பக்கம் - 444 -
மர்ருள் ளஹ்ரானில் இஸ்லாமியப் படை
ரமழான் மாதமாக இருந்ததால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் நோன்பு வைத்திருந்தார்கள். ‘உஸ்ஃபான்’ என்ற இடத்திற்கு அருகிலுள்ள ‘குதைத்’ என்ற கிணற்றுக்கருகில் இறங்கி அனைவரும் நோன்பு திறந்தனர். (முஸ்னது அஹ்மது, பைஹகி, இப்னு ஹிஷாம்)
அதற்குப் பின் தொடர்ந்து பயணித்து ‘ஃபாத்திமா பள்ளத்தாக்கு’ என்று கூறப்படும் ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற இடத்தில் இறங்கினார்கள். அங்கு நெருப்பு மூட்டும்படி நபி (ஸல்) கட்டளையிட, ஒவ்வொரு நபித்தோழரும் நெருப்பு மூட்டினார். மொத்தம் பத்தாயிரம் நெருப்புக் குண்டங்கள் அங்கு மூட்டப்பட்டன. இரவில் படையின் பாதுகாப்புக்கு உமர் இப்னு கத்தாபை நபி (ஸல்) தலைமை தாங்க வைத்தார்கள்.
நபியவர்களுக்கு முன் அபூஸுஃப்யான்
முஸ்லிம்கள் மர்ருள் ளஹ்ரானில் தங்கியதற்குப் பின் நபியவர்களின் வெள்ளைக் கோவேறு கழுதையில் அப்பாஸ் (ரழி) ஏறி, அங்கிருந்து புறப்பட்டார். விறகு சேகரிக்க வருபவர்கள் அல்லது வேறு யாராவது கிடைப்பார்களா என்று தேடினார். நபி (ஸல்) மக்கா வரும் செய்தியைக் குறைஷிகளுக்கு சொல்லி அனுப்பினால் நபி (ஸல்) மக்காவுக்குள் நுழைவதற்கு முன்பதாக நபியவர்களிடம் வந்து தங்களுக்குரிய பாதுகாப்பை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதே அப்பாஸின் நோக்கமாக இருந்தது..
அல்லாஹ் எந்த வகையிலும் குறைஷிகளுக்கு நபியவர்களின் நடவடிக்கை தெரியாமல் மறைத்து விட்டான். அவர்கள் பயத்துடனும், எந்நேரத்திலும் தாங்கள் தாக்கப்படுவோம் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மக்காவில் அபூ ஸுஃப்யான் வருவோர் போவோரிடமெல்லாம் நபியவர்களின் செய்தியைப் பற்றி துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் இரவில் அபூ ஸுஃப்யானும், ஹக்கீம் இப்னு ஸாமும், புதைல் இப்னு வரக்காவும் நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக விசாரித்துக் கொண்டே மக்காவை விட்டு வெளியேறினார்கள். அன்றிரவுதான் நபியவர்கள் மர்ருள் ளஹ்ரானில் படையுடன் தங்கியிருந்தார்கள்.
அந்த நிகழ்ச்சியைப் பற்றி அப்பாஸ் (ரழி) கூறுவதைக் கேட்போம்:
“நான் நபியவர்களது கோவேறு கழுதையின் மீது இரவின் இருளில் சென்று கொண்டிருந்தேன். அபூஸுஃப்யான் மற்றும் புதைல் ஆகிய இருவரும் பேசிக் கொண்டது காதில் கேட்டது. “இன்றைய இரவில் எரியும் நெருப்பைப் போன்றும், இங்குக் கூடியிருக்கும் படையைப் போன்றும் நான் வேறு எப்போதும் பார்த்ததில்லை” என்று அபூஸுஃயான் புதைலிடம் கூறினார். அதற்கு புதைல் “இங்கு வந்திருப்பது குஜாஆவின் படையாக இருக்கலாம். போர்தான் இவர்களைத் தீயாக ஆக்கிவிட்டது. நம்மீது போர்தொடுக்க கிளம்பிய இவர்கள் இவ்வாறு நெருப்பு மூட்டியிருக்கின்றனர்” என்றார். “இல்லை குஜாஆவின் எண்ணிக்கை மிகக் குறைவு அவர்கள் வீரமில்லாதவர்கள் இது அவர்களின் நெருப்பாகவோ படையாகவோ இருக்க முடியாது” என்று அபூஸுஃப்யான் கூறினார்.
நான் அபூஸுஃப்யானின் குரலைப் புரிந்து கொண்டு “ஹன்ளலாவின் தந்தையே!” என்று அழைத்தேன். (இது அவரது புனைப் பெயராகும்) அவரும் எனது குரலைப் புரிந்துகொண்டு “ஃபழ்லின் தந்தையே!” (இது அப்பாஸின் புனைப் பெயராகும்) என்று அழைத்தார். நான் ‘ஆம்! நான்தான்’ என்று கூறினேன். அதற்கவர் (என்ன! இந்நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் எனும் பொருளில்) “உங்களுக்கு என்னவாயிற்று. எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார். “இதோ அல்லாஹ்வின் தூதர் மக்களுடன் வந்திருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் அழிந்தே விட்டனர்” என்று நான் கூறினேன்.