பக்கம் - 279 -
மக்கா படையின் அமைப்பு
இணைவைப்பவர்கள் தங்களது படையைப் பல அணிகளாக அமைத்தனர். படையினரின் உள்ளத்தில் இடம் பிடித்திருந்த அபூ ஸுஃப்யான் ஸக்ர் இப்னு ஹர்ப் போரின் பொதுத் தளபதியாக இருந்தார். படையின் வலப்பக்கத்திற்குக் காலித் இப்னு வலீத் தலைமையேற்றார். இடப்பக்கத்திற்கு இக்மா இப்னு அபூஜஹ்ல் தலைமையேற்றார். காலாட்படை வீரர்களுக்கு ஸஃப்வான் இப்னு உமய்யாவும் அம்பெறியும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபூ ரபீஆவும் தலைமை வகித்தனர்.
“அப்து தார்’ என்ற குடும்பத்தினர் இப்படையின் கொடியை வைத்திருந்தனர். குஸை இப்னு கிலாபிடமிருந்து அப்து மனாஃப் குடும்பத்தினர் பதவிகளையும் தகுதிகளையும் பங்கு வைத்துக் கொண்டபோது அப்து தார் குடும்பத்தினருக்கு போரில் கொடி பிடிக்கும் பதவி கிடைத்தது. இதன் விவரத்தை இந்நூலின் தொடக்கத்தில் நாம் கூறியிருக்கின்றோம். இப்பதவியில் அவர்களிடம் வேறு யாரும் போட்டி போட்டு அதை பறித்துக் கொள்ள முடியாது. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக இந்தச் சடங்குகளை அவர்கள் பின்பற்றி வந்தனர். எனினும், படையின் பொதுத் தளபதியான அபூ ஸுஃப்யான் பத்ர் போரில் கொடியை ஏந்தியிருந்த நழ்ர் இப்னு ஹாரிஸ் கைது செய்யப்பட்டதால் குறைஷிகளுக்கு ஏற்பட்ட தோல்வியை நினைவூட்டினார். மேலும், இவர்களின் கோபத்தையும் வெறியையும் கிளறுவதற்காக பின்வருமாறு உரை நிகழ்த்தினார்:
“அப்து தார் குடும்பத்தினரே! பத்ர் போரில் எங்களின் கொடிக்கு நீங்கள்தான் பொறுப்பு வகித்தீர்கள். போரில் எங்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். படைக்கு ஏற்படக்கூடிய நிலைக்கு அவற்றின் கொடிகளே காரணமாக இருக்கிறது. கொடி வீழ்ந்துவிட்டால் படையினரின் பாதங்களும் ஆட்டம் கண்டுவிடுகின்றன. படைகள் தோல்வியைத் தழுவி விடுகின்றன. நீங்கள் எங்களது கொடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்படி முடியவில்லை என்றால் எங்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்து விடுங்கள். நாங்கள் அதை பாதுகாத்துக் கொள்கிறோம்.”
அபூ ஸுஃப்யான் தனது இந்த சிற்றுரையின் மூலம் தனது நோக்கத்தில் வெற்றி கொண்டார். அபூ ஸுஃப்யானின் உரையைக் கேட்ட அப்து தார் குடும்பத்தினர் கடும் சினம்கொண்டு அவரை எச்சரித்தனர். “எங்களது கொடியை நாங்கள் உமக்குக் கொடுக்க வேண்டுமா? நாளை நாங்கள் போர் புரியும் போது எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று நீ பார்க்கத்தான் போகிறாய்” என்று கர்ஜித்தனர்.
இவர்கள் சூளுரைத்தது போன்றே போரில் கொடியைக் காப்பதில் பெரும் தியாகம் செய்தனர். இந்தக் குடும்பம் முழுவதுமே கொடியைக் காப்பதிலே தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர்.
குறைஷிகள் நடத்திய அரசியல் பேரங்கள்
போர் தொடங்குவதற்கு முன்பு முஸ்லிம்களின் அணியில் பிணக்கையும் பிரிவினையையும் ஏற்படுத்த குறைஷிகள் முயன்றனர். மதீனா முஸ்லிம்களிடம் அபூ ஸுஃப்யான் தூதனுப்பினார். “நீங்கள் எங்கள் ஒன்றுவிட்ட சகோதரரை விட்டு விலகிக் கொள்ளுங்கள் நீங்கள் எங்களுக்கு இடையில் குறுக்கிடாதீர்கள் நாங்கள் உங்களை விட்டு விடுகிறோம் உங்களிடம் போர் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை நாங்கள் உங்களிடம் போர் செய்ய வரவில்லை எங்களது நோக்கம் எங்களது ஒன்றுவிட்ட சகோதரன்தான்.” இவ்வாறு அபூ ஸுஃப்யான் தூதரிடம் கூறி அனுப்பினார்.