பக்கம் - 479 -
“தங்களுடைய சதித்திட்டங்களைத் தீட்டுவதற்குத் தகுந்த இடமாக ஒரு பள்ளிவாசலையும் அமைத்துக் கொண்டனர். முஸ்லிம்களுக்குக் கெடுதல் செய்வதற்காகவும், அவர்களுக்கு மத்தியில் பிரிவினை உண்டாக்குவதற்காகவும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்ப்பவர்களுக்குப் பதுங்குமிடமாகவும் அமைய இப்பள்ளியை ஏற்படுத்தினர்” என்று இந்தப் பள்ளியைப் பற்றி குர்ஆனிலேயே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இப்பள்ளியைக் கட்டிய பின் நபி (ஸல்) அதில் தொழுகை நடத்த வரவேண்டுமென கோரினர். அவர்களது நோக்கமெல்லாம் “முஸ்லிம்களை ஏமாற்ற வேண்டும் இப்பள்ளியில் தாங்கள் செய்யும் சதிகளைப் பற்றி முஸ்லிம்கள் தெரிந்து கொள்ளக் கூடாது தங்களுக்கும் வெளியிலுள்ள முஸ்லிம்களின் எதிரிகளான தங்களின் நண்பர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இது அமைய வேண்டும்” என்பதே.
அவர்கள் பலமுறை நபி (ஸல்) அவர்களிடம் வந்து அந்தப் பள்ளியில் தொழுகை நடத்த வருமாறு கேட்டுக் கொண்டும், நபி (ஸல்) அதைத் தவிர்த்து வந்தார்கள். இறுதியில் ‘தபூக் போர்’ முடிந்து திரும்பும் போது இப்பள்ளியின் நோக்கத்தைப் பற்றிய முழுச் செய்தியையும் அல்லாஹ் தன் நபியவர்களுக்கு அறிவித்து, அந்த நயவஞ்சகர்களைக் கேவலப்படுத்தி விட்டான். எனவே, போரிலிருந்து திரும்பிய பின் அப்பள்ளியை இடித்துத் தகர்க்குமாறு கட்டளையிட்டார்கள்.
நிலைமை இவ்வாறு இருக்க, ஷாம் தேசத்திலிருந்து மதீனாவுக்கு ஜைத்தூன் எண்ணெய் விற்பனைக்காக வந்திருந்த நிஃப்த்திகள் “ர்கல் நாற்பதாயிரம் வீரர்கள் கொண்ட பெரும் படையை தயார் செய்து விட்டான். தனது ஆளுநர்களில் ஒருவரை அப்படைக்குத் தலைமை ஏற்கச் செய்து, அரபியர்களில் கிறிஸ்தவர்களாக மாறியிருந்த லக்கும், ஜுதாம் ஆகிய இரு கோத்திரங்களையும் அப்படையில் இணைத்திருக்கிறான். இப்படையின் முற்பகுதி தற்போது பல்கா வந்தடைந்து இருக்கிறது” என்ற அதிர்ச்சி தரும் செய்தியை முஸ்லிம்களின் காதுகளில் போட்டனர். மிகப் பெரிய ஆபத்து வந்துவிட்டதை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.
நிலைமை மேலும் மோசமாகுதல்
மேற்கூறியது ஒருபுறமிருக்க, அக்காலம் கடுமையான வெய்யில் காலமாக இருந்தது. மக்களும் மிகுந்த சிரமத்திலும், பஞ்சத்திலும், வாகனப் பற்றாக்குறையிலும் இருந்தனர். மேலும், அது பேரீத்தம் பழங்களின் அறுவடை காலமாகவும் இருந்தது. தங்களின் அறுவடையில் ஈடுபடுவதும், மதீனா நிழலில் இளைப்பாறுவதும் அவர்களுக்கு மிக விருப்பமாக இருந்தது. அதுமட்டுமின்றி செல்ல வேண்டிய இடமும் மிகத் தொலைவில் இருந்ததுடன், அந்தப் பாதையும் கரடுமுரடானதாக இருந்தது. மேற்கண்ட காரணங்களால் போருக்குப் புறப்படுவது முஸ்லிம்களுக்கு மிகச் சிரமமானதாகவே இருந்தது.