பக்கம் - 458 -
4) உஜ்ஜா சிலையை உடைத்துவிட்டுத் திரும்பிய காலித் (ரழி) அவர்களுக்கு ஜுதைமா சமூகத்தாரை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கும் மற்றொரு பணியை நபி (ஸல்) வழங்கினார்கள். அதே ஆண்டு ஷவ்வால் மாதம் 350 தோழர்களுடன் புறப்பட்ட அப்படையில் முஹாஜிர்களும், அன்சாரிகளும், ஸுலைம் கூட்டத்தினரும் கலந்திருந்தனர். ஜுதைமா கூட்டத்தாரை அணுகி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி கூறியதும் அம்மக்கள் இஸ்லாமை ஏற்று “முஸ்லிமாக மாறினோம்” என்று கூறத் தெரியாமல், “மதம் மாறினோம்” என்று கூறினர். இதனை தவறாகப் புரிந்து கொண்ட காலித் (ரழி) அவர்களில் சிலரைக் கொன்றுவிட்டு மற்றும் சிலரைச் சிறைபிடித்து ஒவ்வொரு கைதிகளையும் படை வீரர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கு தங்கியிருக்கும்போது ஒரு நாள் “ஒவ்வொரு படைவீரரும் தங்களுடைய கைதிகளைக் கொன்று விடுக” என காலித் (ரழி) கட்டளை பிறப்பித்தார்கள். அப்படையில் பங்கு கொண்ட மூத்த நபித்தோழர்களான இப்னு உமர் (ரழி) போன்றோர் அங்ஙனம் கொலை புரிவதற்கு மறுத்து விட்டனர். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. “அல்லாஹ்வே! காலித் செய்துவிட்ட இக்காரியத்திலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என இருமுறை வருத்தமாகக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
படையில் கலந்திருந்த ஸுலைம் கூட்டத்தார் மட்டும் தளபதி காலிதின் ஆணைக்கிணங்கி கைதிகளைக் கொன்று விட்டனர். கொல்லப்பட்டவர்களின் சொந்தங்களுக்கு தியத் வழங்குவதற்காக நபி (ஸல்) அலீயை அனுப்பி வைத்தார்கள்.
இப்பிரச்சனையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபுக்கும் காலிதுக்கும் பேச்சு முற்றிப்போய் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த நபி (ஸல்), “காலிதே! கொஞ்சம் பொறுங்கள்! எனது தோழர்களை விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உஹுத் மலை தங்கமாக மாறி அதனை முழுவதும் அல்லாஹ்வுடைய பாதையில் நீ செலவு செய்தாலும், அவர்கள் ஒரு காலை அல்லது ஒரு மாலை அல்லாஹ்வின் பாதையில் சென்ற நன்மையை உம்மால் அடைய முடியாது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இதுவே மக்கா வெற்றியின் சுருக்கமான வரலாறு. இப்போர் முஸ்லிம்களுக்கு நிரந்தர வெற்றியை நிர்ணயித்தது மட்டுமல்ல இம்மாபெரும் போராட்டம் இறைநிராகரிப்புடைய கோட்டையை சுவடு தெரியாமல் நிர்மூலமாக்கியது. அரபு தீபகற்பத்தில் இறைநிராகரிப்பின் வாடையே வீசாமல் அழித்தொழித்து விட்டது. முழு அரபுலகமே முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர்களின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. ஏனெனில், ஹரமை நிச்சயமாக சத்தியவாதிகள் (உண்மையாளர்கள்) மட்டுமே கைப்பற்ற முடியும் என்பதை நன்றாக அறிந்திருந்தனர். கஅபாவை அழிப்பதற்கு யானைப் படையுடன் வந்த அப்ரஹாவும் அவனது படையினரும் அடையாளம் தெரியாது சின்னா பின்னமாகி தின்னப்பட்ட வைக்கோல் போன்று ஆன அவர்களின் வீழ்ச்சி வரலாறு, சத்தியத்தில் உள்ளவர் மட்டுமே கஅபாவை வெற்றி கொள்ள முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக அவர்களின் உள்ளத்தில் வேரூன்றச் செய்திருந்தது.