பக்கம் - 389 -
அல்லாஹ்வின் தூதரே! ஈஸாவைக் குறித்து தாங்கள் வரைந்த தங்களின் மடல் எனக்குக் கிடைத்தது. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! ஈஸாவும் நீங்கள் கூறியதைவிட பேரீத்தம் பழத்தின் நார் அளவுகூட அதிகமாகத் தன்னைப் பற்றிக் கூறியதில்லை. நிச்சயமாக ஈஸா நீங்கள் கூறியவாறுதான் (அல்லாஹ்வின் வார்த்தையால் படைக்கப்பட்டவர்). நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விஷயங்களை நாங்கள் அறிந்து கொண்டோம். உங்கள் தந்தையின் சகோதரன் மகனுக்கும், உங்களது தோழர்களுக்கும் விருந்தோம்பல் செய்தோம். நிச்சயமாக நீங்கள் உண்மையானவர் உண்மைப்படுத்தப்பட்டவர் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன் நான் உங்களிடமும் உங்களது தந்தையின் சகோதரன் மகனிடமும் சத்திய வாக்குறுதி செய்து கொள்கிறேன் அகிலத்தார்களின் இறைவனுக்கு அடிபணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்.”

ஜஅஃபர் (ரழி) அவர்களையும் அவர்களுடன் இருக்கும் முஹாஜிர்களையும் தன்னிடம் திரும்ப அனுப்புமாறு நபி (ஸல்) நஜ்ஜாஷியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் அம்ர் இப்னு உமய்யா ழம்யுடன் அவர்கள் அனைவரையும் இரு கப்பல்களில் அனுப்பி வைத்தார். அம்ர், அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) கைபரில் இருந்தார்கள். (இப்னு ஹிஷாம்)

தபூக் போர் நடைபெற்ற பின் ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் இந்த நஜ்ஜாஷி மன்னர் இறந்தார். அவர் இறந்த தினத்திலேயே அவன் மரணச் செய்தியை நபி (ஸல்) மக்களுக்கு அறிவித்தார்கள். அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அவருக்குப் பின் மற்றொரு அரசர் அவரது அரியணையில் அமர்ந்தார். அவருக்கும் நபி (ஸல்) மற்றொரு கடிதம் எழுதினார்கள். ஆனால், அவர் இஸ்லாமைத் தழுவினாரா? இல்லையா? என்பது சரிவரத் தெரியவில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)

2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்

மிஸ்ரு (எகிப்து) மற்றும் இஸ்கந்தய்யா (அலெக்ஸாண்டியா)வின் மன்னரான ‘முகவ்கிஸ்’ என்றழைக்கப்படும் ஜுரைஜ் இப்னு மத்தாவிற்கு நபி (ஸல்) கடிதம் அனுப்பினார்கள்.

(ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

அக்கடிதத்தில்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.

நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். நீங்கள் புறக்கணித்து விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.

(“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.) (அல்குர்ஆன் 3:64) (ஜாதுல் மஆது)