாறு செய்தால் ஆபத்தான முடிவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.
குறைஷிப் படை தனது பயணத்தைத் தொடர்ந்தது. மதீனாவிற்குச் சமீபமாக உள்ள ‘அல்அகீக்’ என்ற பள்ளத்தாக்கைக் கடந்து, அங்கிருந்து வலப்புறமாகச் சென்று, உஹுத் மலைக்கருகில் உள்ள ‘அய்னைன்’ என்ற இடத்தில் தங்கியது. இந்த இடம் உஹுத் மலைக்கருகில் மதீனாவின் வடப் பகுதியில் இருக்கும் பள்ளத்தாக்கின் மேற்புறத்தில் உள்ள ‘பத்னு ஸப்கா’ என்ற பகுதியில் உள்ளது. ஆக, மக்காவின் படை இவ்விடத்தில் ஹிஜ்ரி 3, ஷவ்வால் மாதம் பிறை 6, வெள்ளிக்கிழமை அன்று வந்திறங்கி தங்களது ராணுவ முகாம்களை அமைத்துக் கொண்டது.