பக்கம் - 41 -
ஸஅது இப்னு அபீ வக்காஸ், அப்து இப்னு ஜம்ஆ ஆகிய இருவருக்கிடையே ஜம்ஆவின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு ஜம்ஆவின் விஷயத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மிகப் பிரபலமானதாகும். (பார்க்க ஸஹீஹுல் புகாரி 2053, 2218)
அரபியர்கள் தங்களது பிள்ளைகளுடன் கொண்டிருந்த தொடர்பு பலவகைகளில் அமைந்திருந்தது. அவர்களில் சிலர் தங்களது பிள்ளைகளை உயிருக்குயிராக நேசித்தனர். இதைப் பற்றி ஒரு கவிஞர் கூறுவதாவது:
“நமது குழந்தைகள் புவியில் தவழும் நமது ஈரக்குலைகளாவர்.”
தற்காலத்தைப் போன்றே, அக்காலத்தில் சிலர் பெண் பிள்ளைகளை அவமானமாகக் கருதியும் செலவுக்குப்பயந்தும் உயிருடன் புதைத்தனர். மேலும் சிலர், வறுமைக்கு அஞ்சி தங்களின் ஆண் குழந்தைகளையும் கொலை செய்தனர். (பார்க்க அல்குர்ஆன் (6 : 151), (16 : 58, 59), (17 : 31), (81 : 8) எனினும் இப்பழக்கம் பரவலாகக் காணப்படவில்லை. காரணம், எதிரிகளுடன் போரிடுவதற்கு அவர்களுக்கு ஆண் மக்களின் தேவை அதிகமாக இருந்தது.
அரபியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்குள் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தனர். குலப்பெருமைக்காகவே வாழவும் குலப்பெருமைக்காகவே சாகவும் துணிந்தனர். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் சமூகப் பித்தும் இனவெறியும் கொண்டு அலைந்தனர். இனவாதமும் இரத்த பந்தமான குடும்பப் பாரம்பரியமும் அவர்களது சமூக அமைப்பின் அஸ்திவாரமாகத் திகழ்ந்தன. அவர்களிடையே அறியப்பட்ட “உன் சகோதரன் அநியாயக்காரனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்” என்ற பழமொழியின் வெளிப்படையான பொருளுக்கேற்பவே அவர்கள் நடந்து வந்தார்கள். ஆனால், இஸ்லாம் இப்பழமொழிக்கு நேரடிப் பொருள் கொள்வதை மாற்றி அநியாயக் காரனை அவனுடைய அநியாயத்திலிருந்து தடுப்பதுதான் அவனுக்குச் செய்யும் உதவி என பொருள் தந்தது. எனினும், சில நேரங்களில் தலைமைத்துவத்தை அடைவதற்காக ஒரே வமிசத்தில் தோன்றியவர்கள் கூட தங்களுக்குள் வாளெடுத்துப் போரிட்டுக் கொண்டனர். எடுத்துக்காட்டாக அவ்ஸ்-கஸ்ரஜ், அப்ஸ்-துப்யான், பக்ர்-தக்லிப் கோத்திரத்தினர் தலைமைப் பதவிக்காக தங்களுக்குள் பகைவர்களாக இருந்தனர்.
பல மாறுபட்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பற்றவர்களாக பிரிந்து வாழ்ந்தனர். குடும்பச் சண்டையிலேயே தங்கள் ஆற்றல்களை இழந்தனர். சில நேரங்களில் அவர்கள் கொண்டிருந்த மத நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அவர்களுக்கிடையில் இருந்த பகைமையின் வேகத்தை குறைத்தன. மற்றும் சில நேரங்களில் சமாதான ஒப்பந்தங்களும் நட்பு ஒப்பந்தங்களும் பல மாறுபட்ட கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தின. புனித மாதங்கள் அவர்களுக்கு அருளாகவும் வாழ்வுக்கும் வியாபாரத்திற்கும் பேருதவியாகவும் அமைந்திருந்தன. புனித மாதங்களை அவர்கள் கண்ணியப்படுத்தி வந்ததால் அம்மாதங்களில் மட்டும் அவர்கள் முழு நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் இருந்தனர்.
அபூரஜா அல் உதாதி (ரழி) கூறுகிறார்: “ரஜபு மாதம் வந்துவிட்டால் நாங்கள் ஈட்டிகளின் கூர்மையை அகற்றும் மாதம் வந்துவிட்டது” என்று கூறி ஈட்டி, அம்புகளின் முனையை அகற்றிவிடுவோம். இவ்வாறே மற்ற புனித மாதங்களிலும் நடந்து கொள்வோம். (ஸஹீஹுல் புகாரி. ஃபத்ஹுல் பாரி)