பக்கம் - 339 -
நயவஞ்சகர்களும் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும் “அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றையும் வாக்களிக்கவில்லை.” என்று கூறுகின்றனர். அவர்களில் ஒரு கூட்டத்தினர் (மதீனாவாசிகளை நோக்கி) “யஸ்ரிப் வாசிகளே! (எதிரிகள் முன்) உங்களால் நிற்க முடியாது. ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியதையும், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவர்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இல்லாமல் இருந்தும் “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் அபாயகரமான நிலைமையில் இருக்கின்றன” என்று கூறி (போர்க்களத்திலிருந்து சென்றுவிட நமது) நபியிடம் அனுமதி கோரியதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் (போரிலிருந்து) தப்பி ஓடிவிடுவதைத் தவிர (வேறொன்றையும்) விரும்பவில்லை. (அல்குர்ஆன் 33:13)

குரைளா யூதர்கள் தங்களுக்கு மோசடி செய்து விட்டனர் என்ற செய்தி கிடைத்ததும் நபி (ஸல்) அவர்கள் தங்களது முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு நீண்ட நேரம் சாய்ந்து படுத்து சிந்தனையில் ஆழ்ந்தார்கள். இங்கு முஸ்லிம்கள் கடும் சோதனைக்கும், துன்பத்திற்கும் ஆளாகினர். பிறகு நபியவர்கள் எழுந்து “அல்லாஹ் மிகப் பெரியவன். முஸ்லிம்களே! அல்லாஹ் வுடைய வெற்றியும் உதவியும் உங்களுக்குண்டென நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்கள். இதற்குப் பின் நிலைமையைச் சமாளிப்பதற்கு நபியவர்கள் திட்டங்களைத் தீட்டினார்கள். அதில் முதல் கட்டமாக மதீனாவிலுள்ள பெண்களும் சிறுவர்களும் தாக்கப்படாமல் இருப்பதற்காக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உடனடியாக சில வீரர்களை அனுப்பினார்கள்.

இது மட்டுமல்லாமல், எதிர்த்தரப்பு படையில் இருக்கும் குறைஷி அல்லாத கூட்டத்தனரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவர்களைப் போர்முனையிலிருந்து திருப்பி விடலாம். பிறகு முஸ்லிம்களின் பரம எதிரியான குறைஷிகளைப் போர்க்களத்தில் ஒரு கை பார்த்துவிடலாம் என்று எண்ணி, இது குறித்து அன்சாரிகளின் தலைவர்களான ஸஅது இப்னு முஆத், ஸஅது இப்னு உபாதா (ரழி) ஆகிய இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். “எதிரிப் படையிலுள்ள கத்ஃபான் குலத் தலைவர்களான உயைனா இப்னு ஹிஸ்ன், ஹாரிஸ் இப்னு அவ்ஃப் ஆகியோருக்கு தூதனுப்பி மதீனாவின் விளைச்சல்களில் மூன்றில் ஒரு பகுதியை உங்களுக்குத் தருகிறோம், நீங்கள் எங்களுடன் சண்டையிடுவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கேட்போமா? என்று நபி (ஸல்) ஆலோசனை கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும் “நபியே! நீங்கள் கூறும் இந்த ஆலோசனை அல்லாஹ்வின் கட்டளையாக இருந்தால் நாங்கள் அதற்குக் கட்டுப்படுகிறோம். அதே சமயம் இது எங்களின் நலனுக்காக நீங்கள் செய்வதாக இருந்தால் நிச்சயம் நாங்கள் அதனை விரும்பவில்லை. காரணம், மதீனாவில் விளையும் பழங்களை நாங்கள் விற்றாலோ அல்லது விருந்தளித்தாலோ மட்டுமே கத்ஃபான் குலத்தினர் உண்ண முடியும். இதைத் தவிர வேறு வழியில் மதீனாவின் பழங்களை அவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. நாங்கள் இஸ்லாமை ஏற்பதற்கு முன்பே இந்நிலையென்றால், இன்று அல்லாஹ் எங்களை இஸ்லாமின் மூலம் கண்ணியப்படுத்தி எங்களுக்கு நேர்வழியையும் தந்துவிட்டான். இப்போது பணிந்து நாங்கள் எங்களது செல்வங்களை அவர்களுக்குக் கொடுப்பதா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வாளைத் தவிர வேறு எதையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுக்க மாட்டோம். (அதாவது பணிய மாட்டோம்) இறுதிவரை போரிடுவோம்” என்று அவ்விருவரும் கூறினார்கள். இவ்விருவரின் கருத்தையும் ஏற்றுக் கொண்ட நபியவர்கள் “அரபிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து உங்களைத் தாக்குகிறார்களே என்ற நிலை கருதி உங்களின் நன்மைக்காக இந்த ஆலோசனையை முன் வைத்தேன்” என்று விளக்கினார்கள்.