பக்கம் - 488 -
முஸ்லிம்கள் இனி நயவஞ்சகர்கள் நளினமாகவும் மிருதுவாகவும் இருக்க வேண்டுமென்ற தேவை இல்லாது போனது. அல்லாஹ்வும் இந்த நயவஞ்சகர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டுமென சட்டங்களை இறக்கி வைத்தான். இவர்களின் தர்மங்களை ஏற்பதோ, இவர்களுக்காக ஜனாஸா தொழுவதோ, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவதோ, இவர்களின் அடக்கத்தலங்களுக்குச் செல்வதோ கூடாது என தடை செய்து விட்டான். பள்ளி என்ற பெயரில் சூழ்ச்சிகள் செய்யவும், அதனைச் செயல்படுத்தவும் அவர்கள் பயன்படுத்திய இடங்களைத் தகர்த்தெரியுமாறு கட்டளையிட்டான். மேலும், அவர்களின் தீய பண்புகளை விவரித்து பல வசனங்களையும் இறக்கி வைத்த காரணத்தால் அவர்கள் மிகுந்த இழிவுக்குள்ளானார்கள். இந்த வசனங்கள் நயவஞ்சகர்கள் யார் எனத் தெளிவாக மதீனாவாசிகளுக்குச் சுட்டிக்காட்டுவது போல அமைந்திருந்தது. முதலாவதாக. ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் இஸ்லாமை ஏற்கவும் அறியவும் மக்கள் அலை அலையாய் மதீனா நோக்கி வந்தனர். இரண்டாம் கட்டமான மக்கா வெற்றிக்குப் பின்போ இது பன்மடங்காகப் பெருகியது. மூன்றாம் கட்டமான தபூக் போருக்குப் பின் இவற்றையெல்லாம் மிகைக்கும் வகையில் எண்ணிலடங்கா மக்கள் கூட்டங்கூட்டமாக மதீனா வந்தனர்.

(இப்போரின் விவரங்கள் “ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி” ஆகிய நூற்களிலிருந்து எடுக்கப்பட்டன.)

இப்போர் குறித்து குர்ஆன்...

இப்போர் குறித்து பல திருவசனங்கள் அத்தியாயம் (பராஆ) தவ்பாவில் அருளப்பட்டன. அவற்றில், சில நபி (ஸல்) போருக்குப் புறப்படும் முன்பும், சில பயணத்தின் இடையிலும், சில போர் முடிந்து மதீனா திரும்பிய பின்பும் அருளப்பட்டன. அவற்றில் போரின் நிலவரங்கள், நயவஞ்சகர்களின் தீய குணங்கள், போரில் கலந்து கொண்ட தியாகிகள் மற்றும் உண்மை முஸ்லிம்களின் சிறப்புகள், போரில் கலந்து கொண்ட உண்மை முஃமின்கள், கலந்து கொள்ளாத உண்மை முஃமின்களின் பிழை பொறுத்தல் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன.



வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்ச்சிகள் இந்த ஆண்டில் நடந்தன:

1) நபி (ஸல்) தபூக்கிலிருந்து திரும்பிய பின்பு உவைமிர் அஜ்லானிக்கும், அவருடைய மனைவிக்குமிடையில் ‘லிஆன்’ (பழி சுமத்தி ஒருவரையொருவர் சபித்தல்) நடந்தது.

2) “தவறு செய்து விட்டேன். என்னை தூய்மையாக்குங்கள்” என நபியவர்களிடம் வந்த காமிதிய்யா பெண்மணி மீது ‘ரஜ்ம்’ தண்டனை நிறைவேற்றப்பட்டது.

3) ஹபஷா மன்னர் அஸ்ஹமா ரஜபு மாதத்தில் மரணமானார். அவருக்காக நபி (ஸல்) மதீனாவில் ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

4) நபி (ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்தும் (ரழி) ஷஅபான் மாதத்தில் மரணமானார்கள். நபி (ஸல்) இதனால் மிகுந்த கவலையடைந்தார்கள். எனக்கு மூன்றாவதாக ஒரு மகள் இருந்தால், அவரையும் உங்களுக்கே மணமுடித்துத் தந்திருப்பேன் என உஸ்மான் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

5) தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்த பின்பு நயவஞ்சகர்களின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் இறந்து போனான். உமர் (ரழி) அவர்கள் தடுத்தும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்குத் தொழுகை நடத்தி இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடினார்கள். இது தொடர்பாக உமர் (ரழி) அவர்கள் கூறிய ஆலோசனையே ஏற்றமானது என குர்ஆன் வசனம் இறங்கியது.