பக்கம் - 30 -
சிலர் சான்றோர்களுக்கென உருவப் படங்கள், சித்திரங்கள் எதையும் வரையாமல் அவர்களது அடக்கத்தலங்களையும் அவர்கள் வசித்த, ஓய்வெடுத்த, தங்கிய இடங்களையும் புனித ஸ்தலங்களாக ஏற்படுத்திக் கொண்டனர். அந்த ஸ்தலங்களுக்குக் காணிக்கைகளையும் நேர்ச்சைகளையும் சமர்ப்பித்தனர். மேலும், அவ்விடங்களில் பணிவுடனும் மரியாதையுடனும் நடந்து பல கிரியைகளைச் செய்தனர். இவ்வாறான இடங்களுக்கும் சமாதிகளுக்கும் அரபியில் ‘அவ்ஸான்’ என்று கூறப்படும்.
அவர்கள் அஸ்னாம் மற்றும் அவ்ஸான்களுக்குச் செய்து வந்த சடங்குகளில் பெரும்பாலானவற்றை அம்ரு இப்னு லுஹய்ம் தான் உருவாக்கித் தந்தான். அவன் உருவாக்கித் தந்த அனைத்தும் “அழகிய அனுஷ்டானங்கள் (பித்அத் ஹஸனா)” எனவும், அவை இப்றாஹீம் (அலை) அவர்களது மார்க்கத்திற்கு எவ்வகையிலும் முரணானதல்ல எனவும் அம்மக்கள் நம்பினர்.
அவர்கள் அவ்ஸான் மற்றும் அஸ்னாம் ஆகியவற்றை வணங்கிய முறைகளாவது:
1) அச்சிலைகளை வணங்கி வழிபாடுகள் செய்து அவற்றிடம் அபயம் தேடினர். தங்களது நெருக்கடியான காலக்கட்டத்தில் பாதுகாவலுக்காக அதனைப் பெயர் கூறி அழைத்தனர். அவை அல்லாஹ்விடம் சிபாரிசு செய்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு வேண்டி வந்தனர்.
2) அவற்றை நாடி பயணித்தனர்; வலம் சுற்றி வந்தனர்; பணிவை காட்டி அவற்றின் முன் சிரம் பணிந்தனர்.
3) அவற்றுக்கு தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றினர். அச்சிலைகளுக்கு முன் அமைக்கப்பட்ட பலி பீடங்களில் தங்களது பிராணிகளை அறுத்து பலி கொடுத்தனர். எங்கு பிராணிகளை அறுத்தாலும் அச்சிலைகளின் பெயர் கூறியே அறுத்தனர்.
அவர்களின் இந்த இருவகை உயிர்ப்பலிகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்:
... (பூஜை செய்வதற்காக) நியமிக்கப்பட்டவைகளில் அறுக்கப்பட்டவைகளும் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5 : 3)
(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (அல்குர்ஆன் 6 : 121)
4) அவர்கள் அச்சிலைகளுக்கு செலுத்திய வணக்க வழிபாடுகளில் ஒன்று “தங்களின் கற்பனைக்கு தகுந்தவாறு உணவு, குடிபானம் ஆகியவற்றில் சிலவற்றை அச்சிலைகளுக்காக ஒதுக்கி வைத்து விடுவார்கள். அவ்வாறே தங்களது வேளாண்மை மற்றும் கால்நடைகளில் சிலவற்றை அச்சிலைகளுக்காக ஒதுக்கி விடுவார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவெனில், அல்லாஹ்வுக்காகவும் சிலவற்றை ஒதுக்குவார்கள். பிறகு பல காரணங்களைக் கூறி அவை அனைத்தையும் சிலைகளுக்கே கொடுத்து விடுவார்கள். ஆனால், சிலைகளுக்காக ஒதுக்கியவற்றில் எதையும் அல்லாஹ்வுக்கென்று எடுக்க மாட்டார்கள். இதைப் பற்றியே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்:
விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு “இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய தெய்வங்களுக்கு” என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாயிருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 6 : 136)