பக்கம் - 409 -
அவர் “அல்லாஹ்வின் தூதரே! நாம் தங்கியிருக்கும் இந்த இடம் ‘நத்தா’ என்ற கோட்டைக்கு மிக அருகில் உள்ளது. கைபரின் போர் வீரர்கள் அனைவரும் அதில்தான் இருக்கின்றனர். அவர்கள் நமது செயல் திட்டங்களைத் தெரிந்து கொள்வார்கள். நம்மால் அவர்களது நடவடிக்கைகளை அறிந்து கொள்ள முடியாது. போன்போது அவர்களது அம்புகள் நாம் இருக்கும் இடம் வரை வரும். ஆனால், நமது அம்புகள் அவர்களைச் சென்றடையாது. இரவிலும் அவர்கள் நம்மைத் தாக்கக்கூடும். மேலும், இந்த இடம் பேரீச்சம் மரங்களின் மத்தியிலும், தாழ்வாகவும், சதுப்பு நிலமாகவும் உள்ளது. எனவே, எந்தவித இடையூறும் இல்லாத நல்ல இடத்தை நாம் முகாமிடுவதற்கு தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) “நீங்கள் நல்ல ஆலோசனை கூறினீர்கள்” என்று கூறிவிட்டு வேறோர் இடத்திற்கு தங்கள் முகாமை மாற்றிக் கொண்டார்கள்.
போருக்குத் தயாராகுதல், வெற்றிக்கான நற்செய்தி கூறுதல்
கைபருக்குள் நுழையுமுன் அன்றிரவு தங்கிய இடத்தில் “நிச்சயமாக நான் அல்லாஹ்வையும் ரஸூலையும் நேசிக்கும் ஒருவரிடம் நாளை கொடியைக் கொடுப்பேன். அவரை அல்லாஹ்வும் அவனது தூதரும் விரும்புகிறார்கள். அல்லாஹ் அவரது கையால் வெற்றியளிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களெல்லாம் காலை விடிந்தவுடன் நபியவர்களிடம் ஒன்று கூடினர். ஒவ்வொருவரும் அந்தக் கொடி தனக்கே கொடுக்கப்பட வேண்டுமென விரும்பினர். ஆனால் நபியவர்கள், “அலீ இப்னு அபீதாலிப்” எங்கே என்று கேட்டார்கள்.
மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண் வலியாக இருக்கிறது” என்றனர். நபி (ஸல்) “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார்கள். அலீ (ரழி) அழைத்து வரப்பட்ட போது அவன் கண்ணில் தனது உமிழ் நீரைத் தடவி அவருக்காக அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அல்லாஹ்வின் அருளால் முற்றிலும் அவர் குணமடைந்து விட்டார். அவரிடம் கொடியைக் கொடுத்த போது அவர் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களும் நம்மைப் போன்று ஆகும் வரை நான் போர் புரியட்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “நீ நிதானத்துடன் சென்று அவர்களது முற்றத்தில் இறங்கு. பின்பு அவர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கொடு. அவர்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையைப் பற்றி எடுத்துச் சொல். அல்லாஹ்வின் மீதாணையாக! உன் மூலமாக அல்லாஹ் ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உமக்குச் சிவந்த ஒட்டகங்கள் கிடைப்பதை விட மேலானதாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
போர் தொடங்குதல், நாயிம் கோட்டையை வெற்றி கொள்ளுதல்
யூதர்கள் முஸ்லிம்களின் படையைப் பார்த்து விட்டு தங்களது நகரத்துக்குள் ஓடி, கோட்டைக்குள் ஒளிந்து கொண்டனர். எதிரிகளைக் கண்டவுடன் தடுப்பு நடவடிக்கையிலும், போருக்கான ஆயத்தங்களிலும் ஈடுபடுவது இயற்கையே. முஸ்லிம்கள் தாக்குதல் நடத்திய முதல் கோட்டை ‘நாயிம்’ என்ற கோட்டையாகும். இது ‘மர்ஹப்’ என்ற வீரமிக்க யூத மன்னனின் கோட்டை. “மர்ஹப் 1000 நபர்களுக்குச் சமமானவன்” என்று கூறப்பட்டு வந்தது. மேலும் இக்கோட்டையில் ராணுவத்தினர் அதிகமாக இருந்தனர். இது இஸ்லாமியப் படையை எதிர்ப்பதற்கு வசதியானதாக, உறுதியானதாக இருந்தது. எனவே, பல வகையிலும் ஏற்றமானதாக விளங்கிய இவ்விடத்தில் இருந்துகொண்டு தாக்குதல் நடத்த யூதர்கள் முதலில் திட்டமிட்டனர்.