பக்கம் - 387 -
நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாமை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்.
“வேதமுடையவர்களே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு யாதொன்றையும் இணைவைக்க மாட்டோம். அல்லாஹ்வை விடுத்து நம்மில் சிலர் சிலரைக் கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற நீங்களும் நாமும் ஒத்துக் கொண்ட விஷயத்திற்கு நீங்கள் வந்துவிடுங்கள். நீங்கள் இதைப் புறக்கணித்தால் நாங்கள் ‘முஸ்லிம்கள்’ என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருந்துவிடுங்கள்.” (அல்குர்ஆன் 3:64)
நீ (இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொள்ள) மறுத்துவிட்டால் உனது சமுதாயத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத கிறிஸ்துவர்களின் குற்றமும் உம்மையே சாரும். (தலாயிலுந்நுபுவ்வா, முஸ்தத்ரகுல் ஹாகிம்)
மாபெரும் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹமீதுல்லாஹ்விற்கு சில காலத்திற்கு முன் ஒரு கடிதம் கிடைத்தது. அக்கடிதம் இமாம் இப்னு கய்” (ரஹ்) குறிப்பிட்டிருக்கும் கடிதத்திற்கு முற்றிலும் ஒப்பாக இருக்கிறது. ஆனால். ஒரே ஒரு வார்த்தைதான் வித்தியாசமாக இருந்தது. மேலும், டாக்டர் ஹமீதுல்லாஹ் அவர்கள் அக்கடித்தை ஆராய்ச்சி செய்வதில் தனது பெரும் முயற்சியை செலவழித்ததுடன், அதிலுள்ள விஷயங்களைக் கண்டுபிடிப்பதற்கு பல அதிநவீன கருவிகளையும் பயன்படுத்தினார். அக்கடிதத்தைப் பற்றி தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதாவது:
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷிக்கு எழுதும் கடிதம். நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நிச்சயமாக நான் உமக்கு முன்பாக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன்தான் அரசன் அவன் மிகத் தூய்மையானவன் ஈடேற்றம் வழங்குபவன் பாதுகாவலன் கண்காணிப்பவன். நிச்சயமாக மர்யமின் மகன் ஈஸா (அலை) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரும், அவனது வார்த்தையுமாக இருக்கிறார். அவன்தான் அவ்வார்த்தையைப் பரிசுத்தமான பத்தினி மர்யமுக்கு அனுப்பினான். அவர் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரிலிருந்தும், அவனுடைய ஊதுதலில் இருந்தும் உண்டான ஈஸாவை தனது கர்ப்பத்தில் சுமந்தார். எவ்வாறு அல்லாஹ் ஆதமை தனது கையினால் விஷேசமாக படைத்தானோ அவ்வாறே ஈஸாவையும் படைத்தான்.
தனித்தவனான துணையற்ற அல்லாஹ்வின் பக்கம் உன்னை அழைக்கிறேன். அவனுக்கு வழிப்படுவதிலும் வணங்குவதிலும் நீ எனக்கு இசைந்து என்னை நீ பின்பற்ற வேண்டும் என்று நான் உன்னை அழைக்கிறேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன். மேலும், உம்மையும் உமது படையினரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். நான் நிச்சயமாக எடுத்துரைத்து விட்டேன். உனக்கு உபதேசம் செய்து விட்டேன். எனது அறிவுரையை ஏற்றுக் கொள். நேர்வழியைப் பின்பற்றியவர்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.”
(ஜாதுல் மஆது, “ரஸூலே அக்ரம் கீ ஸியாஸி ஜிந்தகி - டாக்டர் ஹமீதுல்லாஹ்”)