பக்கம் - 418 -
அறிஞர் மன்சூர்ஃபூ (ரஹ்) கூறுவதாவது: “ஷஹீதானவர்கள் மொத்தம் பத்தொன்பது நபர்களே. நான் பல மூல நூல்களை ஆராய்ச்சி செய்து பார்த்த போது இப்போரில் கொல்லப்பட்டவர்களின் 23 பெயர்களைப் பார்த்தேன். அதாவது, அந்த 23 பெயர்களில் ஒரு பெயர் ‘தப்ரி“யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. இன்னும் ஒரு பெயர் ‘வாகிதி“யில் மட்டும் இடம் பெற்றுள்ளது. மற்றொருவர் சமைக்கப்பட்ட ஆட்டை சாப்பிட்டு மரணித்தவராவார். மற்றொருவர் பத்ரில் கொல்லப்பட்டாரா? அல்லது கைபரில் கொல்லப்பட்டாரா? என்பது பற்றி இரு கருத்துகள் உள்ளன. ஆனால், அதில் சரியானது அவர் பத்ரில் கொல்லப்பட்டார் என்பதுதான். ஆகவே, முஸ்லிம்களில் 19 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதுவே ஏற்றமானது. யூதர்களில் 93 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.” (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
ஃபதக்
நபி (ஸல்) கைபருக்கு வந்தபோது முஹய்ம்ஸா இப்னு மஸ்ஊது (ரழி) என்பவரை ‘ஃபதக்’ என்ற இடத்திலுள்ள யூதர்களிடம் அனுப்பி, இஸ்லாமை ஏற்குமாறு அழைத்தார்கள். ஆனால், அவர்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதில் தாமதம் காட்டினர். நபியவர்களின் கைபர் வெற்றியைப் பார்த்த இவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். இதனால் ‘ஃபதக்’ யூதர்கள் நபியவர்களிடம் தூது அனுப்பி கைபர்வாசிகளிடம் ஒப்பந்தம் செய்தவாறு தங்களிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு வேண்டினர். அதாவது ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியைத் தர அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதை நபியவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஃபதக் சண்டையின்றி வெற்றி கொள்ளப்பட்டதால் அதன் விளைச்சல் அனைத்தும் நபியவர்களுக்கு மட்டும் சொந்தமாயிற்று. (இப்னு ஹிஷாம்)
வாதில் குரா
நபி (ஸல்) அவர்கள் கைபர் போரை முடித்து அங்கிருந்து ‘வாதில் குரா’ என்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு யூதர்களின் ஒரு கூட்டமும், அரபுகளின் ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டனர். நபியவர்கள் முஸ்லிம்களுடன் அங்கு சென்ற போது அங்கிருந்த யூதர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் நபியவர்களின் ‘மித்அம்’ என்ற அடிமை கொல்லப்பட்டார். அவருக்கு சொர்க்கம் உண்டென மக்கள் நற்செய்தி கூறினர். ஆனால் நபி (ஸல்) “ஒருக்காலும் அவ்வாறு இல்லை. எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! கைபர் போரின் கனீமத்து பொருட்களை பங்கு வைப்பதற்கு முன் அவர் எடுத்துக்கொண்ட போர்வை இப்போது அவர் மீது நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கிறது” என்று கூறினார்கள். நபியவர்களின் இந்த எச்சரிக்கையை கேள்விப் பட்ட மக்கள், தாங்கள் அற்பமாக நினைத்து எடுத்து வைத்திருந்த பொருட்களையெல்லாம் கொண்டு வந்து கொடுத்தனர். ஒருவர் செருப்பிற்குரிய ஒன்று (அல்லது) இரண்டு வார்களை நபியவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதற்கு நபியவர்கள் “இது நரக நெருப்பின் ஒரு வாராக இருக்கும் அல்லது இரண்டு வாராக இருக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
யூதர்களின் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நபியவர்கள் உடனடியாக தங்களது தோழர்களைப் போருக்கு தயார்படுத்தி அணிவகுப்பை நடத்தினார்கள். மேலும், முழு படைக்குள்ள பெரிய கொடியை ஸஅது இப்னு உபாதாவிடம் கொடுத்தார்கள். அதற்குப் பின் மற்ற சிறிய கொடிகளில் ஒன்றை ஹுபாப் இப்னு முன்திடமும், மற்றொரு கொடியை ஸஹ்ல் இப்னு ஹுனைஃபிடமும், மற்றொரு கொடியை அப்பாத் இப்னு பிஷ்ர் இடமும் கொடுத்தார்கள்.