மக்காவை வெற்றி கொள்வது
அறிஞர் இப்னுல் கைய்” (ரஹ்) கூறுகிறார்: மக்காவின் வெற்றிதான் மிக மகத்தான வெற்றி. இதன் மூலம் அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கும், தூதருக்கும், நம்பிக்கைக்குரிய அவனது கூட்டத்தினருக்கும், படையினருக்கும் கண்ணியத்தை வழங்கினான். மேலும், தனது ஊரையும் மக்களின் நேர்வழிக்குக் காரணமாகிய தன் வீட்டையும் முஷ்ரிக்குகள் மற்றும் காஃபிர்களின் கையிலிருந்தும் காப்பாற்றினான். இவ்வெற்றியினால் வானத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமா? மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைந்தனர். பூமியாவும் இவ்வெற்றியால் பிரகாசமடைந்தது. (ஜாதுல் மஆது)
உடன்படிக்கையை மீறுதல்
ஹுதைபிய்யாவில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் ஒன்று: “நபியவர்களுடன் சேர விரும்பியவர்கள் நபியவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் எந்த கூட்டத்தினருடன் சேருகிறார்களோ, அவர் அந்தக் கூட்டத்தினல் ஒருவராகக் கணிக்கப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால் அது அந்தக் கூட்டத்தினர் மீதே அத்துமீறியதாகும்.” இந்த விவரத்தை இதற்கு முன்பே நாம் கூறியிருக்கிறோம்.
இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப குஜாஆ கோத்திரத்தினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கோத்திரத்தினர் குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவ்விரு கோத்திரத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இஸ்லாம் வந்து, இந்த உடன்படிக்கை ஏற்பட்டதற்குப் பின் இரு சாராரும் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திக் கொண்டனர்.
சில காலங்கள் இவ்வாறு கழிய, இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பக்ர் கிளையினர் குஜாஆ கோத்திரத்தாரிடமிருந்து தங்களது பழைய பகைமைக்குப் பழி தீர்த்துக் கொள்ள விரும்பினர்.
ஹிஜ்ரி 8, ஷஅபான் மாதம் பக்ர் கோத்திரத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு ‘நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி’ என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆ கிளையினர் ‘அல்வத்தீர்’ என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆ கிளையினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. குறைஷிகள் பக்ரு கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதுடன், அவர்களில் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.
சண்டைசெய்து கொண்டே குஜாஆ கோத்திரத்தினர் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பக்ர் கிளையினர் “நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!” என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். “பக்ர் இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?” என்றான். குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ என்ற தங்களது நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் தேடினர்.