பக்கம் - 383 -
உமர் (ரழி): அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இருப்பது உண்மைதானே?
நபி (ஸல்): ஆம்! (நாம் சத்தியத்தில் இருக்கிறோம். அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றார்கள்.)
உமர் (ரழி): நம்மில் கொல்லப்பட்டவர்கள் சுவனத்திலும், அவர்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்திலும் இருப்பார்கள். சரிதானே?
நபி (ஸல்): ஆம்! (நம்மில் கொல்லப்பட்டவர்கள் சுவனத்தில் இருக்கின்றனர், அவர்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்தில் இருக்கின்றனர்).
உமர் (ரழி): அப்படியிருக்க நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் விட்டுக்கொடுத்து தாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் நடுவில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் இந்நிலையில் நாம் திரும்பிச் செல்வது எவ்வாறு நியாயமாகும்?
நபி (ஸல்): கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர். என்னால் அவனுக்கு மாறு செய்ய முடியாது. அவன் எனக்கு உதவி செய்வான், ஒருக்காலும் அவன் என்னைக் கைவிட மாட்டான்.
உமர் (ரழி): அல்லாஹ்வின் இல்லத்திற்கு வருவோம் அதைத் தவாஃப் செய்வோம் என்று நீங்கள் எங்களுக்குக் கூறவில்லையா?
நபி (ஸல்): ஆம்! நான் கூறினேன். ஆனால் இந்த ஆண்டே வருவோம் என்று கூறினேனா?
உமர் (ரழி): இல்லை! அவ்வாறு கூறவில்லை.
நபி (ஸல்): நிச்சயமாக நீ கஅபாவிற்குச் சென்று அதை தவாஃப் செய்வாய்.
பின்பு உமர் (ரழி) கோபத்துடன் அபூபக்ர் (ரழி) அவர்களிடம் வந்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விகளைக் கேட்க, அபூபக்ர் (ரழி) அவர்களும் நபியவர்கள் கூறியவாறே உமருக்குப் பதில் கூறினார்கள். மேலும் “உமரே! நீ மரணிக்கும் வரை நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பிடித்துக்கொள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் உண்மையில்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு,
(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம். (அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக!) (அல்குர்ஆன் 48: 1,2)
என்ற வசனம் அருளப்பட்டது. உடன் நபியவர்கள் ஒருவரை அனுப்பி அவ்வசனத்தை உமர் (ரழி) அவர்களிடம் ஓதிக்காட்டும்படி கூறினார்கள். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்த உமர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியான விஷயமா?” என்று கேட்டார்கள். நபியவர்கள் “ஆம்!” என்றவுடன் உமர் (ரழி) மனமகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்.
பின்பு, தான் செய்த காரியத்தை எண்ணி உமர் (ரழி) மிகவும் கவலையடைந்தார்கள். இதைப் பற்றி உமரே இவ்வாறு கூறினார்கள்: “நான் எனது செயலை எண்ணி வருந்தி அதற்கு பரிகாரமாக பல நற்செயல்களைச் செய்தேன் அன்றைய தினம் நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்து கொண்ட விதத்திற்காக எப்போதும் தர்மம் செய்து வந்தேன் நோன்பு வைத்து வந்தேன் தொழுது வந்தேன் அடிமைகளை உரிமையிட்டு வந்தேன் நான் நபி (ஸல்) அவர்களிடம் பேசிய பேச்சை எண்ணி பயந்து பல நன்மைகளைச் செய்தேன், நான் பேசிய பேச்சு நன்மையாக மாற வேண்டும் என்பதே என் ஆதரவாக இருந்தது.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு ஹிஷாம்)