பக்கம் -111-
நான்கு நாட்களுக்கு முன்பு
மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்கு வலி கடுமையானது.
மக்களை நோக்கி “வாருங்கள்! நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும்
நீங்கள் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது வீட்டில் இருந்த பலல் உமர்
(ரழி) அவர்களும் ஒருவர். “நபி (ரழி) அவர்களுக்கு வலி அதிகமாகிவிட்டது. உங்களிடம் குர்ஆன்
இருக்கிறது. அல்லாஹ்வின் வேதமே உங்களுக்குப் போதுமானது” என்று உமர் (ரழி) மக்களிடம்
கூறினார்கள். இதனால் அங்கிருந்தவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை நிலவியது. சிலர்
“நபி (ஸல்) நமக்கு எழுதித் தரட்டும்” என்று கூற, மற்றும் சிலர் உமர் (ரழி) கூறியது
போல கூறினார்கள். இரு சாரார்களிடையே கருத்து வேற்றுமை விவாதமாக மாறவே “நீங்கள் இப்போது
என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
அன்றைய தினம் நபி (ஸல்) மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்:
1) யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற
வேண்டும்.
2) இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல்
செய்ய வேண்டும்.
3) மூன்றாவது விஷயத்தை அறிவிப்பாளர் மறந்துவிட்டார். அது இம்மூன்றில் ஒன்றாக இருக்கலாம்:
1) அல்லாஹ்வின் வேதத்தையும் நபி வழியையும் நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். 2) உஸாமாவின்
படையை அனுப்பி விடுங்கள். 3) தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் பேணுங்கள்.
தனக்கு நோய் கடினமாக இருந்தும் அன்றைய தினத்தின் (மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்
வியாழக்கிழமை) தொழுகை அனைத்தையும் நபி (ஸல்) அவர்களே தொழ வைத்தார்கள். அன்றைய தினத்தின்
மஃரிபு தொழுகையில் ‘வல் முர்சலாத்தி உர்ஃபன்’ என்ற சூராவை ஓதித் தொழ வைத்தார்கள். (ஸஹீஹுல்
புகாரி)
அன்றைய தினம் இஷா நேரத்தில் மேலும் நோயின் வேகம் அதிகமானது. நபி (ஸல்) அவர்களால் பள்ளிக்கு
வரமுடியவில்லை. இந்நிலையைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதைக் கேட்போம். “மக்கள் தொழுதார்களா?”
என நபி (ஸல்) கேட்டார்கள். “இல்லை இறைத்தூதரே! தங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்றோம்.
எனக்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள் எனக் கூற, நாங்கள் தண்ணீர் வைத்தோம்.
நபி (ஸல்) குளித்து விட்டு செல்வதற்கு முனைந்தார்கள். ஆனால், அவர்களை மயக்கம் ஆட்கொண்டது.
சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து “மக்கள் தொழுதார்களா?” என்றார்கள். நாங்கள்
முதலில் கூறியது போல் இம்முறையும் பதில் கூறினோம். மீண்டும் தண்ணீர் வரவழைத்து முன்னர்
போல குளித்தார்கள். பிறகு, நபி (ஸல்) அபூபக்ரை தொழ வைக்கும்படி கூறினார்கள். (ஸஹீஹுல்
புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அப்போதிலிருந்து பதினேழு நேர தொழுகைகளை நபி (ஸல்) நோயுடன் இருக்கும் போது அபூபக்ர்
(ரழி) மக்களுக்குத் தொழ வைத்தார்கள். (வியாழன் இஷாவிலிருந்து திங்கட்கிழமை ஃபஜ்ரு தொழுகை
வரை) “இந்நாள்களில் அபூபக்ர் (ரழி) அவர்களைத் தொழ வைக்க சொல்ல வேண்டாம், காரணம், மக்கள்
அதைத் துர்குறியாக எடுத்துக் கொள்வர்” என ஆயிஷா (ரழி) மூன்று அல்லது நான்கு முறை நபி
(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அதனை மறுத்து விட்டார்கள். “நீங்கள் தானே
யூசுஃபுடைய அந்தத் தோழிகள். அபூபக்ரே மக்களுக்கு தொழ வைக்கட்டும்” என நபி (ஸல்) கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மூன்று நாட்களுக்கு முன்பு...
நபி (ஸல்) இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்:
“அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர
மரணிக்க வேண்டாம்.” (தபகாத் இப்னு ஸஅது, முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா)
இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு...
அது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை. நபி (ஸல்) உடல் நலனில் முன்னேற்றத்தை உணர்ந்தார்கள்,
இரண்டு பேர் உதவியுடன் தங்களது அறையிலிருந்து பள்ளிக்கு வந்தார்கள். அப்போது அபூபக்ர்
(ரழி) ளுஹ்ர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்களை அபூபக்ர் (ரழி) பார்த்தவுடன்
நகர்ந்து கொள்ள முயன்றார்கள். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என சைகை செய்தார்கள்.
பிறகு, என்னை அபூபக்ர் அருகில் அமர வையுங்கள் என்று கூற, அவர்களை அபூபக்ரின் இடப்பக்கத்தில்
உட்கார வைத்தார்கள். நபி (ஸல்) தொழ வைக்க அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூபக்ர்
(ரழி) தொழது கொண்டு, நபியவர்களின் தக்பீரை மக்களுக்கு கேட்கும்படி சப்தமிட்டுக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி)
ஒரு நாள் முன்பு...
நபி (ஸல்) மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள அடிமைகளை
அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும், தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத்
தர்மம் செய்தார்கள். தங்களுடைய ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அன்றிரவு நபி (ஸல்) அவர்களின் வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு
பெண்ணிடம் கொடுத்தனுப்பி அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி ஆயிஷா (ரழி) கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கவச ஆடை முப்பது ‘சாஃ’ கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது.
(ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅது, முஸ்னது அஹ்மது)
வாழ்வின் இறுதி நாள்
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர்
(ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய
அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து
ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர்
(ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை
குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் ‘உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்’
என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை.
முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப்
பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை
இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:
இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே
வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில்
நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்”
என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
மேலும், “அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா” என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள்.
(ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) “எனது தந்தைக்கு
ஏற்பட்ட கஷ்டமே!” என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே
சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள
வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும்
நல்கினார்கள்.
முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின்
விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். “ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின்
வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள்
துண்டாவதை நான் உணர்கிறேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி (ஸல்) தூக்கி எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப
போர்த்தினால் முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள். இந்நிலையில் சிலவற்றை
நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம்
யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை
வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக்
கூடாது.” (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)
தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை
அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி)