பக்கம் - 317 -
இவர்களை அழைத்துக் கொண்டு ரஜீஃவு என்ற இடத்தை அம்மக்கள் அடைந்தனர். இவ்விடம் ராபிக் மற்றும் ஜித்தாவிற்கு மத்தியில் ஹிஜாஸு பகுதிக்கு அருகில் ஹுதைல் வமிசத்தை சொந்தமான நீர் நிலையாகும். இங்கு வந்தவுடன் லஹ்யான் கிளையினரை இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினர். லஹ்யான் கிளையைச் சோந்த 100 அம்பெறியும் வீரர்கள் காலடி காவடி அடையாளங்களை வைத்து இவர்கள் இருக்குமிடம் வந்தடைந்தனர். தங்களுக்கு மோசடி நடந்துவிட்டது என்று தெரிந்து கொண்ட நபித்தோழர்கள் ஃபத்ஃபத் என்ற மலைக்குன்றின் மீது ஏறிக்கொண்டனர். அங்கு வந்த எதிரிகள் “நாங்கள் உங்களைக் கொலை செய்யோம் என்ற உறுதிமொழி தருகிறோம், இறங்கி வாருங்கள்” எனக் கூறினர். ஆனால், ஆஸிம் இறங்கி வர மறுத்துவிட்டு, தங்களது தோழர்களுடன் சேர்ந்து எதிரிகளை எதிர்த்தனர். ஆனால், எதிரிகள் நபித்தோழர்களில் 7 நபர்களைக் கொன்றுவிட்டனர். மீதம் குபைப், ஜைது இப்னு தஸின்னா (ரழி) இன்னும் ஒருவர் ஆகிய மூவர் மட்டும் இருந்தனர். அவர்களிடம் இந்த எதிரிகள் கொல்ல மாட்டோம் என் மீண்டும் வாக்களித்தனர். அம்மூவரும் அவர்களிடம் இறங்கிவரவே தங்களின் வாக்குக்கு மாறுசெய்து வில்லின் நரம்புகளால் அவர்களைக் கட்டினர்.
அந்த மூன்றாவது நபித்தோழர் “இது இவர்களின் முதல் மோசடி” எனக் கூறி அவர்களுடன் செல்வதற்கு மறுத்தார். அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் வர மறுக்கவே அவரைக் கொன்றுவிட்டனர். அதற்கு பின் குபைப், ஜைது (ரழி) இருவரையும் மக்காவிற்கு அழைத்து வந்து அங்கு அவர்களை விற்றனர். இவ்விருவரும் பத்ர் போரில் மக்காவின் தலைவர்களில் சிலரை கொன்றிருந்தனர். குபைபை வாங்கியவர்கள் சில காலம் வரை அவர்களைச் சிறை வைத்திருந்தனர். பின்பு அவரை கொன்றுவிட முடிவு செய்து மக்காவின் புனித எல்லைக்கு வெளியில் அழைத்து சென்றனர். அங்கு அவரைக் கழு மரத்தில் ஏற்றி கொன்றுவிடலாம் என முடிவு செய்தனர். அப்போது குபைப் (ரழி) “நான் இரண்டு ரக்அத் தொழுதுகொள்ள என்னை விடுங்கள்” என்று கேட்க அவர்களும் அனுமதித்தனர். தொழுது முடித்தபின் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு நடுக்கம், பயம் ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் கூறமாட்டீர்கள் என்றிருப்பின் நான் மேலும் தொழுதிருப்பேன் என்று கூறிய பிறகு, அல்லாஹ்வே! இவர்களை எண்ணிக்கொள்! இவர்களை தனித்தனியாக பிரித்து கொன்றுவிடு! இவர்களில் எவரையும் மீதம் விடாதே!” என்று கூறி பின்வரும் கவிதையை படித்தார்.
“எதிரி ரானுவத்தினர் என்னை சூழ்ந்தனர்;
தங்கள் இனத்தவரை எனக்கெதிராக ஒன்றிணைத்தனர்;
ஒவ்வொரு சாதியையும் வருமாறு அழைத்தனர்;
தங்களின் பெண்கள், பிள்ளைகள் என அனைவரையும் இணைத்தனர்;
ஒரு நீண்ட உறுதிமிக்க கழுமரத்திற்கருகில் நான் நிறுத்தப்பட்டேன்;
எனது கஷ்டம், தனிமை, அந்நியம்
மேலும் நான் இறக்குமிடத்தில் சூழ்ந்துள்ள ராணுவம்
இவையனைத்தையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்;
இறைவனை நான் நிராகரிக்கவேண்டுமென பெரிதும் விரும்பினர்;
(எங்ஙனம் அதனைச் செய்வேன்)
மரணம் எனக்க அதைவிட மிக எளிது;
என் கண்கள் அழுகின்றன; நீர் ஒட இடமில்லை;
எனக்கிழைத்த துன்பத்தைத் தாங்க
அர்ஷின் அதிபதி எனக்கு பொறுமையளித்தான்;
அணு அணுவாக அவர்கள் என்னை கொல்கின்றனர்;
எனக்கு மோசமான உணவு வழங்கப்பட்டது;
நான் முஸ்லிமாகக் கொலையுறுவதால்
மரணம் ஒரு பொருட்டல்லவே!
எந்த பகுதியில் கொலையுண்டாலும்
அல்லாஹ்வின் பாதையில் என் மரணம் துயில் கொள்ளுமே!
அது, அல்லாஹ் நாடினால், துண்டு துண்டான
சதைகளின் நாள, நரம்புகளிலெல்லாம் அருள்வளம் பொழிவான்”