பக்கம் - 507 -
மற்றும் சிலரை அல்லாஹ் புகழவும் செய்கிறான்:

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட (நாட்டுப் புறத்து) அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள், தாங்கள் செய்யும் தானங்களை அல்லாஹ்விடம் தங்களை நெருக்கமாக்கி வைக்கும் வணக்கங்களாகவும், (அவனுடைய) தூதரின் பிரார்த்தனைகளுக்கு வழியாகவும் எடுத்துக் கொள் கின்றனர். நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வுக்கு)ச் சமீபமாக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அதிசீக்கிரத்தில் தன் அன்பிலும் புகுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:99)

மறுபுறம் மக்காவாசிகள், மதீனாவாசிகள், ஸகீஃப் கிளையினர், யமன், பஹ்ரைனில் இருந்த பெரும்பாலானவர்கள் மார்க்கத்தில் உறுதி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். மூத்த நபித்தோழர்களும், சிறந்த முஸ்லிம்களும் இதில் உள்ளவர்களே! (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி)


நபி (ஸல்) அவர்களின் இறுதி காலக் கட்டத்தைப் பற்றி நாம் அறிவதற்கு முன் இதுநாள் வரை அவர்கள் புரிந்த செயல்பாடுகள், ஆற்றிய பணிகள் பற்றி சுருக்கமாகக் கூறுவது நல்லது. அதற்குக் காரணம், இச்செயல்பாடுகள்தான் நபி (ஸல்) வாழ்க்கையின் இதயப் பகுதியாகும். இதனால்தான் ஏனைய இறைத்தூதர்களிலிருந்து நமது நபி (ஸல்) தனிச் சிறப்புற்று விளங்குகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு “முன்னோர்கள் மற்றும் பின்னோர்களின் தலைவர்” என்று மகுடம் சூட்டியிருப்பதற்கும் காரணம் இதுதான்.

(நபியே!) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் நீங்கள் (தொழுகைக் காக எழுந்து) நில்லுங்கள். (முழு இரவிலுமல்ல அதிலொரு) சொற்ப பாகம். (அல்குர்ஆன் 73:1, 2)

(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் (அல்குர்ஆன் 74:1, 2)

என்று அல்லாஹ் கூறியதுதான் தாமதம்.

நபி (ஸல்) எழுந்தார்கள், நின்றார்கள்... இருபது ஆண்டுகளுக்கு மேலாக நின்றார்கள். இப்புவியில் மாபெரும் அமானிதச் சுமையை... தங்களது தோளில் சுமந்தவர்களாக நின்றார்கள்... முழு மனித சமுதாயச் சுமையை... கொள்கைச் சுமையை... பல துறைகளில் போராட்டச் சுமையை... சுமந்து நின்றார்கள்... மடமை இருள்களிலும் வழிகேடுகளிலும் மூழ்கிப்போன மனித இதயத்தை... மீட்க எழுந்து நின்றார்கள்... அற்ப ஆசைகளின் பிடியிலும், மன இச்சை சிறைகளிலும், சிக்குண்டிருக்கும் உள்ளங்களை மீட்கும் போராட்டங்களுக்காக நின்றார்கள்... ஆம்! ஒரு நேரத்தில் தங்களுக்கென உன்னதத் தோழர்களை வார்த்தெடுத்தார்கள்... அறியாமை அழுக்குகளிலிருந்தும் அற்ப உலக ஆசைகளில் இருந்தும் அவர்களின் உள்ளங்களை புடம் போட்டத் தங்கமாக மாற்றினார்கள்.

அடுத்து சில சோதனைகள்... போர்கள்... ஒன்றா?... இரண்டா?... தொடர்ந்த சங்கிலிகளைப் போன்று போர்களே போர்கள்! அல்லாஹ்வின் எதிரிகளுடன்... எதிரிகளா அவர்கள்?... கல் நெஞ்சம் கொண்ட அநியாயக்காரர்கள்... இஸ்லாமிய அழைப்புப் பணியை அழிக்க... இறை நேசர்களை ஒழிக்க... இஸ்லாமிய இளஞ்செடி பூமியில் வேரூன்றி... வானளாவ அதன் கிளைகள் உயர்ந்து... அதன் நிழல்கள் உலகை வியாபிப்பதற்கு முன்பாக... அதைக் கிள்ளி எறிய நப்பாசைக் கொண்டவர்கள்! எதிரிகளுடன் ஓயாத ஒழியாத போர் ஒருபுறம்! உள்ளத்துடன் உக்கிரமான போர் மறுபுறம்! உள்ளத்துடன் போர் நிரந்தரம்!... என்றுமே அது ஷைத்தானுடன் நடைபெறும்!... உள்ளத்தின் ஆழங்களில் ஊசலாட்டத்தை ஊடுருவச் செய்து மனிதனை வழிகெடுக்க வேண்டும்! அவனது நேர்வழிப் பயணத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஒரு கணமும் ஷைத்தான் அயர்வதில்லை... உள்ளத்தின் போர் என்பது அவனுடன் செய்யும் போரே!