பக்கம் - 4 -
அரபிய தீபகற்பத்தின் எல்லைகள் பெயர் பெற்ற பல கண்டங்களுக்கு நடுவில் அமைந்திருக்கின்றன. அவை கடற்பரப்புகள், சமவெளிகள் மூலம் அந்த கண்டங்களுடன் இணைந்திருக்கின்றன. அதன் வடமேற்குப் பகுதி ஆப்பிரிக்கா கண்டத்துடனும், வடகிழக்குப் பகுதி ஐரோப்பா கண்டத்துடனும், கிழக்குப் பகுதி மத்திய ஆசிரியா, தெற்கு ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளுடனும் இணைந்துள்ளது. அவ்வாறே, ஒவ்வொரு கண்டமும் கடல் மார்க்கமாக அரபிய தீபகற்பத்துடன் இணைகிறது. அக்கண்டங்களிலிருந்து வரும் கப்பல்கள் அரபிய தீபகற்பத்தின் துறைமுகங்களில் தங்கிச் செல்கின்றன.
இப்புவியியல் அமைப்பின் காரணமாக, தெற்கு-வடக்கு பகுதிகள் மக்கள் வந்து ஒதுங்கும் இடமாகவும், வியாபாரம், பண்பாடு, சமயம் மற்றும் கலைகளின் பரிமாற்ற மையமாகவும் திகழ்ந்தன.
அரபிய சமுதாயங்கள்
வரலாற்றாசிரியர்கள் அரபிய சமுதாயத்தை வமிசாவளி அடிப்படையில் மூன்றாக பிரிக்கின்றனர்.
1) அல் அரபுல் பாயிதா
இவர்கள் பண்டைக் கால அரபியர்களான ஆது, ஸமூது, தஸ்மு, ஜதீஸ், இம்லாக், உமைம், ஜுர்ஹும், ஹழூர், வபார், அபீல், ஜாஸிம், ஹழ்ர மவ்த் ஆகிய வமிசத்தினர் ஆவர். முதல் வகையைச் சேர்ந்த இவர்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டதால் இவர்களுடைய வரலாற்று குறிப்புகள் ஏதும் தெரியவில்லை.
2) அல் அரபுல் ஆபா
இவர்கள் எஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தானின் சந்ததியினர் ஆவர். கஹ்தான் வமிச அரபியர் என்றும் இவர்களை அழைக்கப்படும்.
3) அல் அரபுல் முஸ்தஃபா
இவர்கள் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினராவர். இவர்களை அத்னான் வமிச அரபிகள் என்றும் அழைக்கப்படும்.
மேற்கூறப்பட்ட அல் அரபுல் ஆபா என்பவர்கள் கஹ்தான் வமிசத்தில் வந்த யமன் வாசிகள். இவர்களது கோத்திரங்கள் ஸபா இப்னு யஷ்ஜுப் இப்னு யஃருப் இப்னு கஹ்தான் என்பவரின் வழி வந்தவையாகும். இந்த கோத்திரங்களில் 1) ஹிம்யர் இப்னு ஸபா, 2) கஹ்லான் இப்னு ஸபா என்ற இரண்டு கோத்திரத்தினர் மட்டும் பிரபலமானவர்கள். ஹிம்யர், கஹ்லான் இருவரைத் தவிர ஸபாவுக்கு பதினொன்று அல்லது பதினான்கு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கும் அவர்களது வழி வந்தவர்களுக்கும் ‘ஸபா வமிசத்தினர்’ என்றே கூறப்பட்டது. அவர்களுக்கென தனிப் பெயர் கொண்ட கோத்திரங்கள் ஏதும் உருவாகவில்லை.
அ) ஹிம்யர் கோத்திரமும் அதன் உட்பிரிவுகளும்
1) குழாஆ: பஹ்ராஃ, பலிய்ம், அல்கைன், கல்ப், உத்ரா, வபரா ஆகிய குடும்பத்தினர் குழாஆவிலிருந்து உருவானவர்கள்.
2) ஸகாஸிக்: இவர்கள் ஜைது இப்னு வாம்லா இப்னு ஹிம்யர் என்பவரின் சந்ததியினர் ஆவர். இதில் ஹிம்யரின் பேரரான ஜைது என்பவர் ‘ஸகாஸிக்’ என்ற புனைப் பெயரால் அழைக்கப்பட்டார். (பின்னால் கூறப்படவுள்ள கஹ்லான் வம்சத்தில் தோன்றிய கின்தா என்ற பிரிவில் கூறப்படும் ஸகாஸிக் என்பவர் வேறு. இங்கு கூறப்பட்டுள்ள ஜைது ஸகாஸிக் என்பவர் வேறு.)