பக்கம் -105-
6) உத்ரா குழுவினர்
இச்சமூகத்தைச் சார்ந்த 12 பேர்கள் ஹிஜ்ரி 9, ஸஃபர் மாதம் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்.
ஹம்ஜா இப்னு நுஃமான் என்பவரும் அவர்களில் ஒருவர். தாங்கள் யார் என அவர்களிடம் கேட்கப்பட்ட
போது, “நாங்கள் உத்ரா சமூகத்தவர். குஸையின் தாய்வழிச் சகோதரர்கள். குஜாஆ மற்றும் பக்கர்
வமிசத்தாரை மக்காவிலிருந்து வெளியேற்றுவதில் குஸைக்கு உதவி செய்தவர்கள். எங்களுக்கு
உங்களுடன் உறவும் ரத்தபந்தமும் இருக்கின்றன” என பதில் கூறினர். மிக்க கண்ணியத்துடன்
அவர்களை நபி (ஸல்) அவர்கள் வரவேற்று அதிவிரைவில் ஷாம் நாடு வெற்றி கொள்ளப்படும் என்ற
நற்செய்தியையும், குறிகேட்கக் கூடாது அறியாமைக் கால வழக்கப்படி அறுத்துப் பலியிடக்
கூடாது என்றும் கூறினார்கள். அவர்களும் இஸ்லாமை மனமுவந்து ஏற்று பல நாட்கள் தங்கியிருந்து
பின்னர் தங்களது ஊர்களுக்குத் திரும்பினர்.
7) பலிய் குழுவினர்
இக்குழுவினர் ஹிஜ்ரி 9ல், ரபீஉல் அவ்வல் மாதம் மதீனா வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தனர்.
இவர்களின் தலைவர் அபூ ழுபைப் நபி (ஸல்) அவர்களிடம் “விருந்தோம்பல் செய்வதற்கு (நன்மை)
நற்கூலி கிடைக்குமா?” என வினவினார். “ஆம்! செல்வந்தர்களாயினும் அல்லது ஏழைகளாயினும்
சரியே! நீங்கள் புரியும் ஒவ்வொரு நற்காரியங்களும் நன்மை தரக் கூடியதே” என பதிலளித்தார்கள்.
“விருந்தோம்பலின் கால அளவு எவ்வளவு?” என அபூழுபைப் கேட்ட போது “மூன்று நாட்கள்” என
நபி (ஸல்) பதில் கூறினார்கள். அவர் “வழிதவறி வந்துவிட்ட ஆடுகளைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?”
என்று கேட்டார். “அது உமக்கு அல்லது உனது சகோதரருக்கு அல்லது ஓநாய்க்கு” என பதில் கூறினார்கள்.
வழிதவறிய ஒட்டகங்களைப் பற்றி கேட்க “அதைப் பற்றி உனக்கென்ன கவலை. அது அவருடைய எஜமானனைத்
தேடிச் சென்று விடும் அல்லது அதன் சொந்தக்காரர் அதனை தேடிக் கொள்வார்” என நபி (ஸல்)
பதில் கூறினார்கள்.
8) ஸகீஃப் குழுவினர்
இவர்கள் ஹிஜ்ரி 9, ரமழான் மாதம் வந்தனர். ஹிஜ்ரி 8ல், துல்கஅதா மாதம் நபி (ஸல்) தாயிஃப்
போர் முடிந்து மதீனா திரும்பும் வழியில் இவர்களின் தலைவர் உர்வா இப்னு மஸ்வூத் ஸகஃபி
நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாமைத் தழுவினார். தான் தலைவர் என்பதாலும், தனது பேச்சை
மக்கள் கேட்டு நடக்கின்றனர் என்பதாலும், தன்னை மக்கள் தங்கள் வீட்டு கன்னிப் பெண்களை
விட அதிகம் நேசிக்கிறார்கள் என்பதாலும், தான் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவர்களை அழைத்தால்
அதை ஏற்றுக் கொள்வார்கள் என்றெண்ணி தனது சமூகத்தாரை இஸ்லாமிற்கு அழைத்தார். ஆனால்,
அம்மக்களோ அவன் எண்ணத்திற்கு நேர் மாற்றமாக நடந்தனர். நாலாத் திசைகளிலிருந்தும் அவரை
அம்பெறிந்துக் கொன்றே விட்டனர்.
சில மாதங்கள் கழிந்து அவர்கள் ஒன்றுகூடி “நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான அரபிகள்
இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டனர். அவர்களை எதிர்க்கும் ஆற்றல் நம்மிடமில்லை. நாம் என்ன
செய்யலாம்?” என்று ஆலோசனை செய்தனர். இறுதியில், அப்து யாலீல் இப்னு அம்ரு என்பவரைத்
தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்ப முடிவு செய்து, அது தொடர்பாக அவரிடம் பேசினர்.
இஸ்லாமைக் கற்று, அதனை ஏற்றுத், திரும்ப மக்களிடம் வந்து கூறும் போது உர்வாவுக்கு ஏற்பட்ட
கதி நமக்கும் ஏற்படுமோ என அஞ்சி அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். என்னுடன்
உங்களது ஆட்கள் சிலரையும் அனுப்பி வைத்தால் சென்று வருகிறேன் என்ற ஒரு மாற்று ஆலோசனையை
முன் வைத்தார். அவர்கள் அதனை ஏற்று மாலிக் குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும், தங்களது
நட்புக் கோத்திரங்களிலிருந்து இருவரையும் அவருடன் அனுப்ப ஒப்புக் கொண்டனர். ஆக மொத்தம்,
ஆறு நபர்கள் மதீனா நோக்கி பயணமானார்கள்.
அவர்களில் உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் ஸஃகபீ என்பவரும் இருந்தார். அவர்தான் அவர்களில்
மிகச் சிறிய வயதுடையவர். அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளியின் ஓரத்தில் அவர்கள் தங்குவதற்காகக்
கூடாரம் ஒன்றை நபி (ஸல்) அமைத்துத் தந்தார்கள். குர்ஆன் ஓதுவதை கேட்கவும், மக்கள் தொழுவதைப்
பார்த்து கற்றுக் கொள்ளவும் அவர்களை பள்ளியிலேயே தங்க வைத்தார்கள். இவர்கள் நபி (ஸல்)
அவர்களிடமும் அவ்வப்போது வந்து போய் கொண்டிருந்தார்கள். இக்குழுத் தலைவர், நபியவர்களிடம்
“உங்களுக்கும் எங்களுக்குமிடையே ஓர் ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தர வேண்டும். அதில்,
விபச்சாரம், மது, வட்டி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும். எங்களின் பெரிய சிலையான
லாத்தை உடைக்கக் கூடாது. தொழுகையை எங்களுக்கு விதிவிலக்கு ஆக்க வேண்டும். எங்களின்
மற்ற சிலைகளை நாங்கள் உடைக்க மாட்டோம். இந்த அம்சங்கள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தில்
இடம் பெற வேண்டும்” என்று கூறினார்.
இவர்களின் எந்த ஒப்பந்தத்தையும் நபி (ஸல்) ஏற்க மறுத்து விட்டார்கள். இவர்கள் அனைவரும்
சபையை விட்டு அகன்று தனியாக ஆலோசனை செய்தனர். பணிந்து விடுவதைத் தவிர வேறு வழி இல்லாததால்,
நபியவர்களிடம் வந்து லாத் சிலையை நாங்கள் உடைக்க மாட்டோம். நீங்கள்தான் உடைக்க வேண்டும்
என்ற நிபந்தனையுடன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். நபி (ஸல்) அவர்களும் அதனை ஒத்துக் கொண்டார்கள்.
இந்த அடிப்படையில் அவர்களுக்கு நபி (ஸல்) ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள்.
அவர்களுக்கு வயதில் குறைந்த உஸ்மான் இப்னு அபுல் ஆஸையே தலைவராக நியமித்தார்கள். ஏனெனில்,
அவர் மார்க்கத்தை அறிவதிலும் குர்ஆனை ஓதுவதிலும் மிக்க ஆர்வத்துடன் விளங்கினார். அந்தக்
குழுவினர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வரும்போது தங்களது பொருட்களை பாதுகாப்பதற்கு
உஸ்மானை கூடாரத்தில் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். மதிய நேரத்தில் குழுவினர் ஓய்வெடுக்கக்
கூடாரத்திற்கு வந்த பின்பு, இவர் நபியவர்களிடம் சென்று குர்ஆனையும் மார்க்கத்தையும்
கற்றுக் கொள்வார்.
அந்நேரம் நபி (ஸல்) அவர்களும் உறங்கிக் கொண்டிருந்தால் அபூபக்ரிடம் சென்று கற்பார்.
(அவர் தமது கூட்டத்தினருக்கு மிகுந்த நன்மைக்குரியவராக விளங்கினார். நபி (ஸல்) அவர்களின்
மரணத்திற்குப் பின் மக்களில் பலர் இஸ்லாமை விட்டு வெளியேறிய போது ஸகீஃப் வமிசத்தவரும்
இஸ்லாமை விட்டு வெளியேறத் துடித்தனர். அப்போது “ஸகீஃப் வமிசத்தாரே! மக்களில் நீங்கள்
இறுதியாகவே இஸ்லாமைத் தழுவினீர்கள். அதனை விட்டு முதலாவதாக நீங்கள் விலகி விடாதீர்!”
என்று எச்சரித்தார். அவன் இந்த அறிவுரையை ஏற்று இஸ்லாமில் உறுதியாகி விட்டனர்.)
நாம் இப்போது வரலாற்றைப் பார்ப்போம்.
வந்தவர்கள் தாம்ஃபுக்குத் திரும்பி தமது சமூகத்தாரைச் சந்தித்தனர். நடந்த நிகழ்வுகளை
மறைத்து விட்டு நபி (ஸல்) உங்கள் மீது போர் தொடுக்க முனைகிறார்கள் என எச்சரித்து விட்டு
அதற்காக தாங்கள் கவலை, கைசேதத்துடன் இருப்பதாகக் காட்டிக் கொண்டனர். மேலும், இஸ்லாமை
ஏற்க வேண்டும் விபச்சாரம், மது, வட்டி மற்றும் அனைத்து தீமையான காரியங்களில் இருந்தும்
விலகியிருக்க வேண்டும் அவ்வாறு செய்யாவிடின் போரைத் தவிர வேறு கதி கிடையாது என்று நபி
(ஸல்) கூறியதாக அக்குழுவினர் கூறினார்கள். இதனைக் கேட்ட ஸகீஃப் கிளையினருக்கும் சினம்
தலைக்கேறியது. நாமும் போருக்குத் தயாராவோம் என்று கூறி இரண்டு மூன்று நாட்களாக போருக்கான
ஆயத்தம் செய்தனர்.
இந்நிலையில் அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் பயத்தை ஏற்படுத்தினான். அவர்களோ தூதுக்
குழுவினரை அழைத்து “நீங்கள் திரும்பவும் அவரிடம் (நபியிடம்) செல்லுங்கள். அவர் கூறும்
அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றனர். அக்குழுவினர் அப்போது உண்மை நிலையை விவரித்தனர்.
அதனைக் கேட்டு ஸகீஃப் கூட்டத்தார் மிக சந்தோஷமாக இஸ்லாமில் இணைந்தனர்.
லாத்தை உடைப்பதற்காக நபி (ஸல்) தங்களின் தோழர்கள் பலரைக் காலித் இப்னு வலீது (ரழி)
தலைமையில் அனுப்பினார்கள். இக்குழுவில் இடம்பெற்ற முகீரா இப்னு ஷுஃபா (ரழி) ஒரு கோடரியை
எடுத்துக் கொண்டு “நான் இப்பொழுது ஸகீஃப் கிளையினரால் உங்களை சிரிப்பில் ஆழ்த்துகிறேன்
பாருங்கள்” என்று கூறி லாத் சிலை இருந்த பீடத்தை இடித்து விட்டுத் தானாக வேண்டுமென்றே
கீழே வீழ்ந்தார். அதைக் கண்ட கூட்டத்தார் “அல்லாஹ் முகீராவை நாசமாக்கி விட்டான். எங்களது
(பெண் கடவுள்) இறைவி முகீராவைக் கொன்று விட்டது” என்று துடியாய் துடித்தனர். அதனைக்
கேட்ட முகீரா வெகுண்டெழுந்து “அல்லாஹ் உங்களை நாசமாக்குவானாக! இது என்ன? கல்லும் மண்ணும்
சேர்ந்த கலவைதானே?” என்று எள்ளி நகையாடி லாத்தை உடைத்தெறிந்து அதன் மதில் மேல் ஏறினார்.
அவரைத் தொடர்ந்து முஸ்லிம்களும் பாய்ந்து ஏறி இடித்துத் தள்ளினர். பீடங்களைத் தோண்டி,
அங்கிருந்த செல்வங்களை அள்ளிக் கொண்டு காலித் (ரழி) தலைமையில் முஸ்லிம்கள் நபி (ஸல்)
அவர்களிடம் திரும்பி வந்தனர். இந்நிகழ்ச்சி ஸகீஃப் கிளையினருக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.
இவ்வெற்றிக்காக நபி (ஸல்) அல்லாஹ்வை புகழ்ந்து துதி செய்தார்கள். பின்னர் தோழர்கள்
கொணர்ந்த கனீமா பொருட்களை அவர்களுக்கே பங்கு வைத்துக் கொடுத்தார்கள். (ஜாதுல் மஆது,
இப்னு ஹிஷாம்)
9) யமன் நாட்டு அரசர்களின் கடிதங்கள்
நபி (ஸல்) தபூக் போரிலிருந்து மதீனா வந்த பின் யமன் நாட்டு ஹிம்யர் பகுதி அரசர்களின்
கடிதம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தது. அந்த அரசர்களின் பெயர்கள் வருமாறு:
1) அல்ஹாரிஸ் இப்னு அப்து குலால், 2) நுஅய்ம் இப்னு அப்து குலால், 3) நுஃமான், 4) கைலு
தீருஅய்ன், 5) ஹம்தான், 6) முஆஃபிர்.
இவர்கள் மாலிக் இப்னு முர்ரா ரஹாவியை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி நாங்கள் இணைவைத்தலையும்
இணைவைப்பவர்களையும் விட்டு விலகி இஸ்லாமை ஏற்றோம் என்று தெரிவித்தனர்.
நபி (ஸல்) அந்த அரசர்களின் இஸ்லாமிய வருகையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.
அதில் முஸ்லிம்களின் சலுகைகள், அவர்களின் கடமைகள் முதலியவற்றை விவரித்தார்கள். ஒப்பந்தக்காரர்கள்
ஜிஸ்யா வரியை முறையாக செலுத்தும் வரை அல்லாஹ் உடைய, அவனது தூதருடைய பாதுகாவல் உண்டு
என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். மேலும், முஆத் இப்னு ஜபல் (ரழி) தலைமையில்
தம் தோழர்களை மார்க்கக் கல்விப் பணிக்காக அம்மக்களிடம் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.
மேலும், யமனின் மேற்புறத்தில் உள்ள ‘அத்ன்’ பகுதியிலுள்ள சுகூன், சகாஸிக் என்ற இரு
ஊர்களுக்கு இடையிலுள்ள இடங்களுக்கும் பொறுப்பாளியாக்கினார்கள். முஆத் அவர்கள் நீதிபதியாகவும்,
தலைமை ராணுவ அதிகாரியாகவும், ஜகாத், ஜிஸ்யா ஆகியவற்றை வசூல் செய்யும் அதிகாரியாகவும்,
மக்களுக்குத் தொழுகை நடத்தும் இமாமாகவும் தலைசிறந்து விளங்கினார்கள்.
அபூமூஸா அஷ்அயை யமனின் கீழ்புறத்தில் உள்ள ஜுபைத், மஃரப், ஜமா, ஸால் ஆகிய பகுதிகளுக்கு
பொறுப்பாளியாக்கினார்கள். “நீங்கள் இருவரும் எளிமையாக்குங்கள் கடினமாக்காதீர்கள். நற்செய்தி
நவிலுங்கள் வெறுப்பூட்டாதீர்கள். இணக்கமாக இருங்கள் பிணங்கிக் கொள்ளாதீர்கள்” என நபி
(ஸல்) அழகிய அறிவுரை கூறியனுப்பினார்கள். நபி (ஸல்) மரணிக்கும் வரை முஆத் (ரழி) யமனிலேயே
தங்கிவிட்டார்கள். அபூமூஸா அஷ்அ (ரழி) நபியவர்களுடன் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொண்டார்கள்.
10) ஹம்தான் குழுவினர்
நபி (ஸல்) தபூக் போரிலிருந்து திரும்பிய பின்பு இக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம்
வந்தனர். இவர்கள் கேட்டதை நபி (ஸல்) அவர்கள் எழுதிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு மாலிக்
இப்னு நமத் (ரழி) என்பவரைத் தலைவராக்கினார்கள். மேலும், ஹம்தான் கிளையினரில் யாரெல்லாம்
முஸ்லிமாவார்களோ அவர்களுக்கும் இவரையே பொறுப்பாளியாக்கினார்கள். ஹம்தான் கிளையில் முஸ்லிமாகாதவர்களுக்கு
இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதற்காக நபி (ஸல்) காலித் பின் வலீதை (ரழி) அனுப்பி வைத்தார்கள்.
அவருடைய ஆறு மாத உழைப்பில் ஒருவர் கூட முஸ்லிமாகவில்லை.
இதையறிந்த நபி (ஸல்) அலீ இப்னு அபூதாலிபை அப்பணிக்காக அனுப்பி, காலிதை திரும்ப அழைத்துக்
கொண்டார்கள். மேலும், ஹம்தான் கிளையாருக்குப் படித்து காண்பிப்பதற்காக கடிதம் ஒன்றைக்
கொடுத்தனுப்பினார்கள். அலீ (ரழி) அக்கடிதத்தை அவர்கள் முன்னிலையில் படித்துக்காட்டியே
இஸ்லாமிய அழைப்புப் பணி செய்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அம்மக்கள் அனைவரும் இஸ்லாமை
ஏற்றுக் கொண்டார்கள். இந்த நற்செய்தியை நபி (ஸல்) அவர்களுக்கு அலீ (ரழி) கடிதம் மூலம்
தெரியப்படுத்தினார்கள். நபி (ஸல்) இச்செய்தியை செவியேற்று ஸஜ்தா செய்து, பிறகு தiலையை
உயர்த்தி, (ஸலாமுன் அலாஹம்தான்) “ஹம்தான் கிளையினருக்கு ஈடேற்றம் உண்டாகுக!” என இருமுறைக்
வேண்டினார்கள்.
11) ஃபஜாரா குழுவினர்
நபி (ஸல்) தபூக்கிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 9ல் இவர்கள் வந்தனர். இக்குழுவில்
பத்து பேர்கள் இடம் பெற்றிருந்தனர். அனைவரும் இஸ்லாமை ஏற்றே நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர்.
இவர்கள் “தங்கள் ஊர் வறுமையால் வாடுகிறது பஞ்சத்தால் நாங்கள் அவதிப்படுகிறோம்” என்று
நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அவர்கள் மீது மனமிரங்கி மிம்பரில் ஏறி இரு கரங்களையும்
ஏந்தி மழைக்காக துஆச் செய்தார்கள்: “அல்லாஹ்வே! நீ படைத்த ஊர்களுக்கும், கால்நடைகளுக்கும்
நீர் புகட்டுவாயாக! உன் கருணையை அவர்களுக்கு அருள்வாயாக! வாடிப் போயிருக்கும் நீ படைத்த
ஊரை உயிர்பிப்பாயாக! அல்லாஹ்வே! எங்களைக் காப்பாற்றும் வளமிக்க, செழுமை மிக்க, விசாலமான,
அடர்த்தியான, தாமதமின்றி, உடனடியான, இடையூறின்றி பலன்தரக்கூடிய மழையை எங்களுக்கு இறக்கியருள்வாயாக!
அல்லாஹ்வே! அது கருணை பொழியும் மழையாக இருக்க வேண்டும் வேதனை தரக்கூடியதாக, தகர்க்கக்
கூடியதாக, மூழ்கடிக்கக் கூடியதாக, அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வே! மழையை
இறக்குவாயாக! எதிரிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!” (ஜாதுல் மஆது)