பக்கம் - 497 -
தனது கவியில் முஹாஜிர்களையும் கஅப் புகழ்ந்தார். ஏனெனில், குறைஷிகளில் அனைவரும் கஅபைப் பற்றி நல்லதையே கூறி வந்தனர். தன்னைக் கொல்ல வந்த அன்சாரிகளைப் பற்றி சற்று குத்தலாகக் கவி படித்தார். அன்சாரிகளைப் பற்றி அவர் கூறியதாவது:
ஈட்டிகள் காவலுடன் அழகு.
ஆண் ஒட்டகங்கள் நடப்பது போல்
(குறைஷிகள்) நடைபோடுகின்றனர்.
கருங்குட்டையர்களோ பயந்து விரண்டோடினர்.
(இது மதீனாவாசிகளைக் குறித்து கேலி செய்தது.)
ஆனால், இஸ்லாமைத் தழுவி மார்க்கத்தில் உறுதியானவுடன் அன்சாரிகளின் சிறப்புகளையும் உயர்வுகளையும் தெரிந்து கொண்டு, தான் செய்த தவறுக்காக வருந்தினார். தான் அவர்களை இகழ்ந்து படித்ததை நிவர்த்தி செய்வதற்காக அவர்களைப் புகழ்ந்து கவிதை கூறினார்.
“சிறந்த வாழ்க்கையை விரும்புவோர் என்றும்
நல்லோர் அன்சாரிகளுடன் சேரட்டும்!
அவர்கள் வாழையடி வாழையாக
நற்பண்புகளுக்கு வாரிசுகள்
சான்றோர்கள் யாரெனில்
சான்றோர்களின் மைந்தர்களே!”
6) உத்ரா குழுவினர்
இச்சமூகத்தைச் சார்ந்த 12 பேர்கள் ஹிஜ்ரி 9, ஸஃபர் மாதம் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். ஹம்ஜா இப்னு நுஃமான் என்பவரும் அவர்களில் ஒருவர். தாங்கள் யார் என அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நாங்கள் உத்ரா சமூகத்தவர். குஸையின் தாய்வழிச் சகோதரர்கள். குஜாஆ மற்றும் பக்கர் வமிசத்தாரை மக்காவிலிருந்து வெளியேற்றுவதில் குஸைக்கு உதவி செய்தவர்கள். எங்களுக்கு உங்களுடன் உறவும் ரத்தபந்தமும் இருக்கின்றன” என பதில் கூறினர். மிக்க கண்ணியத்துடன் அவர்களை நபி (ஸல்) அவர்கள் வரவேற்று அதிவிரைவில் ஷாம் நாடு வெற்றி கொள்ளப்படும் என்ற நற்செய்தியையும், குறிகேட்கக் கூடாது அறியாமைக் கால வழக்கப்படி அறுத்துப் பலியிடக் கூடாது என்றும் கூறினார்கள். அவர்களும் இஸ்லாமை மனமுவந்து ஏற்று பல நாட்கள் தங்கியிருந்து பின்னர் தங்களது ஊர்களுக்குத் திரும்பினர்.
7) பலிய் குழுவினர்
இக்குழுவினர் ஹிஜ்ரி 9ல், ரபீஉல் அவ்வல் மாதம் மதீனா வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தனர். இவர்களின் தலைவர் அபூ ழுபைப் நபி (ஸல்) அவர்களிடம் “விருந்தோம்பல் செய்வதற்கு (நன்மை) நற்கூலி கிடைக்குமா?” என வினவினார். “ஆம்! செல்வந்தர்களாயினும் அல்லது ஏழைகளாயினும் சரியே! நீங்கள் புரியும் ஒவ்வொரு நற்காரியங்களும் நன்மை தரக் கூடியதே” என பதிலளித்தார்கள். “விருந்தோம்பலின் கால அளவு எவ்வளவு?” என அபூழுபைப் கேட்ட போது “மூன்று நாட்கள்” என நபி (ஸல்) பதில் கூறினார்கள். அவர் “வழிதவறி வந்துவிட்ட ஆடுகளைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். “அது உமக்கு அல்லது உனது சகோதரருக்கு அல்லது ஓநாய்க்கு” என பதில் கூறினார்கள். வழிதவறிய ஒட்டகங்களைப் பற்றி கேட்க “அதைப் பற்றி உனக்கென்ன கவலை. அது அவருடைய எஜமானனைத் தேடிச் சென்று விடும் அல்லது அதன் சொந்தக்காரர் அதனை தேடிக் கொள்வார்” என நபி (ஸல்) பதில் கூறினார்கள்.