பக்கம் - 399 -
8) ஓமன் நாட்டு அரசருக்குக் கடிதம்
நபியவர்கள் ஓமன் நாட்டு அரசர் ‘ஜைஃபர்’ மற்றும் அவரது சகோதரர் ‘அப்து“க்குக் கடிதம் அனுப்பினார்கள். அதன் வாசகமாவது:
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, அல் ஜுலந்தாவின் மகன்களான ஜைஃபர் மற்றும் அப்துக்கு எழுதுவது. நேர்வழியை பின்பற்றுபவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! நான் உங்களிருவருக்கும் இஸ்லாமிய அழைப்பு விடுக்கின்றேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள். நான் மக்கள் அனைவருக்கும் அனுப்பப் பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். உயிருடன் இருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்கும், அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுக்கு நிச்சயம் வேதனை உண்டு என்பதை அறிவிப்பதற்கும் அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியிருக்கின்றான். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.”
இக்கடிதத்தை அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கொண்டு சென்றார். இப்போது நாம் இந்த நிகழ்ச்சியை குறித்து அம்ர் (ரழி) கூறுவதைக் கேட்போம்.
“நான் ஓமன் சென்று முதலில் அப்தை சந்தித்தேன். ஏனெனில், அப்துதான் இருவரில் சாந்த குணமும் புத்திசாலித்தனமும் உடையவர். நான் அவரிடம் சென்று, நான் அல்லாஹ்வின் தூதரால் உமக்கும் உமது சகோதரருக்கும் அனுப்பப்பட்ட தூதுவனாவேன்” என்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். அதற்கவர் “எனது சகோதரர்தான் வயதிலும் ஆட்சியிலும் என்னைவிட முந்தியவர். எனவே, நான் உன்னை அவரிடம் அனுப்பி வைக்கிறேன். முதலில் அவர் உன் கடிதத்தை படிக்கட்டும் என்று கூறிவிட்டு “நீ எதன் பக்கம் அழைக்கிறாய்?” என்றார்.
அம்ர்: நான் உன்னை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் யாருமில்லை. அவனைத் தவிர வணங்கப்படும் அனைத்தையும் விட்டு நீர் விலகிக் கொள்ள வேண்டும். நிச்சயமாக முஹம்மது, அல்லாஹ்வின் அடிமை, அவனது தூதர் என்று நீர் சாட்சி கூறவேண்டும்.
அப்து: அம்ரே! நிச்சயமாக நீர் உனது கூட்டத்தினரின் தலைவருடைய மகன். உனது தந்தை என்ன செய்தார்? அவர் நாங்கள் பின்பற்றுவதற்குத் தகுதியானவர்தான்.
அம்ர்: முஹம்மதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் மரணித்து விட்டார். அவர் இஸ்லாமை ஏற்று நபி (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தியிருக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். (ஆனால் நடக்கவில்லை) நானும் எனது தந்தையின் கொள்கையில்தான் இருந்தேன். இறுதியாக அல்லாஹ் எனக்கு இஸ்லாமிய நேர்வழியைக் காட்டினான்.
அப்து: நீர் எப்போது அவரைப் பின்பற்ற ஆரம்பித்தாய்?
அம்ர்: சமீபத்தில் தான்.
அப்து: நீர் எங்கிருக்கும் போது இஸ்லாமை ஏற்றுக் கொண்டாய்?
அம்ர்: நான் நஜ்ஜாஷியிடமிருக்கும் போது இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன். அவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு விட்டார்.
அப்து: அப்போது அவரது கூட்டத்தினர் அவன் ஆட்சிக்கு என்ன செய்தனர்?
அம்ர்: அவரது ஆட்சியை ஏற்று அவரைப் பின்பற்றியே நடந்தனர்.
அப்து: அவைத் தலைவர்களும் பாதிரிகளுமா அவரைப் பின்பற்றினார்கள்?
அம்ர்: ஆம்!