எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.
ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: அகழ் போரின் போது நபி (ஸல்) அவர்களை உமர் (ரழி) சந்தித்து குறைஷிகளை ஏசினார். பிறகு “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையப் போகிறது. ஆனால், இன்னும் நான் அஸ்ர் தொழுகவில்லை” என்றார். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நானும் அஸ்ரைத் தொழவில்லை” என்றார்கள். பின்பு நாங்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் ‘புத்ஹான்’ என்ற இடத்திற்குச் சென்று உழுச் செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ரை முதலில் தொழுது பிறகு மக்ரிப் தொழுகையைத் தொழுதோம். (ஸஹீஹுல் புகாரி)
தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரழி) கூறுகிறார்கள்:
“யா அல்லாஹ்! இவர்களின் இல்லங்களையும், புதைக்குழிகளையும் நெருப்பால் நிரப்புவாயாக! எங்களை சூரியன் மறையும் வரை அஸர் தொழவிடாமல் இவர்கள் தடுத்தனர்” என்று நபி (ஸல்) அவர்கள் வேண்டினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
முஸ்னது அஹ்மது மற்றும் முஸ்னது ஷாபிஈ ஆகிய நூற்களில் லுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்தனர் என்றும் வந்துள்ளது. ஸஹீஹுல் புகாரியில் அஸ்ர் தொழுகை மட்டும் என்று கூறப்பட்டுள்ளதை இதற்கு முன்பு பார்த்தோம். இதற்கு விளக்கத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
“அகழ்ப்போர் பல நாட்களாக நடந்தது. அதில் சில நாட்களில் அஸ்ர் மட்டும் தொழாமல் இருந்திருக்கலாம். சில நாட்களில் மற்றும் பல தொழுகைகளையும் தொழ முடியாமல் ஆகியிருக்கலாம்.” (ஷரஹ் முஸ்லிம்)
இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில்: எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது.