பக்கம் - 413 -
இக்கோட்டையை வெற்றி கொள்வது முஸ்லிம்களுக்குச் சிரமமாகி விடவே, மின்ஜனிக் கருவிகளைப் பயன்படுத்தி கற்களை எறிந்து, கோட்டை மதில்களைத் தகர்க்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். முஸ்லிம் படையினரும் அவ்வாறே செய்தனர். கோட்டை மதில்களில் ஓட்டைகள் ஏற்பட்டதும் முஸ்லிம்கள் அதன் வழியாக கோட்டைக்குள் நுழைந்து யூதர்களுடன் கடும் போர் புரிந்தார்கள். இதில் யூதர்கள் பெரும் தோல்வியைத் தழுவினார்கள். மற்ற கோட்டைகளிலிருந்து தப்பித்துச் சென்றது போன்று இக்கோட்டையிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை. தங்களது மனைவி மக்களை விட்டுவிட்டு கோட்டையை விட்டு வெருண்டோடினர். இக்கோட்டையும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. கைபரின் முதல் பகுதியிலுள்ள அனைத்து பெரிய கோட்டைகளும் இத்துடன் முழுமையாக முஸ்லிம்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மற்ற சிறிய கோட்டைகளுக்குள் இருந்த யூதர்களும் அவற்றைக் காலி செய்துவிட்டு ஊரின் இரண்டாவது பகுதிக்கு வெருண்டோடினர்.
இரண்டாவது பகுதியை வெற்றி கொள்ளுதல்
நபியவர்கள் ‘நத்தா’ பகுதியிலுள்ள கோட்டைகளை முழுமையாக வெற்றி கொண்டபின் இரண்டாவது பகுதியான ‘கத்தீபா“விற்கு தங்களது படையுடன் வந்தார்கள். அங்கு யூதர்களின் கமூஸ், அபூ ஹுகைக் குடும்பத்தினர் கோட்டை, வத்தீஹ் சுலாலிம் ஆகிய மூன்று கோட்டைகள் இருந்தன. நத்தா பகுதியில் தோல்வியுற்று ஓடிய யூதர்களெல்லாம் இக்கோட்டைகளுக்குள் புகுந்து கொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் செய்த போர்களைப் பற்றி குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர்கள் இம்மூன்று கோட்டைகளை வெற்றி கொள்வதில் சண்டை ஏதும் நடந்ததா? இல்லையா? என்பதில் பல கருத்துகள் கூறுகிறார்கள். இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுவதிலிருந்து ‘கமூஸ்’ கோட்டையை மட்டும் பேச்சுவார்த்தையின்றி முழுமையாக சண்டையைக் கொண்டே வெற்றி கொள்ளப்பட்டது என்று தெரியவருகிறது.
“அல்வாகிதி’ (ரஹ்) என்ற வரலாற்று ஆசிரியர் கூறுவதாவது: இம்மூன்று கோட்டைகளும் பேச்சுவார்த்தைக்குப் பின்தான் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. ‘கமூஸ்’ கோட்டையைத் தவிர மற்ற இரண்டு கோட்டைகளும் எவ்வித சண்டையுமின்றி பேச்சுவார்த்தையைக் கொண்டே முஸ்லிம்களிடம் சரணடைந்தன. கமூஸ் கோட்டைக்கு மட்டும் முதலில் சண்டை நடந்தது. அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடந்து கைவசமாகி இருக்கலாம்.
ஆக, கருத்து எதுவாக இருப்பினும் நபி (ஸல்) இப்பகுதியை சுற்றி மட்டும் பதினான்கு நாட்கள் முற்றுகையிட்டிருந்தார்கள். யூதர்கள் கோட்டையை விட்டு வெளியேறவில்லை. இறுதியாக, நபி (ஸல்) அவர்கள் மின்ஜனிக் கருவிகளை நிறுவி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள். இதையறிந்த யூதர்கள் நிச்சயமாக நாம் அழிந்தே தீருவோம் என்பதை அறிந்துகொண்ட பின்புதான் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தார்கள்.
பேச்சுவார்த்தை
இப்னு அபூஹுகைக் என்ற யூதர் “நீங்கள் வாருங்கள் நான் உங்களிடம் பேசுகிறேன்” என்று நபியவர்களிடம் தூதனுப்பவே, அவர்களும் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டார்கள்.