பக்கம் - 59 -
நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகளில் இப்றாஹீமைத் தவிர அனைவரும் அன்னை கதீஜாவுக்குப் பிறந்தவர்களே! முதல் குழந்தை காஸிம். இவருடன் இணைத்தே நபியவர்களுக்கு ‘அபுல் காஸிம்’ என்ற புனைப்பெயர் கூறப்படுகிறது. பிறகு ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம், ஃபாத்திமா, அப்துல்லாஹ் ஆகியோர் பிறந்தனர். இந்த அப்துல்லாஹ்வுக்கு தய்யிப், தார் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஆண் மக்கள் அனைவரும் சிறு வயதிலேயே மரணமடைந்தனர். பெண் மக்கள் அனைவரும் இஸ்லாம் வரும் வரை வாழ்ந்து, இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத்தும் செய்தார்கள். ஃபாத்திமாவைத் தவிர்த்து மற்ற மூவரும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர். நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்குப் பின் ஆறுமாதம் கழித்து ஃபாத்திமா மரணமடைந்தார். (இப்னு ஹிஷாம், ஃபத்ஹுல் பாரி)
கஅபாவை செப்பனிடுதல், நபி (ஸல்) அவர்கள் நடுவராகுதல்
நபி (ஸல்) அவர்களின் 35வது வயதில் குறைஷியர்கள் கஅபாவைப் புதுப்பித்தனர். கஅபா, ஓர் ஆள் உயரத்திற்குப் பாறைகளால் கட்டப்பட்டிருந்தது. அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே மேல்முகடு இன்றி ஒன்பது முழம் கொண்டதாக இருந்தது. அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. இந்நிலையில் கஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது. நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது. அதன்மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாக குறைஷியர்கள் அதைப் புதுப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். அதனை ஹலாலான (தூய்மையான) வருமானத்தைக் கொண்டே செப்பனிட வேண்டும்; வட்டி, விபசாரம், திருட்டு போன்ற பொருட்களின் மூலமாக செப்பனிடக் கூடாது என அனைவரும் கூடி முடிவெடுத்தனர். இந்நிலையில் பழைய கட்டடத்தை எவ்வாறு இடிப்பது என அனைவரும் அஞ்சினர். வலீத் இப்னு முகீரா மக்ஜூமி கடப்பாரையை எடுத்து “அல்லாஹ்வே! நான் நன்மையை நாடியே இதைச் செய்கிறேன்” என்று கூறி ருக்னுல் யமானி, ருக்னுல் ஷாமியின் பகுதிகளை இடித்தார். அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாததைக் கண்ட குறைஷியர்கள் அச்சம் தெளிந்து, அவருடன் இணைந்து இடித்தனர்.
இறுதியாக, இப்றாஹீம் (அலை) அவர்கள் அமைத்த அஸ்திவாரம் தென்பட்டது. பிறகு கஅபாவை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒரு பகுதியைக் கட்ட வேண்டுமென முடிவு செய்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ‘பாகூம்’ என்ற ரோமானிய பொறியியல் வல்லுனரின் மேற்பார்வையில் கட்டத் தொடங்கினர். இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வதின்” இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது. அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது. சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது. அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா - மக்ஜூமி அம்மக்களிடம், “இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் காத்திருக்க நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள். அவர்களைக் கண்ட அம்மக்கள் “இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்” என்றனர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள். பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர். கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள். இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.