பக்கம் - 365 -
அப்போதுதான் நபி (ஸல்) அங்கு வந்து இறைவனைப் புகழ்ந்து துதித்துவிட்டு “ஆயிஷாவே! உன்னைப் பற்றி எனக்கு இவ்வாறெல்லாம் செய்தி கிடைத்தது. நீ குற்றமற்றவளாக இருந்தால் அல்லாஹ் உன்னை அப்பழியிலிருந்து நிரபராதியாக ஆக்குவான் உண்மையில் நீ பாவம் செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள் அவனிடம் பாவமீட்சி பெற்றுக்கொள். ஏனெனில், நிச்சயமாக அடியாரின் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் பாவமீட்சிக் கோரினால் நிச்சயமாக அல்லாஹ் அவனது பாவங்களை மன்னித்து விடுவான்” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தையைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள் தனது அழுகையை நிறுத்தி, பெற்றோர் ஒவ்வொருவரிடமும் நபி (ஸல்) அவர்களுக்குப் பதில் அளிக்குமாறு கூறினார்கள். ஆனால், அவர்களுக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியவில்லை. அப்போது ஆயிஷா (ரழி) “நான் நிலைமை என்னவென்று நன்கு தெரிந்து கொண்டேன். இந்தச் செய்தியை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டதால் அது உங்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்து விட்டது. அது உண்மை என்று நீங்கள் நம்பியும் விட்டீர்கள்! அல்லாஹ்வுக்குத் தெரியும் நான் குற்றமற்றவள் என்று! நான் உங்களுக்கு என்னைப் பற்றி குற்றமற்றவள் என்று கூறினால் நீங்கள் அது விஷயத்தில் என்னை நம்ப மாட்டீர்கள்! நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், நான் இவ்விஷயத்தை ஒப்புக் கொண்டால் மட்டும் நீங்கள் என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எனக்கும் உங்களுக்கும் யூஸுஃப் நபியின் தந்தை யஅகூப் (அலை) கூறிய,
ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன்”. (அல்குர்ஆன் 12:18)
என்ற வார்த்தையைத் தவிர வேறு வார்த்தையைக் கூற எனக்குத் தெரியவில்லை.
பின்பு தன் முகத்தைத் திருப்பி சாய்ந்து படுத்துக் கொண்டார்கள். அதே நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி அருளப்பட்டது. அது முடிந்தவுடன் நபி (ஸல்) சிரித்தவர்களாக “ஆயிஷாவே! அல்லாஹ் உன்னை நிரபராதி ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரழி) அவர்களின் தாயார் “ஆயிஷாவே! நபியிடம் எழுந்து செல்” என்று கூறினார்கள். அதற்கு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவர்களிடம் எழுந்து செல்ல மாட்டேன். மேலும் நான் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் புகழவுமாட்டேன்” என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரழி), தான் நிரபராதி என்பதாலும், தன்னை நபி (ஸல்) நேசிக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிந்திருந்ததாலும் இவ்வாறு கூறினார்கள்.
இந்தப் பொய்யான சம்பவம் தொடர்பாக அல்லாஹ் குர்ஆனின் 24 ஆம் அத்தியாயத்தில் 11லிருந்து 20 வரை உள்ள வசனங்களை இறக்கினான்.
இந்த சம்பவத்தை இட்டுகட்டியவர்களில் - மிஸ்தஹ், ஹஸ்ஸான், ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், இவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்த அப்துல்லாஹ் இப்னு உபையை அடிக்கவில்லை. இவன்தான் இதற்கு மூல காரணமாவான். இவனைத் தண்டிக்காமல் விட்டதற்குக் காரணம் என்னவெனில், உலகத்தில் யார் மீது தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு விடுகிறதோ அவர்கள் மறுமையில் தண்டிக்கப்பட மாட்டார்கள். ஆனால், மறுமையில் மகத்தான தண்டனை இவனுக்கு உண்டென அல்லாஹ் குர்ஆனில் இவனைப் பற்றி எச்சரிக்கை செய்து விட்டான். எனவே, இவ்வுலகில் இவனுக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை அல்லது எந்த நலனைக் கருதி நபி (ஸல்) இவனை முன்பு கொலை செய்யாமல் விட்டுவிட்டார்களோ அதே நலனைக் கருதி இந்த தண்டனையையும் நிறைவேற்றாமல் விட்டிருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)