பக்கம் - 92 -
நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது மகனாரான அப்துல்லாஹ் சிறு வயதில் மரணமடைந்த போது அபூலஹப் மட்டில்லா மகிழ்ச்சியுடன் தனது தோழர்களிடம் “முஹம்மது சந்ததியற்றவராகி விட்டார்” என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினான். (தஃப்ஸீர் இப்னு கஸீர்)
ஹஜ்ஜுடைய காலங்களிலும் கடைத்தெருக்களிலும் அபூலஹப் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் சுற்றி வந்து அவர்களைப் “பொய்யர்” என்று கூறுவான். அது மட்டுமல்லாமல் ரத்தம் கொட்டும்வரை அவர்களது பிடரியில் பொடிக்கற்களால் அடித்துக்கொண்டே இருப்பான். (கன்ஜுல் உம்மால்)
அபூ லஹபின் மனைவியும் அபூ ஸுஃப்யானின் சகோதரியுமான உம்மு ஜமீல் நபி (ஸல்) அவர்களுக்கு நோவினை கொடுப்பதில் தனது கணவனைவிட குறைந்தவளும் அல்ல! சளைத்தவளும் அல்ல! முட்களை நபி (ஸல்) செல்லும் பாதையிலும் அவர்களது வீட்டின் வாசலிலும் வைத்து விடுவாள். மிகக் கெட்டவளான இவள் எந்நேரமும் நபி (ஸல்) அவர்களை ஏசிப் பேசிக்கொண்டிருந்தாள். பல பொய்களைப் பரப்பிக் கொண்டே இருப்பாள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் குழப்பம் விளைவித்துக் கொண்டும், பிரச்சினையின் நெருப்பை மூட்டிவிட்டுக் கொண்டும் இருப்பாள். இதனால்தான் அல்குர்ஆன் அவளை “ஹம்மாலதல் ஹத்தப்” விறகை சுமப்பவள் என்று வர்ணிக்கிறது.
தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்து அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளது கையில் குழவிக் கல் இருந்தது. இருவருக்கும் அருகில் அவள் வந்தவுடன் அவளது பார்வையை நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியாமல் அல்லாஹ் பறித்து விட்டான்.
அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை. “அபூபக்ரே உமது தோழர் எங்கே? அவர் என்னை கவிதைகளில் ஏசுகிறார் என்று எனக்கு தெரிய வந்துள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நான் பார்த்தால் இக்குழவிக் கல்லால் அவரது வாயிலேயே அடிப்பேன். அறிந்து கொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் நன்றாகக் கவி பாடத்தெரியும்” என்று கூறிய பின் அடுத்து வரும் கவிதையைப் படித்தாள்.
“இழிவுக்குரியவரைத்தான் நாங்கள் ஏற்க மறுத்தோம்; அவரது கட்டளையை புறக்கணித்தோம்; அவருடைய மார்க்கத்தையும் வெறுத்தோம்.”
பிறகு அவள் திரும்பிச் சென்றுவிட்டாள். அப்போது அபூபக்ர் (ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களைப் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லையா?” என வினவ “அவள் என்னைப் பார்க்கவில்லை. அல்லாஹ் என்னை பார்க்க முடியாமல் அவளது பார்வையை மறைத்து விட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இச்சம்பவம் பற்றி “முஸ்னத் பஜ்ஜார்’ எனும் நூலின் அறிவிப்பில் வருவதாவது: அவள் அபூபக்ரிடம் வந்து “அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்” என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) “இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாது” என்று கூறினார்கள். “ஆம்! நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.