பக்கம் - 396 -
அபூ ஸுஃப்யான் கூறுகிறார்: “எங்களை வெளியேற்றும்படி கூற நாங்கள் வெளியேற்றப் பட்டோம். நாங்கள் வெளியேறும் போது நான் என் தோழர்களிடம் கூறினேன்: ரோமர்களின் மன்னன்கூட அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு அபூ கபிஷாவின்” பேரனுடைய காரியம் உறுதியாகி விட்டது” என்று அபூஸுஃப்யான் கூறினார்.
அப்போதே அல்லாஹ்வின் தூதர் விஷயத்தில் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நான் நம்பிக்கையுடன் இருந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்கு இஸ்லாமை ஏற்க அருள் செய்தான் என்று அபூஸுஃப்யான் கூறினார். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் கடிதம் கைஸர் மன்னரிடம் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை ஏற்படுத்தியது என்பதை அபூஸுஃப்யான் நேரில் பார்த்து புரிந்து கொண்டதையே இவ்வாறு கூறினார்.
மேலும், நபி (ஸல்) அவர்களின் தூதுவர் திஹ்யாவிற்கு மன்னர் கைஸர் பெரும் செல்வத்தையும் உயர்ந்த ஆடைகளையும் கொடுத்து கௌரவித்தார். அந்தளவுக்கு நபி (ஸல்) அவர்களின் கடிதம் அவரிடம் மாறுதலை ஏற்படுத்தியது. திஹ்யா (ரழி) திரும்ப மதீனா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வழியில் ‘ஸ்மா’ என்ற இடத்தில் ஜுதாம் கிளையைச் சேர்ந்த சிலர் அவன் பொருட்கள் அனைத்தையும் வழிப்பறி செய்து கொண்டனர். பின்பு மதீனா வந்து சேர்ந்த திஹ்யா (தனது இல்லம் செல்வதற்கு முன்) நேராக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறினார். உடனே நபியவர்கள் 500 வீரர்களை ஜைது இப்னு ஹாரிஸாவின் தலைமையில்ஹிஸ்மாவை நோக்கி அனுப்பினார்கள். இந்த ‘ஸ்மா’ என்பது வாதில் குர்ராவை அடுத்துள்ள ஊராகும். அங்கு சென்ற ஜைது (ரழி) அவர்கள் ஜுதாம் கிளையினரைத் தாக்கி அதிகமானவர்களைக் கொன்றார்கள். பின்பு அக்கிளையினரின் கால்நடைகளையும் பெண்களையும் அழைத்துக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தார்கள். அதில் 1000 ஒட்டகங்களும், 5000 ஆடுகளும், கைதிகளில் பெண்கள் சிறுவர்களென 100 பேர்களும் இருந்தனர்.
ஏற்கனவே ஜுதாம் கிளையினர் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். எனவே, இக்கிளையினரின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான ஜைது இப்னு ஃபாஆ நபி (ஸல்) அவர்களிடம் இவ்வழக்கைக் கொண்டு வந்தார். இவரும், இவன் கிளையைச் சேர்ந்த மற்றும் சிலரும் இதற்கு முன்பே இஸ்லாமைத் தழுவியிருந்தனர். இவர்கள் தங்களது ஜுதாம் கிளையினர் திஹ்யாவை வழிப்பறி செய்த போது தங்களால் முடிந்தளவு திஹ்யாவைப் பாதுகாத்தனர். எனவே, நபியவர்கள் இவர்களின் கோரிக்கையை ஏற்று ஜைது இப்னு ஹாரிஸா கொண்டு வந்திருந்த பொருட்களையும் கைதிகளையும் திரும்பக் கொடுத்து விட்டார்கள்.
போர்களைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இந்நிகழ்ச்சியை ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அது தவறாகும். ஏனெனில், நபியவர்கள் கைஸர் மன்னருக்கு ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் கடிதம் அனுப்பினார்கள். எனவே, ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்தான் இச்சம்பவம் நடந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இப்னுல் கய்” (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.