பக்கம் - 522 -
நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) “எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!” என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.
முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். “ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி (ஸல்) தூக்கி எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப போர்த்தினால் முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள். இந்நிலையில் சிலவற்றை நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.” (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)
தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
மரணத் தருவாயில்...
இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:
“நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. “நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.”
இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். “லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)