பக்கம் - 49 -
13 யானைகள் இருந்தன. அவன் யமனிலிருந்து கிளம்பி ‘முகம்மஸ்’ என்ற இடத்தில் தனது படையை ஒழுங்குபடுத்தி யானைகளைத் தயார் செய்து மக்காவினுள் நுழைய ஆயத்தமானான். மினா மற்றும் முஜ்தலிஃபாவுக்கிடையே உள்ள ‘முஹஸ்ஸிர்’ என்ற பள்ளத்தாக்கை அடைந்ததும் அவன் வாகனித்த யானை தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டது. அதனைத் தெற்கு, வடக்கு மற்றும் கிழக்குத் திசை நோக்கி செலுத்தப்பட்டால் விரைந்து சென்றது. ஆனால், கஅபாவை நோக்கிச் செல்ல மறுத்துவிட்டது.

அந்நிலையில் அல்லாஹ் அவர்கள் மீது சிறிய பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைத்தான். அவை சுடப்பட்ட கற்களை அவர்கள் மீது எறிந்தன. அதன் மூலம் அவர்களை தின்னப்பட்ட வைக்கோல்களைப் போன்று அல்லாஹ் ஆக்கிவிட்டான். இப்பறவைகள் சிறிய குருவிகளைப் போன்று இருந்தன. அவை ஒவ்வொன்றிடமும் பட்டாணியைப் போன்ற மூன்று கற்கள் இருந்தன. ஒன்று அதன் அலகிலும், இரண்டு அதன் இரு கால்களிலும் இருந்தன. அது எவர்மீது விழுந்ததோ அம்மனிதன் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு மரணமடைந்தான். கற்கள் வீசப்படாத சிலரும் இருந்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழ தப்பி ஓடினார்கள். வழியிலேயே ஒவ்வொருவராக வீழ்ந்து மரணமடைந்தனர். அப்ரஹாவுக்கு அல்லாஹ் ஒரு வியாதியை ஏற்படுத்தினான். அதன் காரணமாக அவனது ஒவ்வொரு விரலும் கழன்று விழ ஆரம்பித்தன. அவன் ஸன்ஆவை அடைந்தபோது ஒரு குருவி குஞ்சை போன்று சுருங்கி விட்டான். பிறகு அவனது மார்புப் பகுதியிலிருந்து இருதயம் வெளியாகி துடிதுடித்துச் செத்தான்.

அப்ரஹா கஅபாவை தகர்க்க வந்தபோது மக்காவில் வசித்த குறைஷியர்கள் அனைவரும் அப்படைகளை எதிர்க்க அஞ்சி மலை உச்சிகளிலும் கணவாய்களிலும் சென்று பதுங்கிக் கொண்டனர். அந்தப் படைகள் மீது அல்லாஹ்வின் தண்டனை இறங்கியதைக் கண்ட பின்பே அவர்கள் நிம்மதியுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். (இப்னு ஹிஷாம்)

இந்நிகழ்ச்சி நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 50 அல்லது 55 நாட்களுக்கு முன் முஹர்ரம் மாதத்தில் (ஈஸவி ஆண்டு 571 பிப்ரவரி மாதம் கடைசியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில்) நடைபெற்றது. அல்லாஹ் தனது நபி மற்றும் புனித வீட்டின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான தொடக்கமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. ஏனெனில், பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் வசம் இருந்தும் இருமுறை இணைவைப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1) புக்து நஸ்ர் கி.மு. 587 ஆம் ஆண்டிலும் 2) ரோமானியர்கள் கி.பி. 70 ஆம் ஆண்டிலும் கைப்பற்றினர். அக்காலத்தில் கிருஸ்துவர்களே (ஈஸா (அலை) அவர்களை ஈமான் கொண்ட) முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால், மக்காவாசிகள் நிராகரிப்பாளர்களாக, இணைவைப்பவர்களாக இருந்தும் ஹபஷாவைச் சேர்ந்த கிருஸ்துவர்கள் முஸ்லிம்களாக இருந்தும் அவர்களால் கஅபாவைக் கைப்பற்ற முடியவில்லை.

அப்ரஹாவின் யானைப் படைகளை அல்லாஹ் அழித்த செய்தி பாரசீகம், ரோம் போன்ற உலகின் பெரும்பாலான பகுதிகளை விரைவாகச் சென்றடைந்தது. ஏனெனில், ஹபஷியர் ரோம் நாட்டுடன் வலுவான தொடர்பு வைத்திருந்தனர். அவ்வாறே பாரசீகர்களின் பார்வை ரோமர்களின் மீது எப்போதும் இருந்தது. ரோமர்களுக்கும் அவர்களுடன் நட்பு கொண்டவர்களுக்கும் ஏற்படும் நிகழ்வுகளைத் துல்லியமாகக் கண்காணித்து வந்தனர். இந்த யானைச் சம்பவம் பற்றி அறிந்தவுடன் பாரசீகர்கள் விரைந்து சென்று யமனைக் கைப்பற்றினர். அக்காலத்தில் பாரசீகமும் ரோமும் நாகரீக உலகின் முன்னோடிகளாகத் திகழ்ந்தன. யானைச் சம்பவம் உலக மக்களின் பார்வையை கஅபாவின் பக்கம் திருப்பி அதன் மாண்புகளையும், அதையே அல்லாஹ் புனித பூமியாகத் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதையும் உணரச் செய்தது.