பக்கம் - 306 -
நபியவர்களின் பிரார்த்தனை
உஹுத் மைதானத்திலிருந்து எதிரிகள் சென்றுவிட்ட போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் வரிசையாக நில்லுங்கள்; கண்ணியத்திற்கும் மகிமைக்கும் உரித்தான எனது இறைவனை நான் புகழ வேண்டும்” என்று கூறினார்கள். நாங்கள் நபியவர்களுக்குப் பின் பல அணிகளாக நின்று கொண்டோம்.
அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்:
“அல்லாஹ்வே! புகழெல்லாம் உனக்கே உரித்தானது. நீ விரித்ததை மடக்குபவர் யாரும் இல்லை. நீ மடக்கியதை விரிப்பவர் யாரும் இல்லை. நீ வழிகேட்டில் விட்டவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாரும் இல்லை. நீ கொடுத்ததைக் தடுப்பவர் யாரும் இல்லை. நீ நெருக்கமாக்கி வைத்ததை தூரமாக்கி வைப்பவர் யாருமில்லை. அல்லாஹ்வே! உனது வளங்கள், உனது கருணை, உனது கிருபை, உனது இரணம் ஆகியவற்றை நீ எங்களுக்கு விசாலமாக வழங்குவாயாக!
அல்லாஹ்வே! நீங்காத, அகன்று போகாத, நிரந்தரமான அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹவே! சிரமமான நேரத்தில் உதவியையும், பயத்தின் நேரத்தில் பாதுகாப்பையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்கு கொடுத்தவற்றின் தீங்கிலிருந்தும், நீ எங்களுக்கு கொடுக்காதவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு ஈமானை (இறைநம்பிக்கையை) பிரியமாக்கி வை. அதை எங்களது உள்ளங்களில் அலங்கரித்து வை. இறை நிராகரிப்பு, உனது கட்டளைக்கு மாறுசெய்வது, எனக்குக் கட்டுப்படாமல் விலகிப்போவது ஆகியவற்றை எங்களுக்கு வெறுப்பாக்கி விடு. எங்களைப் பகுத்தறிவாளர்களில் ஆக்கிவிடு. அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை! முஸ்லிமகளாக எங்களை வாழச் செய்! நஷ்டமடையாதவர்களாக, சோதனைக்குள்ளாகாதவர்களாக எங்களை நல்லோர்களுடன் சேர்த்து வை! அல்லாஹ்வே! உனது தூதர்களைப் பொய்யாக்கி, உனது வழியிலிருந்து தடுக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! அவர்கள் மீது உனது தண்டனையையும் வேதனையையும் இறக்குவாயாக! அல்லாஹ்வே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் இருக்கும் நிராகரிப்பாளர்களை நீ அழித்துவிடு! உண்மையான இறைவனே!” (அல்அதபுல் முஃப்ரத், முஸ்னத் அஹ்மது)
மதீனா திரும்புதல் அன்பு மற்றும் தியாகத்தின் அற்புதங்கள்
தியாகிகளை அடக்கம் செய்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தனை புரிந்த பின், நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். போர் நடந்து கொண்டிருந்த போது இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் புறத்தில் நிகழ்ந்ததைப் போன்று, திரும்பும் வழியில் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் புறத்திலும் பல அற்புத நிகழ்ச்சிகள் நடந்தன.
ஹம்னா பின்த் ஜஹ்ஷ் எனும் பெண்மணி நபி(ஸல்) அவாக்ளை வழியில் சந்தித்தார். அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி கூறப்பட்டது. அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி, அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா (ரழி) இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும் அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அவரது கணவர் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) இறந்த செய்தி கூறப்படவே, அவர் தேம்பி அழலானார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஒரு பெண்ணின் கணவன் அவளிடம் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறான்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)