பக்கம் - 367 -
2) ‘அலீ இப்னு அபூதாலிப்’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ஷஅபான் மாதத்தில் ‘ஃபதக்’ எனும் ஊரில் உள்ள ஸஅது இப்னு பக்ரு கிளையினரிடம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களை 200 வீரர்களுடன் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். இக்கிளையினரில் ஒரு பிரிவினர் கைபரிலுள்ள யூதர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றனர் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதால் அவர்கள் இப்படையை அனுப்பினார்கள். அலீ (ரழி) இரவில் பயணம் செய்வதும், பகலில் பதுங்கிக் கொள்வதுமாக தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு நாள் அலீ (ரழி) அக்கூட்டத்தைச் சேர்ந்த ஒற்றன் ஒருவனைப் பிடித்தார்கள். “யூதப் பகுதியான கைபரில் விளையும் பேரீத்தம் பழங்களில் ஒரு பெரும் பங்கை யூதர்கள் ஸஅது இப்னு பக்ர் கிளையினருக்கு வழங்கினால், அக்கிளையினர் யூதர்களுக்கு உதவிடுவார்கள்” என்பதைத் தெரிவிப்பதற்காகத் தன்னை அனுப்பினர் என்பதை, பிடிப்பட்ட ஒற்றன் ஒப்புக் கொண்டது மட்டுமின்றி, அக்கிளையினர் குழுமியிருந்த இடத்தையும் காட்டிக் கொடுத்தான். அவர்கள் மீது அலீ (ரழி) போர் தொடுத்து 500 ஒட்டகைகளையும், 2000 ஆடுகளையும் கைப்பற்றினார். அக்கிளையினர் அங்கிருந்து தப்பித்து ‘ளுவுன்’ என்ற இடத்திற்கு ஓடிவிட்டனர். வபர் இப்னு உலைம் என்பவன் இக்கிளையினருக்குத் தலைமை தாங்கி வந்திருந்தான்.

3) ‘அபூபக்ர் (அ) ஜைது’ படைப் பிரிவு: ஹிஜ்ரி 6, ரமழான் மாதத்தில் ‘வாதில் குரா’ என்ற இடத்திற்கு அபூபக்ர் (ரழி) அல்லது ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். அங்கு வசிக்கும் ஃபஜாரா கிளையினரின் ஒரு பிரிவினர் நபியவர்களைக் கொலை செய்ய வஞ்சகமாகத் திட்டமிடுகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததை முன்னிட்டு இப்படையை அனுப்பப்பட்டது.

ஸலமா இப்னு அக்வஉ (ரழி) கூறுகிறார்: நானும் இப்படையில் சென்றிருந்தேன். நாங்கள் ஸுப்ஹு தொழுகையை முடித்த பின் அவர்களைத் தாக்கினோம். பிறகு அவர்களின் கிணற்றுக்கு அருகில் நாங்கள் ஒன்று சேர்ந்தோம். இந்தத் தாக்குதலில் எதிரிகளில் பலர் கொல்லப்பட்டனர். சிலர் தங்கள் பிள்ளைகளுடன் மலையை நோக்கி ஓடுவதைப் பார்த்தேன். அவர்கள் தப்பித்து மலையில் ஏறிவிடக் கூடாது என்பதற்காக வேகமாக ஓர் அம்பை எடுத்து அவர்களுக்கும் மலைக்கும் நடுவில் எறிந்தேன் அம்பைப் பார்த்த அவர்கள் நின்று விட்டனர். அக்கூட்டத்தில் பெண் ஒருத்தி இருந்தாள் அவளது பெயர் உம்மு கிர்ஃபர் அவள் தோல் ஆடை அணிந்திருந்தாள் அவளுக்கு மிக அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். நான் அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரழி) எனக்கு அவளின் மகளைப் பரிசாக அளித்தார்கள். ஆனால், நான் அவளைத் தொடவில்லை. பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற பின் நபியவர்கள் அவளை என்னிடமிருந்து பெற்று மக்காவிற்கு அனுப்பினார்கள். அவளை குறைஷிகளிடம் கொடுத்து, அங்கு கைதிகளாக இருந்த முஸ்லிம்களை விடுதலை செய்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

உம்மு கிர்ஃபா என்ற இப்பெண் ஒரு பெரும் தீயவளாக இருந்தாள். இவள் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக தனது குடும்பத்திலிருந்து முப்பது குதிரை வீரர்களைத் தயார் செய்திருந்தாள். அந்த முப்பது நபர்களும் கொல்லப்பட்டனர். அவளும் உரிய தண்டனையைப் பெற்றாள்.

4) ‘குர்ஸ்’ படைப் பிரிவு: உகல் மற்றும் உரைனாவைச் சேர்ந்த ஒரு கூட்டம் மதீனாவுக்கு வந்து தங்களை முஸ்லிம்கள் என்று வெளிப்படுத்திக் கொண்டனர். மதீனாவில் தங்கிய அவர்களுக்கு அங்குள்ள தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளாததின் காரணமாக நோயுற்றார்கள். நபி (ஸல்) இக்கூட்டத்தினரை முஸ்லிம்களின் ஒட்டகங்கள் மேயும் இடங்களுக்குச் சென்று அங்கு தங்கி அதன் பாலையும், சிறுநீரையும் குடிக்கும்படி கூறினார்கள். அவ்வாறு செய்து அவர்கள் உடல் சுகமடைந்தனர். பிறகு அந்தக் கூட்டத்தினர் நபி (ஸல்) அவர்களின் இடையரைக் கொலை செய்துவிட்டு அங்குள்ள ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றதுடன் இஸ்லாமிய மார்க்கத்தையும் புறக்கணித்தனர். இவர்களைத் தேடிப் பிடித்துவர நபி (ஸல்) 20 தோழர்களை குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபஹ் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் அனுப்பினார்கள்.