பக்கம் - 474 -
அங்கு வசித்த ‘ஹாத்திம்’ குடும்பத்தனரிடம் சண்டையிட்டு நிறைய கால்நடைகளைக் கைப்பற்றி அவர்களில் பலரைக் கைது செய்தனர். அங்கு தய்ம் கிளையினரின் தலைவராக இருந்த அதீ இப்னு ஹாதிம் தப்பித்து ஷாம் நாட்டை (சிரியா) நோக்கி ஓட்டம் பிடித்தார். கைதியாக்கப்பட்டவர்களில் இவன் சகோதரியும் இருந்தார். மதீனா வரும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்காக வெற்றிப் பொருளில் ஐந்தில் ஒரு பகுதியை ஒதுக்கி விட்டு மீதியை வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. ஆனால், கைதிகளில் ஹாத்திம் குடும்பத்தாரை மட்டும் பங்கிடாமல் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதீயின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் தன் மீது இரக்கம் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உதவி செய்பவரும் ஓடிவிட்டார் தந்தையும் இறந்துவிட்டார் நானோ வயதான மூதாட்டி. எனக்குப் பணிவிடை செய்வதற்கும் யாருமில்லை. எனக்கு உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்” என்று அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) “உமக்கு உதவி செய்பவர் யார்?” என்று கேட்க, “அதீ இப்னு ஹாத்திம்” என்று பதிலளித்தார். “அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் விரண்டோடிய அவரா?” என்று கேட்டுவிட்டு வேறெதுவும் பேசாமல் சென்று விட்டார்கள்.
மறுநாளும் இதுபோன்றே நபி (ஸல்) அவர்களிடம் அப்பெண்மணி உரையாடினார். முந்தைய நாள் கூறியது போன்றே கூறிவிட்டு சென்று விட்டார்கள். மூன்றாம் நாளும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து முன்பு கூறியது போன்றே கேட்டுக் கொண்டார். நபி (ஸல்) அவர் மீது இரக்கம் காட்டி அவரை விடுதலை செய்தார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒருவர் இருந்தார். அநேகமாக அவர் அலீயாக இருக்குமென்று அப்பெண் கூறுகிறார். அவர் “வாகனிப்பதற்காக வாகனத்தையும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்!” என்று யோசனைக் கூறினார். அப்பெண்மணியும் நபி (ஸல்) அவர்களிடம் வாகனம் கேட்கவே நபி (ஸல்) அவர்களும் அதற்கு ஏற்பாடு செய்தார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பிய அப்பெண்மணி தனது சகோதரரைத் தேடி ஷாம் நாட்டிற்குப் பயணமானார். அங்கு தனது சகோதரரைச் சந்தித்து நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை குறித்து விவரித்துவிட்டு “உமது தந்தை செய்திராத நற்செயல்களை எல்லாம் அவர் செய்கிறார். எனவே, விரும்பியோ விரும்பாமலோ நீ அவரைச் சந்தித்தே ஆக வேண்டும்” என்று அறிவுரைக் கூறினார். தனது சகோதரியின் இந்த யோசனைக்குப் பின் தனக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லையென்றாலும் துணிவுடன் நபியவர்களை சந்திக்க அவர் பயணமானார்.
நபி (ஸல்) அவர்களின் இல்லம் வந்து அவர்களுக்கருகில் அமர்ந்தவுடன், அவர் யார் என்பதை அறிந்து கொண்டு அவரிடம் நபி (ஸல்) பேசினார்கள். அல்லாஹ்வை புகழ்ந்ததற்கு பின் “நீ இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் ஓடுவதற்குரிய காரணம் என்ன? ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ என்று கூறுவதற்கு பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை தவிர வேறொர் இறைவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?” என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர் “அப்படி ஒன்றுமில்லை” என்றார். மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு “அல்லாஹு அக்பர் என்று சொல்வதற்குப் பயந்தா நீ ஓடுகிறாய்? அல்லாஹ்வை விட மிகப்பெரியவன் ஒருவன் இருக்கிறான் என்று உன் அறிவுக்கு எட்டுகிறதா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர் “அவ்வாறு இல்லை” என்று பதிலளித்தார்.