பக்கம் - 32 -
வஸீலா: தொடர்ச்சியாக ஐந்து பிரசவங்களில் இரண்டிரண்டாக பத்து பெண் குட்டிகளை ஈன்ற ஆட்டுக்குச் சொல்லப்படும். அதன் பிறகு அந்த ஆடு ஈனும் குட்டி உயிருள்ளதாகப் பிறந்தால் அதனை ஆண்கள் மட்டும் புசிப்பார்கள். இறந்த நிலையில் பிறந்தால் ஆண், பெண் இருவரும் புசிப்பார்கள்.
ஹாம்: இது ஓர் ஆண் ஒட்டகையின் பெயராகும். அதன் உறவின் மூலம் இடையில் ஆண் குட்டிகளின்றி தொடர்படியாக பத்து பெண் குட்டிகள் ஈன்றிருந்தால் அந்த ஆண் ஒட்டகையின் மீது எவரும் சவாரி செய்ய மாட்டார்கள். அதன் முடிகளை வெட்ட மாட்டார்கள். அதை ஒட்டக மந்தையினுள் பெண் ஒட்டகைகளுடன் இணைவதற்காக அதை சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். இதைத் தவிர வேறு எதற்காகவும் அதனை பயன்படுத்தமாட்டார்கள்.
இதுபற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:
பஹீரா. ஸாம்பா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தியவை அல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவைகள் அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் 5 : 103)
அன்றி, அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) “இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்களுடைய பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு” (அப்போது பெண்களும் புசிக்கலாம்.) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைவரையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 6 : 139)
இவையல்லாத வேறு பல விளக்கங்களும் இக்கால்நடைகளைப் பற்றி விவரிக்கப்படுகிறது. (இப்னு ஹிஷாம்)
இந்தக் கால்நடைகள் அனைத்தும் அவர்களின் தெய்வங்களுக்குரியது என்ற ஸயீது இப்னுல் முஸய்யப் அவர்களின் கருத்தை முன்னர் பார்த்தோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் அம்ரு இப்னு ஆமிர் இப்னு லுஹய் அல் குஜாயியைப் பார்த்தேன். அவன் தனது குடலை நரக நெருப்பில் இழுத்துக் கொண்டிருக்கின்றான்.” (ஸஹீஹுல் புகாரி)
ஏனெனில், நபி இப்றாஹீம் (அலை) அவர்களுடைய நேரான மார்க்கத்தை சீர்குலைத்த முதல் வழிகேடன் அவனே. அவன்தான் சிலைகளை நிறுவினான். ஸாயிபா, பஹீரா, வஸீலா, ஹாம் ஆகிய பெயர்களில் சிலைகளுக்குக் கால்நடைகளை நேர்ச்சை செய்யும் பழக்கங்களை உருவாக்கினான். (ஃபத்ஹுல் பாரி)
அரபியர்கள் செய்த இவ்வாறான செயல்கள் அனைத்துக்கும் காரணம் என்னவெனில், அச்சிலைகள் தங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கிவைக்கும்; அவனிடத்தில் தங்களை சேர்த்து வைக்கும்; தங்களுக்காக அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்யும் என நம்பிக்கை கொண்டிருந்ததுதான்.