பக்கம் - 402 -
அவர் என்னிடம் “நீ எனக்குக் கொடுத்த அழைப்பு விஷயமாக யோசித்துப் பார்த்தேன். எனது கையிலுள்ள ஆட்சியை வேறு எவருக்கேனும் நான் கொடுத்து விட்டால் அரபிகளில் மிக பலவீனனாக கருதப்படுவேன். மேலும், அவரது வீரர்கள் இங்கு வரை வந்து சேரவும் முடியாது. அப்படி வந்தாலும் இதுவரை அவர்கள் சந்தித்திராத போரைச் சந்திக்க நேரிடும்” என்று கூறினான். இதனைக் கேட்டு “சரி! நாளை நான் இங்கிருந்து புறப்படுகிறேன்” என்றேன். நான் நாளை நிச்சயமாக புறப்பட்டு விடுவேன் என்பதை தெரிந்து கொண்டவுடன், அப்து தனது சகோதரரிடம் சென்று “நம்மால் அவரை வெல்ல முடியாது. அவர் யாருக்கெல்லாம் தூதனுப்பினாரோ அவர்கள் அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, நாமும் அவரை ஏற்றுக் கொள்வதுதான் நமக்கு நல்லது” என்று கூறினார்.
மறுநாள் விடிந்தபோது அப்தின் சகோதரர் என்னை வரவழைத்து அவரும் அவரது சகோதரரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, நபி (ஸல்) அவர்களை உண்மையாளராக ஏற்றுக் கொண்டார்கள். அங்கு ஜகாத் (ஏழை வரி) வசூலிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். என்னை எதிர்த்தவர்களை அடக்க எனக்கு உதவியும் செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முன் பின் தொடர்களை நாம் ஆராயும் போது இதுதான் இறுதியாக நபி (ஸல்) அனுப்பிய கடிதமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அநேகமாக மக்காவை வெற்றிக் கொண்ட பிறகு இக்கடிதம் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பல அண்டை நாட்டு மன்னர்களுக்கு இக்கடிதங்களின் மூலம் இஸ்லாமிய அழைப்பை எடுத்து வைத்தார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டனர் சிலர் மறுத்து விட்டனர். என்றாலும் நிராகரித்தவர்கள் எப்போதும் நபியவர்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தனர். நபியவர்களின் பெயரும் மார்க்கமும் அவர்களுக்கு நன்கு அறிமுகமாகி விட்டது.