பக்கம் -103-
போர்கள் - ஒரு கண்ணோட்டம்
நபி (ஸல்) கலந்து கொண்ட போர்கள், நபி (ஸல்) அனுப்பி வைத்த படைப் பிரிவுகள்
மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் நிலைமைகள், பின்விளைவுகள், மாற்றங்கள் பற்றி நாம் ஆய்வு
மேற்கொண்டாலும் அல்லது வேறு யார் ஆய்வு செய்தாலும் கீழ்க்கண்ட முடிவுக்கே வர வேண்டும்.
நபி (ஸல்) இறைத்தூதர்களில் தலைசிறந்து விளங்கியது போன்றே அனுபவம் வாய்ந்த ஒரு ராஜதந்திரியாகவும்,
நிபுணத்துவம் நிறைந்த தலைசிறந்த தளபதியாகவும் விளங்கினார்கள். போரில் பல அனுபவம் பெற்ற
தளபதிகளையும் தனது நுண்ணறிவால் மிஞ்சியிருந்தார்கள். தான் கலந்து கொண்ட எல்லா போர்க்
களங்களிலும் அவர்களின் போர் திறனிலோ, ராணுவ முகாம்களைச் சரியான உறுதிமிக்க முக்கிய
இடங்களில் அமைத்து போர் புரிவதிலோ ஒருக்காலும் தவறு நிகழ்ந்ததில்லை. இவை அனைத்திலும்
எக்காலத்திலும் எந்தப் போர் தளபதிகளிடமும் இருந்திராத அரிய நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
உஹுத், ஹுனைன் ஆகிய போர்களில் படையினரின் தவறான முடிவுகளாலும், நபி (ஸல்) அவர்களின்
கட்டளைக்கு மாறு செய்ததாலும்தான் பின்னடைவு ஏற்பட்டது. இவ்விரண்டு போர்களில் முஸ்லிம்கள்
தோற்று பின்னடைந்த போதிலும், நபி (ஸல்) புறமுதுகுக் காட்டாமல் எதிரிகளை முன்னோக்கிச்
சென்று தங்களது துணிவையும் வீரத்தையும் நிலைநாட்டினார்கள். இதற்கு உஹுதுப் போர் ஓர்
எடுத்துக்காட்டாகும். போரில் ஏற்பட்ட தோல்வியை வெற்றியாக மாற்றினார்கள். இதற்கு ஹுனைன்
போரை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதுபோன்ற உக்கிரமான போர்களில் படையினர் புறமுதுகிட்டுத்
தோற்று திரும்பி ஓடும்போது தளபதிகள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிப்பதிலேயே குறியாய்
இருப்பார்கள். ஆனால், நபி (ஸல்) அவ்வாறு செய்யாமல், எதிரிகளை நோக்கியே முன்னேறினார்கள்.
இதுவரை நாம் கூறியது நபியவர்களின் போர் நிபுணத்துவம் பற்றிய கண்ணோட்டமாகும்.
மேலும், இப்போர்களினால் அரபுலகம் முழுவதும் பாதுகாப்புப் பெற்றது அங்கு நிம்மதி நிலவியது
குழப்பத் தீ அணைந்தது இஸ்லாமிற்கும் சிலை வழிபாட்டிற்குமிடையே நடந்த போர்களில் எதிரிகளின்
வலிமைக் குன்றியது அவர்கள் சமாதானத்திற்கு அடிபணிந்தனர் இஸ்லாமிய அழைப்புப் பணி பரவுவதற்குண்டான
தடைகளும் அகன்றன. இவையாவும் நபி (ஸல்) அவர்கள் நடத்திய அறப்போர்களினால் ஏற்பட்டவை என்பது
ஆய்வில் நமக்குத் தெரிய வரும் உண்மை. மேலும், இப்போர்களில் தன்னுடன் இருப்பவர்களில்
உண்மையான தோழர் யார்? உள்ளத்தில் நயவஞ்சகத்தை மறைத்து மோசடி செய்யத் துடிக்கும் முனாஃபிக்குகள்
யார்? என்பதை நபி (ஸல்) அவர்களால் பிரித்தறிய முடிந்தது.
இதுமட்டுமின்றி போரைத் தலைமையேற்று நடத்தும் மிகச் சிறந்த தளபதிகளையும் நபி (ஸல்) உருவாக்கினார்கள்.
இந்தத் தளபதிகள் இராக், ஷாம் போன்ற பகுதிகளில் பாரசீகர்களுடனும், ரோமர்களுடனும் போர்
புரிந்தனர். நீண்ட காலம் வல்லரசுகளாக விளங்கிய ரோமானியர்களையும் பாரசீகர்களையும் விட
மிகத் திறமையாக படையை வழி நடத்தி, தோட்டந்துரவுகளிலும் கோட்டை கொத்தளங்களிலும், மிக
ஏகபோக அடக்குமுறையுடன் அராஜக வாழ்க்கை நடத்திய எதிரிகளை அவர்களது வீடு, வாசல், நாடுகளை
விட்டு வெளியேற்றி வெற்றி கண்டனர்.
இதுபோன்றே போர்களினால் முஸ்லிம்களுக்குத் தேவையான குடியிருப்பு, விவசாய நிலங்கள், தொழில்துறை
போன்றவற்றை நபி (ஸல்) வளப்படுத்தினார்கள். வீடுவாசலின்றி அகதிகளாக வந்த மக்களின் துயர்
துடைத்தார்கள். இஸ்லாமிய அரசுக்குத் தேவையான ஆயுதங்கள், படை பலங்கள், வாகனங்கள், செலவீனங்கள்
அனைத்தையும் ஆயத்தமாக வைத்திருந்தார்கள். இவ்வனைத்து ஏற்பாடுகளையும் அல்லாஹ்வின் அடியார்கள்
மீது வரம்புமீறல், அட்யூழியம் செய்தல் ஆகிய ஏதுமின்றியே செய்து வந்தார்கள். மேலும்,
இதுநாள் வரை அறியாமைக் காலத்தில் எந்த அடிப்படைக்காகவும், நோக்கங்களுக்காகவும் போர்த்
தீ மூட்டப்பட்டு வந்ததோ அவை அனைத்தையும் அணைத்து முற்றிலும் மாற்றி அமைத்தார்கள்.
கொள்ளை, சூறையாடல், அநியாயம், அத்துமீறல், எளியோரை வாட்டுதல், கட்டடங்களை இடித்தல்,
பெண்களின் கண்ணியத்தைக் குலைத்தல், சிறுவர்கள், குழந்தைகள் போன்றவர்களுடன் கடின சித்தத்துடன்
நடந்து கொள்ளுதல், விவசாயப் பம்ர் நிலங்களைப் பாழ்படுத்துதல், அல்லாஹ்வின் பூமியில்
குழப்பம், கலகம் விளைவித்தல் போன்ற கொடுஞ்செயல்கள் நிறைந்ததாகவே போர்கள் அக்காலத்தில்
இருந்தன. ஆனால், நபி (ஸல்) உயர்ந்த இலட்சியங்களையும், சிறந்த நோக்கங்களையும், அழகிய
முடிவுகளையும் கொண்டு வருவதற்குச் செய்யப்படும் ஒரு தியாகமாக விடுதலைக் காற்றை சுவாசிக்கத்
துடிக்கும் ஒரு சுதந்திரப் போராட்டமாகப் போரை மாற்றினார்கள். மனித சமுதாயத்திற்கு கண்ணியம்
அளிப்பது அநியாயத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது நீதத்திற்குக் கட்டுப்படுவது ஆகியவற்றையே
போரின் நோக்கமாக்கினார்கள். பலமானவர், பலமில்லாதவரை சுரண்டி வாழும் தீய அமைப்பிலிருந்து
விலக்கி, பலமில்லாதவரை பலமுள்ளவராக்கி தனது நியாயத்தை அடைந்து கொள்ளும் நல்லமைப்பிற்கு
மனித சமுதாயத்தைக் கொண்டு வருவதையே போரின் இலட்சியமாக்கினார்கள். இதைத்தான் ஒடுக்கப்பட்டவர்களை,
பலவீனமானவர்களை விடுவிப்பதற்காக போர் புரியுங்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய
பாதையில் நீங்கள் போர் புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி)
“எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக!
நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து
உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் 4:75)
ஆகவே மோசடி, அநியாயம், அழிச்சாட்டியம், பாவங்கள், அத்துமீறல் ஆகிய அனைத்தில் இருந்தும்
அல்லாஹ்வின் பூமியைச் சுத்தப்படுத்தி அதில் அமைதி, பாதுகாப்பு, அன்பு, மனித நேயம் ஆகியவற்றை
பரப்புவதும் நிலைநாட்டுவதும்தான் ஜிஹாதின் நோக்கமாகும். மேலும், போருக்கென மிக உயர்ந்த
சட்ட ஒழுங்குகளை வரையறுத்து, அவற்றைத் தனது தளபதிகளும் படைகளும் பின்பற்ற வேண்டுமென
கட்டாயமாக்கினார்கள். எவ்விதத்திலும் இச்சட்டங்கள் மீறப்படுவதை நபி (ஸல்) அனுமதிக்கவில்லை.
சுலைமான் இப்னு புரைதா (ரழி) தனது தந்தையின் வாயிலாக அறிவிக்கின்றார்: நபி (ஸல்) பெரிய
அல்லது சிறிய படைக்குத் தளபதியை நியமித்தால் “நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் உங்களது
படையினரிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்” என தளபதிக்கு விசேஷமாக வலியுறுத்தி
உபதேசம் புரிந்துவிட்டு, அவருக்கும் படையினருக்கும் சேர்த்து கீழ்காணும் உபதேசம் செய்வார்கள்.
“அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் பெயரால் போரிடுங்கள் அல்லாஹ்வை நிராகரிப்போருடன்
போர் செய்யுங்கள் போரிடுங்கள்! களவாடாதீர்கள்! மோசடி செய்யாதீர்கள்! உறுப்புகளைச் சிதைக்காதீர்கள்!
குழந்தைகளைக் கொல்லாதீர்கள்!”
மேலும், நீங்கள் எளிதாக்குங்கள் சிரமமாக்காதீர்கள் அமைதியை நிலைநாட்டுங்கள் வெறுப்படையச்
செய்யாதீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம், முஃஜமுத் தப்ரானி)
நபி (ஸல்) ஒரு கூட்டத்தார் மீது தாக்குதல் தொடுக்கச் செல்கையில், இரவு நேரமாக இருப்பின்
காலை வரை பொறுத்திருப்பார்கள். உயிர்களை நெருப்பிலிட்டு பொசுக்குவதை நபி (ஸல்) வன்மையாகத்
தடுத்தார்கள். சரணடைந்தவர்களைக் கொல்லக் கூடாது பெண்களை கொல்வதோ அடிப்பதோ கூடாது கொள்ளையடிக்கக்
கூடாது கொள்ளையடிக்கப்பட்ட பொருளை உண்பது, செத்த பிணத்தை உண்பதை விட கேவலமானது, விவசாய
நிலம் மற்றும் மரங்களை அழிக்கக் கூடாது, ஆனால், எதிரியை அடக்குவதற்கு இதைத் தவிர வேறு
வழி ஏதும் தென்படாவிட்டால் நிர்ப்பந்த சூழ்நிலையில் நிலம் மற்றும் மரங்களை அழிக்கலாம்.
இவ்வாறு போரில் கடைபிடிக்க வேண்டிய முறைகளை நபி (ஸல்) தமது தோழர்களுக்குக் கற்றுக்
கொடுத்தார்கள்.
மேலும், மக்கா வெற்றியின் போது “காயம்பட்டோரை தாக்காதீர்கள்! புறமுதுகுக் காட்டி ஓடுபவரைத்
துரத்தாதீர்கள்! கைதிகளைக் கொல்லாதீர்கள்” என ஆணை பிறப்பித்தார்கள்.
ஒப்பந்தம், உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் கொல்லப்படுவதை மிக வன்மையாகக் கண்டித்து
“யார் ஒருவர் உடன்படிக்கை செய்து கொண்டவரைக் கொன்று விட்டாரோ அவர் சுவன வாடையை நுகர
மாட்டார். சுவன வாடையை நாற்பது ஆண்டுகள் தூரமாக இருந்தாலும் நுகரலாம்” என நபி (ஸல்)
எச்சரித்தார்கள்.
இன்னும் பல உயர்வான அடிப்படைகளை உருவாக்கியதன் மூலம் அறியாமைக் கால அசுத்தத்தை விட்டு
போர்களைச் சுத்தமாக்கி அவற்றைப் புனிதப் போராக, மனிதநேயமிக்க ஜிஹாதாக மாற்றினார்கள்.
(ஜாதுல் மஆது)