பக்கம் - 519 -
பின்னர் அன்சாரிகளைப் பற்றி விசேஷமாக சிறப்பித்துக் கூறினார்கள்: “அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.” மற்றொரு அறிவிப்பில், “மக்கள் அதிகமாகினர். ஆனால் அன்சாரிகள் குறைகின்றனர். இறுதியில் அவர்கள் உணவில் உள்ள உப்பைப் போன்று குறைந்து விடுவார்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ, தீமையோ செய்யும் அளவு அதிகாரம் பெற்றால், அன்சாரிகளில் நல்லோன் சொல்லை ஏற்கட்டும். அவர்களில் தவறிழைப்போரை மன்னிக்கட்டும். (ஸஹீஹுல் புகாரி)
இவ்வாறு உபதேசம் செய்த பின்பு “ஓர் அடியாருக்கு இவ்வுலகில் உள்ளவற்றை உங்களுக்கு வழங்கட்டுமா? அல்லது மறுமையில் என்னிடமுள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா? என்று அல்லாஹ் வினவ, அதற்கு அந்த அடியாரின் அல்லாஹ்விடமுள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூ சயீத் அல் குத் (ரழி) கூறுவதாவது:
நபி (ஸல்) அவர்களின் இப்பேச்சைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அழ ஆரம்பித்து “எங்களது தந்தையரையும் தாய்மாரையும் உங்களுக்கு அர்ப்பணமாக்குகிறோம்” என்று கூறினார்கள். நாங்கள் அவரைக் கண்டு ஆச்சரியமுற்றோம். “இம்முதியவரைப் பாருங்கள்! அல்லாஹ் ஓர் அடியாருக்கு உலக வசதிகளை வழங்கட்டுமா? அல்லது தன்னிடம் மறுமையில் உள்ளதை வழங்கட்டுமா என வினவினான் என்றுதான் நபி (ஸல்) கூறினார்கள். அதற்குத் தந்தையரும் தாய்மாரும் அர்ப்பணம் என்று கூறுகிறாரே?” என்று மக்கள் பேசினர். அபூபக்ர் (ரழி) எங்களில் மிகுந்த அறிஞராக இருந்தார். எனவேதான் இவ்வாறு கேட்கப்பட்ட அடியார் இந்தத் தூதர்தான் என்பதை புரிந்து கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: “தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்ர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன். என்றாலும் அவருடன் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது. பள்ளியிலுள்ள எல்லா வீட்டினுடைய வாசல் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும் அபூபக்ருடைய வீட்டு வாசலைத் தவிர!” (ஸஹீஹுல் புகாரி)
நான்கு நாட்களுக்கு முன்பு
மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி “வாருங்கள்! நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது வீட்டில் இருந்த பலல் உமர் (ரழி) அவர்களும் ஒருவர். “நபி (ரழி) அவர்களுக்கு வலி அதிகமாகிவிட்டது. உங்களிடம் குர்ஆன் இருக்கிறது. அல்லாஹ்வின் வேதமே உங்களுக்குப் போதுமானது” என்று உமர் (ரழி) மக்களிடம் கூறினார்கள். இதனால் அங்கிருந்தவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை நிலவியது. சிலர் “நபி (ஸல்) நமக்கு எழுதித் தரட்டும்” என்று கூற, மற்றும் சிலர் உமர் (ரழி) கூறியது போல கூறினார்கள். இரு சாரார்களிடையே கருத்து வேற்றுமை விவாதமாக மாறவே “நீங்கள் இப்போது என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)