பக்கம் - 517 -


புறப்படுவதற்கான அறிகுறிகள்

அழைப்புப் பணி நிறைவுற்று, இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி (ஸல்) அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

ஹிஜ்ரி 10, ரமழான் மாதத்தில் நபி (ஸல்) இருபது நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். பொதுவாக 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பதுதான் நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இம்முறை வானவர் ஜிப்ரயீல் நபியவர்களிடம் வந்து இருமுறை குர்ஆனைப் பரிமாறிக் கொண்டார்கள். இறுதி ஹஜ்ஜில் ‘இந்த ஆண்டிற்குப் பின் இந்த இடத்தில் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம்’ என்று நபி (ஸல்) கூறியிருந்தார்கள். ஜம்ரத்துல் அகபாவில் நபி (ஸல்) நிற்கும் போது “உங்களது வணக்க வழிபாடுகளை, ஹஜ் கடமைகளை என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். இந்த ஆண்டிற்குப் பிறகு நான் ஹஜ்ஜுக்கு வர முடியாமல் போகலாம்” என்றும் கூறியிருந்தார்கள். ஹஜ் பிறை 12ல் சூரத்துன் நஸ்ர் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இவற்றிலிருந்து நபி (ஸல்) இவ்வுலகை விட்டு விடைபெறப் போகிறார்கள், அவர்களது மரணச் செய்தி அவர்களுக்கு வந்துவிட்டது என்பதைத் தெளிவாக உணரலாம்.

துல்ஹஜ் முடிந்து முஹர்ரமும் முடிந்தது. ஸஃபர் மாதம் பிறந்தது. ஹிஜ்ரி 11, ஸஃபர் மாத தொடக்கத்தில் நபி (ஸல்) உஹுதுக்குச் சென்றார்கள். அங்கு ஷஹீதானவர்களுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சித் தொழுதார்கள். இருப்பவர்களுக்கும் இறந்தோருக்கும் விடை கூறுவது போல் நபி (ஸல்) அவர்களின் இச்செயல் அமைந்தது. பின்பு தங்களது பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி “நான் உங்களுக்கு முன் செல்கிறேன். நான் உங்களுக்கு சாட்சியாளன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தற்போது எனது நீர் தடாகத்தைப் பார்க்கிறேன். எனக்கு பூமியிலுள்ள பொக்கிஷங்களின் சாவிகள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குப் பின் நீங்கள் இணை வைப்பவர்களாக மாறிவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை. இவ்வுலகத்திற்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு நாள் நடுநிசியில் ‘பகீஃ’ மண்ணறைக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக பாவ மன்னிப்புத் தேடினார்கள். மேலும் “மண்ணறைவாசிகளே! மக்கள் இருக்கும் நிலையைவிட உங்களது நிலை உங்களுக்கு இன்பம் பயக்கட்டும். இருள் சூழ்ந்த இரவுப் பகுதிகளைப் போன்று குழப்பங்கள் வரவிருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக தொடராக வந்து கொண்டிருக்கும். பிந்தியது முந்தியதைவிட மோசமானதாக இருக்கும்” எனக் கூறிவிட்டு “நிச்சயமாக நாமும் உங்களிடம் வந்து சேருவோம்” என்ற நற்செய்தியையும் அவர்களுக்குக் கூறினார்கள்.

நோயின் ஆரம்பம்

ஹிஜ்ரி 11, ஸஃபர் மாதம், திங்கட்கிழமை பிறை 28 அல்லது 29 ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்ள பகீஃ சென்றார்கள். நல்லடக்கம் செய்துவிட்டு திரும்பும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் தலைவலி ஏற்பட்டது. உடல் சூடு அதிகமானது. தலைமேல் கட்டியிருந்த துணிக்கு மேல் புறத்திலும் அனலை உடனிருப்போர் உணர்ந்தனர். பதினொரு நாட்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். 13 அல்லது 14 நாட்கள் கடினமான நோயில் கழித்தார்கள்.