பக்கம் - 404 -
நான் அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களை ஒன்று சேர்த்து அவற்றின் மீது சில கற்களை வைத்தேன். பிறகு, நபியவர்களும் நபித்தோழர்களும் தெரிந்து கொள்வதற்காக அதில் அடையாளமிட்டு விட்டு, எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்றேன். அவர்கள் ஒரு மலைக் கணவாயின் குறுகலான இடத்திற்குச் சென்று மதிய உணவு சாப்பிட அமர்ந்தனர். நான் ஒரு மலை உச்சியில் ஏறி நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் என்னைப் பார்த்து விட்டார்கள்.
அவர்களிலிருந்து நான்கு நபர்கள் என்னைப் பிடிக்க மலை மீதேறி வந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து “உங்களுக்கு நான் யாரென்று தெரியுமா? நான்தான் ஸலமா இப்னு அக்வா. நான் உங்களில் ஒருவரைக் கொல்ல நாடினால் நிச்சயம் கொன்றே தீருவேன். ஆனால், உங்களில் எவராலும் என்னைக் கொல்ல முடியாது” என்று கர்ஜித்தவுடன் அவர்கள் என்னருகே வர துணிவின்றி திரும்பி விட்டனர். இந்நிலையில் உதவிக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்து நபி (ஸல்) அவர்களின் குதிரை வீரர்கள் தோட்டங்களுக்கிடையே பாய்ந்து வருவதை நான் மலையில் இருந்து பார்த்தேன். அவர்களில் முதலாவதாக அக்ரம், அவரைத் தொடர்ந்து அபூ கதாதா, அவரைத் தொடர்ந்து மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஆகியோர் வந்து சேர்ந்தனர்.
முதலில் வந்த அக்ரமுக்கும், எதிரி அப்துர் ரஹ்மானுக்கும் சண்டை மூண்டது. அப்துர் ரஹ்மான் அக்ரமை ஈட்டியால் குத்திக் கொன்று விட்டான். அதிவிரைவில் அங்கு வந்து சேர்ந்த அபூ கதாதா (ரழி), அப்துர் ரஹ்மானை ஈட்டியால் குத்திக் கொலை செய்தார்.
சில வினாடிகளில் நடந்து முடிந்த இக்காட்சியைப் பார்த்து பயந்துபோன எதிரிகள் புறமுதுகுக் காட்டி ஓடினர். நான் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடலானேன். இறுதியில் சூரியன் மறைவதற்கு சற்று முன் ‘தூகரத்’ என்ற தண்ணீருள்ள பள்ளத்தாக்கை நோக்கி தண்ணீர் குடிக்கச் சென்றனர். அவர்கள் மிக தாகித்தவர்களாக இருந்தனர். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க விடாமல் நான் அங்கிருந்தும் அவர்களை விரட்டினேன்.
இந்நிலையில் நபியவர்களும், அவர்களது படையும் இஷா நேரத்தில் என்னை வந்தடைந்தனர். நான் “அல்லாஹ்வின் தூதரே! இக்கூட்டத்தினர் மிகுந்த தாகித்தவர்களாக இருக்கின்றனர். என்னுடன் 100 வீரர்களை அனுப்புங்கள். நான் அவர்களிடம் இருக்கும் குதிரைகள் அனைத்தையும் அவற்றின் கடிவாளங்களுடன் பறித்துக் கொண்டு, அவர்களையும் கழுத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உங்களிடம் நிறுத்துகிறேன்” என்றேன். அதற்கு நபி (ஸல்), “அக்வாவின் மகனே! நீ நமது உடைமைகளைப் பெற்றுக் கொண்டாய். எனவே, சற்று கருணைக் காட்டு” என்று கூறிவிட்டு “இப்போது அக்கூட்டத்தினர் கத்ஃபான் கிளையினரிடம் விருந்து சாப்பிடுகின்றனர்” என்று கூறினார்கள்.
நபியவர்கள் இந்நிகழ்ச்சியைப் பற்றி விமர்சிக்கும் போது “இன்றைய நமது குதிரை வீரர்களில் மிகச் சிறந்தவர் அபூ கதாதா, நமது காலாட்படைகளில் மிகச் சிறந்தவர் ஸலாமா” என்று கூறினார்கள்.
நபியவர்கள் அக்கூட்டத்தனரிடமிருந்து கிடைத்ததைப் பங்கிடும்போது அதிலிருந்து காலாட்படையைச் சேர்ந்தவருக்குக் கொடுக்கும் பங்கு, குதிரைப் படையைச் சேர்ந்தவருக்கு கொடுக்கும் பங்கு என இரண்டு பங்குகளை எனக்குக் கொடுத்தார்கள். நபி (ஸல்) மதீனாவிற்குத் திரும்பிச் செல்லும் போது தனது ஒட்டகை அழ்பா மீது தன்னுடன் என்னையும் அமரவைத்துக் கொண்டார்கள்.
நபி (ஸல்) மதீனாவிலிருந்து புறப்படும் முன், அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரழி) அவர்களைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். இப்போரின் கொடியை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) அவர்களிடம் கொடுத்தார்கள்.