பக்கம் - 476 -
ஸஹீஹ் புகாரியில் அதிய்யின் மூலமாக மற்றும் ஒரு நிகழ்ச்சி பதிவாகியுள்ளது: நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனது வறுமையை முறையிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு மற்றொருவர் தனது பொருட்களை எல்லாம் கொள்ளையர்கள் வழியில் கொள்ளையடித்து விட்டதாக முறையிட்டார். நபி (ஸல்) என்னைப் பார்த்து “அதிய்யே! ஹீரா தேசம் எங்கிருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? உனக்கு ஆயுள் நீளமாக இருந்தால் ஒரு பெண் தனியாக ஹீராவிலிருந்து புறப்பட்டு கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்வாள். அவளுக்கு அல்லாஹ்வை தவிர வேறு எந்த பயமும் இருக்காது என்பதை நீ பார்க்கத்தான் போகிறாய். மேலும், உனக்கு ஆயுள் நீளமாக இருந்தால் கிஸ்ராவின் பொக்கிஷங்களை நீ வெற்றி கொள்வாய். மேலும், உனக்கு வயது நீளமாக இருந்தால் ஒருவர் கை நிறைய தங்கம் அல்லது வெள்ளியை அள்ளிக்கொண்டு தர்மம் செய்ய வெளியேறி அதைப் பெறுவோர் யாரும் உண்டா? என்று தேடி அலைவார். ஆனால், அதைப் பெறுவதற்கு யாரும் அவருக்குக் கிடைக்க மாட்டார்கள்.
சற்று நீளமாக வரும் ஹதீஸின் இறுதியில்: “ஹீராவிலிருந்து பயணம் செய்து கஅபாவிற்கு வந்து தவாஃப் செய்து திரும்பும் பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு அல்லாஹ்வை தவிர வேறு எந்த அச்சமுமில்லை. மேலும், கிஸ்ரா இப்னு ஹுர்முஜின் கஜானாக்களை வெற்றி கொண்டவர்களில் நானும் இருந்தேன். உங்களுக்கு வாழ்க்கை நீளமாக இருந்தால் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பான கை நிறைய தங்கம், வெள்ளியை எடுத்துக் கொண்டு தர்மம் செய்ய அலைபவர்களையும் நீங்கள் பார்ப்பீர்கள்” என்று அதிய் கூறுகினார். (ஸஹீஹுல் புகாரி)