பக்கம் - 429 -
3) கஅபு இப்னு உமைர் அன்சாரி படைப் பிரிவு: ஹிஜ்ரி 7, ரபீஉல் அவ்வல் மாதத்தில் இப்படை அனுப்பப்பட்டது. குழாஆ கிளையினர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த பெருமளவில் கூட்டங்களைச் சேர்க்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. அதனால் கஅபு இப்னு உமைர் அல்அன்சாரியின் தலைமையில் பதினைந்து தோழர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எதிரிகளைச் சந்தித்து அவர்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தனர். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்து முஸ்லிம்களை நோக்கி அம்பெறிந்தனர். இதில் அனைத்து முஸ்லிம்களும் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
4) ஷுஜா இப்னு வஹபு அல்அசதி படைப் பிரிவு: ‘ஹவாஸின்’ என்ற கிளையினர் முஸ்லிம்களின் எதிரிகளுக்குப் பலமுறை உதவி செய்து வந்தனர். இதனால் அவர்களைக் கண்டிப்பதற்காக ஹிஜ்ரி 8, ரபீஉல் அவ்வல் மாதம், 25 வீரர்களுடன் ஷுஜா இப்னு வஹப் என்ற தோhழரை ‘தாத் இர்க்’ என்ற இடத்திற்கு நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்கள் எதிரிகளின் ஏராளமான கால்நடைகளை ஓட்டிக் கொண்டு மதீனா வந்து சேர்ந்தனர். அங்கு சண்டை ஏதும் நடக்கவில்லை. (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)