பனூ குரைளா போர்
பனூ குரைளா என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.
அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து “என்ன நீங்கள் உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டீர்களா? நிச்சயமாக வானவர்கள் தங்களின் ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை. நான் இப்போதுதான் எதிரிகளை விரட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப் புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை அசைக்கிறேன். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வானவர்களின் ஒரு கூட்டத்துடன் புறப்பட்டார்.
நபி (ஸல்) அவர்கள் ஒருவரை அனுப்பி மக்களுக்கு மத்தியில் அறிவிக்கக் கூறினார்கள்:
“யார் கட்டளையைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவர் அஸ்ர் தொழுகையை குரைளாவனரிடம் சென்றுதான் தொழ வேண்டும்” (அதாவது உடனடியாக இங்கிருந்து குரைளாவினரை நோக்கி புறப்பட வேண்டும்) என்று கூறினார்கள். மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூமை பொறுப்பாளராக நியமித்துவிட்டு நபியவர்கள் புறப்பட்டார்கள். போர்க் கொடியை அலீயிடம் வழங்கி அவரை அவசரமாக முன்கூட்டி அனுப்பி வைத்தார்கள். அலீ (ரழி) படையுடன் குரைழாவினன் கோட்டையைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்த யூதர்கள், அலீ (ரழி) காதில் படும்படியாக நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக ஏசினர்.
நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளின் சில குறிப்பிட்ட நபர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு குரைளாவினன் ஒரு கிணற்றுக்கு அருகில் வந்து இறங்கினார்கள். அக்கிணற்றுக்கு ‘அன்னா கிணறு’ என்று கூறப்படும்.
மீதமுள்ள முஸ்லிம்கள் உடனடியாக குரைளாவினரை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தவுடன்: “அஸ்ர் தொழுகையை நேரம் தவறுவதற்குள் வழியிலேயே தொழுது விடுவதா அல்லது நேரம் தவறினாலும் குரைளா சென்று தொழுவதா” என அவர்களுக்கு மத்தியில் இரு கருத்துகள் நிலவின. மதீனாவிலேயே அஸ்ர் தொழுது விட்டு புறப்படலாமென யாரும் தாமதித்துவிடக் கூடாது என்ற கருத்தில்தான் நபி (ஸல்) அவர்கள் குரைளா சென்று அஸ்ர் தொழ வேண்டுமென கூறினார்கள். தொழுகை நேரத்தைத் தவறவிடுவது நபியவர்களின் நோக்கமல்ல என்று கூறிவிட்டு சிலர் வழியிலேயே அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள் கூறியபடி குரைளா சென்று அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினர். அப்போது மக்ப் நேரமாக இருந்தது. இன்னும் தாமதமாக வந்து சேர்ந்த சிலர் இஷா நேரத்தில் அஸ்ர் தொழுதனர்.
நபி (ஸல்) அவர்கள் இரு கூட்டத்தார்களின் செயல்களைப் பற்றி ஏதும் கடிந்துகொள்ள வில்லை. இவ்வாறு இஸ்லாமியப் படை ஒன்றன்பின் ஒன்றாக மதீனாவிலிருந்து புறப்பட்டு நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தது. இஸ்லாமியப் படையில் மொத்தம் மூவாயிரம் வீரர்களும், முப்பது குதிரைகளும் இருந்தன. குரைளாவினன் கோட்டைகளைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். முஸ்லிம்களின் முற்றுகை கடுமையாக இருந்ததைக் கண்ட குரைளாவினன் தலைவன் கஅப் இப்னு அஸது தனது மக்களிடம் மூன்று கருத்துகளை முன் வைத்தான்.