பக்கம் - 441 -
அம்ர் வந்து சென்றதற்குப் பின் புதைல் சில தோழர்களுடன் நபியவர்களிடம் வந்து, நடந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரித்தார். புதைல் சென்றதற்குப் பின் அபூ ஸுஃப்யான் மதீனா வந்ததைப் பார்த்த முஸ்லிம்கள் தாங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மை என்பதை அறிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் போருக்குத் தயாராகும்படி கட்டளையிட்டதுடன், நாம் மக்காவிற்கு செல்ல இருக்கிறோம் என்றும் அறிவித்தார்கள். மேலும் “அல்லாஹ்வே! நான் குறைஷிகளின் ஊருக்கு அவர்களுக்குத் தெரியாமல் திடீரென நுழையும் வரை எந்தச் செய்தியும் அவர்களுக்குச் சேராமலும், ஒற்றர்கள் அவர்களைச் சென்றடையாமலும் நீ பாதுகாப்பாயாக” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும், தங்களின் படையைப் பற்றிய செய்தியை முழுமையாக மறைப்பதற்காக வேறொரு திசையில் சிறிய படையொன்றை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் தொடக்கத்தில் மதீனாவிலிருந்து மூன்று பரீதும் தொலைவிலுள்ள தூகஷப், துல்மர்வா என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள ‘இழம்’ என்ற இடத்திற்கு அபூ கதாதா இப்னு ப்இ (ரழி) அவர்களின் தலைமையில் 8 வீரர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அனுப்பினார்கள். நபியவர்களும் ‘இழம்’ என்ற இடத்திற்குத்தான் செல்ல இருக்கிறார்கள் என்று மக்கள் எண்ண வேண்டும் இதே செய்தி பரவ வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். இப்படை தனது பயணத்தைத் தொடர்ந்து நபி (ஸல்) கூறிய இடத்தை சென்று அடைந்த போது நபியவர்கள் மக்கா நோக்கி பயணமாகி விட்டார்கள் என்ற செய்தி அப்படைக்குக் கிடைத்தது. உடன் அவர்களும் நபியவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டார்கள். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

நபியவர்கள் மக்கா வருகிறார்கள் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக ஹாதிப் இப்னு அபூ பல்தஆ என்ற நபித்தோழர் கடிதம் ஒன்றை எழுதி ஒரு பெண் மூலம் அனுப்பினார். அதற்குக் கூலியும் கொடுத்தார். அப்பெண் அதைத் தலைமுடி சடைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள். ஆனால், ஹாதிபின் இச்செயலை அல்லாஹ் வஹியின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து விட்டான். உடனே நபியவர்கள் அலீ, மிக்தாத், ஜுபைர், அபூமர்ஸத் கனவி (ரழி) ஆகியோரை அழைத்து “நீங்கள் ‘காக்’ என்ற தோட்டத்திற்குச் செல்லுங்கள் அங்கு ஒரு பெண் பயணி இருப்பாள் அவளிடம் குறைஷிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று இருக்கிறது. அதைக் கைப்பற்றுங்கள்!” என்று கூறினார்கள்.

அவர்கள் விரைந்து சென்று அவ்விடத்தை அடைந்தார்கள். அங்கு நபி (ஸல்) கூறியபடி அப்பெண் இருக்க, அவளை வாகனத்திலிருந்து இறங்குமாறு கூறி அவளிடம் “உன்னிடமுள்ள கடிதம் எங்கே? என்று கேட்டார்கள். அவள் “என்னிடம் எக்கடிதமும் இல்லை” என்றாள். அவர்கள் அவளது பயணச் சாமான்கள் அனைத்தையும் தேடினர். ஆனால், அதில் ஏதும் கிடைக்கவில்லை.

“அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். அல்லாஹ்வின் தூதர் பொய் கூற மாட்டார்கள், நாங்களும் பொய் கூறமாட்டோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீயாக அக்கடிதத்தை கொடுத்து விடு அல்லது உனது ஆடையை களைந்து நாங்கள் தேடுவோம்” என்று அலீ (ரழி) கூறினார்கள். அலீயின் பிடிவாதத்தைப் பார்த்த அப்பெண் “விலகிக் கொள்” என்று கூற அலீ (ரழி) விலகிக் கொண்டார்கள். தனது சடையை அவிழ்த்து அதிலிருந்த கடிதத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள். அவர்கள் அதை நபியவர்களிடம் ஒப்படைத்தார்கள்.