முஹம்மது நபி (ஸல்) வரலாறு - பக்கம் : 167

இந்த உடன்படிக்கை இரவின் இருளில் மிக இரகசியமாக நடைபெற்று இருந்ததால் மதீனாவாசிகளில் இணைவைப்பவர்களாக இருந்தவர்களுக்கு இவ்வுடன்படிக்கையைப் பற்றி எதுவும் தெரியாது. எனவே, அவர்கள் குழம்பிவிட்டனர். அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று மதீனாவைச் சேர்ந்த இணைவைப்பவர்கள் மறுத்தனர். மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலிடம் விசாரித்தனர். அதற்கு, “இது முற்றிலும் பொய்யான செய்தி. நான் மதீனாவில் இருந்திருந்தால் கூட எனது கூட்டத்தினர் என்னிடம் ஆலோசனை செய்யாமல் இதுபோன்ற செயல்களில் இறங்க மாட்டார்கள். நான் இங்கு இருக்கும்போது எனக்குத் தெரியாமல் இது போன்று அவர்கள் ஒருக்காலும் செய்திருக்கவே மாட்டார்கள்” என்று அவன் கூறினான்.

முஸ்லிம்களோ தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் வாய்மூடி இருந்துவிட்டனர். குறைஷித் தலைவர்கள் மதீனா முஷ்ரிக்குகளின் பேச்சை நம்பி, தோல்வியுடன் திரும்பினர்.

குறைஷிகள் செய்தியை உறுதி செய்தனர்

மதீனாவாசிகளைப் பற்றி கேள்விப்பட்ட செய்தி பொய்யாக இருக்குமோ என்று சற்றே உறுதியான எண்ணத்தில்தான் அவர்கள் திரும்பினர். ஆனாலும், அதைப் பற்றி துருவித் துருவி ஆராய்ந்து, விசாரித்துக் கொண்டே இருந்தனர். இறுதியில், தாங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான், இரவிலேயே ஒப்பந்தம் முழுமை அடைந்து விட்டது என்று அறிந்து கொண்டனர். உடனே, மதீனாவாசிகளை விரட்டிப் பிடிப்பதற்காக குறைஷிகளின் குதிரை வீரர்கள் தங்களது குதிரைகளை வெகு விரைவாக செலுத்தினர். ஆனால், அவர்களை அடைந்துகொள்ள முடியவில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க மதீனாவாசிகள் வெகு விரைவாக தங்களது நாடுகளை நோக்கி பயணமாகி விட்டனர். ஆனால், பயணக் கூட்டத்தின் கடைசியாக சென்று கொண்டிருந்த ஸஅது இப்னு உபாதாவையும், முன்திர் இப்னு அம்ரையும் குறைஷிகள் பார்த்து விட்டனர். அவர்கள் இருவரையும் பிடிக்க முயலவே முன்திர் விரைந்து சென்று தப்பித்துக் கொண்டார். ஸஅது (ரழி) குறைஷிகளின் கையில் சிக்கிக் கொண்டார். அந்தக் குறைஷிகள் அவரை அவரது வாகனத்தின் கயிற்றைக் கொண்டு கையை கழுத்துடன் கட்டி, அடித்து, தலைமுடியைப் பிடித்து இழுத்தவர்களாக மக்காவுக்கு அழைத்து வந்தனர். இதைப் பார்த்த முத்யீம் இப்னு அதீயும், ஹாரிஸ் இப்னு ஹர்ப் இப்னு உமைய்யாவும் ஸஅதை குறைஷிகளின் பிடியிலிருந்து விடுவித்தனர். ஏனெனில், முத்” மற்றும் ஹாரிஸின் வியாபாரக் கூட்டங்கள் மதீனாவைக் கடந்து செல்லும்போது அக்கூட்டங்களுக்கு ஸஅது (ரழி) அவர்கள்தான் பாதுகாப்பு அளித்து வந்தார்கள். இதற்கிடையில் தங்களுடன் ஸஅதைப் பார்க்காத அன்சாரிகள் அவரைக் காப்பாற்றி அழைத்து வருவதற்காக ஆலோசனை செய்து கொண்டிருந்தபொழுது ஸஅது (ரழி) குறைஷிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வந்துவிடவே அனைவரும் மதீனா சென்று விட்டனர். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)