பக்கம் - 28 -
அம்ரு இப்னு லுஹய்ம்க்கு தகவல் கொடுக்கும் ஒரு ஜின் இருந்தது. அது அவனிடம் நபி நூஹ் (அலை) அவர்களின் காலத்து சிலைகளான வத், ஸுவாஃ, யகூஸ், நஸ்ர் போன்றவை ஜித்தா நகரத்தில் புதைந்திருக்கின்றன என்று கூறியது. அவன் ஜித்தா வந்து அந்த சிலைகளைத் தோண்டியெடுத்து மக்காவிற்குக் கொண்டு வந்தான். ஹஜ்ஜுடைய காலத்தில் கஅபாவை தரிசிக்க வந்திருந்த பல்வேறு கோத்திரத்தினருக்குப் பிரித்துக் கொடுத்தான். அவர்கள் அவற்றை தங்களது பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வணங்க ஆரம்பித்தனர் என்று சிலர் கூறுகின்றனர்.
‘வத்’ சிலையை இராக் நாட்டுக்கு அருகிலுள்ள ‘தவ்மதுல் ஜந்தல்’ என்ற பகுதியிலுள்ள ‘ஜர்ஷ்’ என்ற இடத்தில் கல்பு கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
‘ஸுவாஃ’ சிலையை ஹிஜாஜ் பகுதியின் மக்கா நகரருகில் ‘ருஹாத்’ என்ற இடத்தில் ஹுதைல் இப்னு முத்கா என்ற கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
‘யகூஸ்’ சிலையை ஸபா பகுதியில் ‘ஜுர்ஃப்’ என்ற இடத்தில் முராது வமிசத்தின் கூதைஃப் என்ற கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
‘யஊக்’ சிலையை யமன் நாட்டில் ‘கய்வான்’ என்ற ஊரில் ஹம்தான் கோத்திரத்தினர் வணங்கி வந்தனர்.
‘நஸ்ர்’ சிலையை தில் கிலா கோத்திரத்தைச் சேர்ந்த ஹிம்யர் குடும்பத்தினர் தங்களது ஊரில் வைத்து வணங்கி வந்தனர். (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி, கிதாபுல் அஸ்னாம்)
இந்த சிலைகளுக்கென பிரமாண்டமான ஆலயங்களை அமைத்தனர். இறையில்லமான கஅபாவை கண்ணியப்படுத்தியதைப் போன்று அந்த ஆலயங்களையும் கண்ணியப்படுத்தினர். அந்த ஆலயங்களுக்கு பூசாரிகளும் பணியாளர்களும் இருந்தனர். கஅபாவிற்குக் காணிக்கை அளித்ததைப் போன்று அந்த ஆலயங்களுக்கும் காணிக்கை செலுத்தி வந்தனர். அத்துடன் அனைத்தையும் விட கஅபாவே மிக உயர்வானது என்பதையும் ஒப்புக்கொள்ளவே செய்தனர். (இப்னு ஹிஷாம்)
இன்னும் பல கோத்திரத்தாரும் இதே வழியைப் பின்பற்றி சிலைகளைக் கடவுள்களாக ஏற்று அவற்றுக்கென ஆலயங்களை உருவாக்கினார்கள். அவற்றில் ‘துல் கலஸா’ என்ற சிலையை தவ்ஸ், கஷ்அம் மற்றும் புஜைலா கோத்திரத்தார் யமன் நாட்டில் உள்ள ‘தபாலா’ என்ற ஊரில் வணங்கி வந்தனர்.
‘ஃபில்ஸ்’ என்ற சிலையை ‘தய்’ கோத்திரத்தாரும் அவர்களை ஒட்டி ஸல்மா, அஜா என்ற இரு மலைகளுக்கிடையில் வசித்து வந்தவர்களும் வணங்கி வந்தனர். இதைத் தவிர்த்து அவர்களுக்கு மேலும் பல கோயில்கள் இருந்தன. யமன் மற்றும் ஹிம்யர்வாசிகள் ‘ரியாம்’ என்ற கோயிலையும் ரபிஆ கோத்திரத்தினர் ‘ரழா’ என்ற ஒரு கோயிலையும் வைத்திருந்தனர். மேலும் பக்ர், தக்லிப் கோத்திரத்தார் தங்களுக்கென சிறு கோயில்களையும் ‘ஸன்தாத்’ என்ற நகரில் இயாத் வமிசத்தவர்கள் தங்களுக்கென சிறு கோயில்களையும் ஏற்படுத்தியிருந்தனர். (இப்னு ஹிஷாம்)
மேலும் தவ்ஸ் கோத்திரத்தாருக்கு ‘துல் கஃப்ஃபைன்’ என்ற சிலை இருந்தது. கினானாவின் மக்களான மாலிக், மலிகான் மற்றும் பக்ருக்கு ‘ஸஃது’ எனும் சிலையும், உத்ராவுக்கு ‘ஷம்ஸ்’ என்ற சிலையும் கவ்லானுக்கு ‘உம்யானிஸ்’ எனும் சிலையும் குலதெய்வங்களாக விளங்கின. (இப்னு ஹிஷாம்)