பக்கம் -45-

இருதரப்பிலும் கொல்லப்பட்டவர்கள்

இப்போர் இறைநிராகரிப்பாளர்களுக்கு பெரிய தோல்வியாகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு பெரிய வெற்றியாகவும் முடிந்தது. இப்போரில் முஸ்லிம்களில் முஹாஜிர்கள் (மக்காவாசிகள்) ஆறு நபர்களும், அன்சாரிகள் (மதீனாவாசிகள்) எட்டு நபர்களுமாக மொத்தம் பதினான்கு நபர்கள் வீரமரணம் எய்தினர்.

இணைவைப்பவர்களுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டன. அவர்களில் எழுபது நபர்கள் கொல்லப்பட்டனர். எழுபது நபர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும் பாலானவர்கள் மூத்த தலைவர்களாகவும் தளபதிகளாவும் இருந்தனர்.

போர் முடிந்து புறப்படும் முன் எதிரிகளில் கொல்லப்பட்டவர்களுக்கு அருகில் நின்று “நீங்கள் உங்களது இறைத்தூதருக்கு மிகக் கெட்ட உறவினராக இருந்தீர்கள். நீங்கள் என்னைப் பொய்ப்பித்தீர்கள் மற்றவர்கள் என்னை மெய்ப்படுத்தினார்கள். நீங்கள் எனக்கு துரோகம் செய்தீர்கள் மற்றவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். நீங்கள் என்னை ஊரைவிட்டு வெளியேற்றினீர்கள் மற்றவர்கள் எனக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அவர்கள் அனைவரும் பத்ரின் கிணறுகளில் ஒரு கிணற்றில் போடப்பட்டனர்.

அபூதல்ஹா (ரழி) கூறுகிறார்கள்: பத்ர் போரன்று நபி (ஸல்) 24 குறைஷித் தலைவர்களின் சடலங்களை நாற்றம் பிடித்த கிணற்றில் வீசி எறியும்படி கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) போரில் வெற்றி பெற்றால் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்குவார்கள். அவ்வாறே பத்ர் போர் முடிந்தப் பின் அவ்விடத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள். மூன்றாவது நாள் தனது வாகனத்தை தயார் செய்யக் கூறினார்கள். தனது தோழர்களுடன் எதிரிகளின் சடலங்கள் போடப்பட்ட கிணற்றுக்கு அருகில் நின்று அவர்களை அவர்களது தகப்பனாருடைய பெயருடன் அழைத்து “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! முன்பே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டிருந்தால் இப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே! நிச்சயமாக எங்களது இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் உண்மையாக பெற்றோம். உங்களது இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையாக நீங்கள் பெற்றீர்களா?” என்றார்கள். அப்போது உமர் (ரழி) “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடம் என்ன பேசுகிறீர்கள்!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) “முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ! அவன் மீது ஆணையாக! நான் கூறுவதை அவர்களைவிட நீங்கள் அதிகம் கேட்கும் திறன் உள்ளவர்களாக இல்லை” என்றார்கள்.

மற்றொரு அறிவிப்பில்: “அவர்களைவிட நீங்கள் கேட்கும் திறன் அதிகமுடையவர்களாக இல்லை. ஆனால் அவர்களால் பதில் தர முடியாது” என வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

தோல்வியை மக்கா அறிகிறது

பத்ர் மைதானத்திலிருந்து இணைவைப்பவர்கள் விரண்டோடினர் பள்ளத்தாக்குகளிலும் மலைக்கணவாய்களிலும் சிதறினர் மக்காவின் பாதையைப் பயத்துடனே முன்னோக்கினர் வெட்கத்தால் மக்காவிற்குள் நுழைவதற்கே யோசித்தனர்.

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: குறைஷிகளுக்கு ஏற்பட்ட நிலையை முதன் முதலில் மக்காவாசிகளுக்குச் சொல்லியவர் ஹைசுமான் இப்னு அப்துல்லாஹ் குஜாம் என்பவர்தான். இவரிடம் மக்காவாசிகள் “என்ன செய்தியுடன் வந்திருக்கிறாய்?” என்றனர். அதற்கவர் “உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல்கம் இப்னு ஹிஷாம், உமையா இப்னு கலஃப் இன்னும் பல குறைஷித் தலைவர்களும் கொல்லப்பட்டனர்” என்று பல குறைஷித் தலைவர்களின் பெயர்களை வரிசையாக குறிப்பிட்டார். கஅபாவில் ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் அமர்ந்திருந்த ஸஃப்வான் இப்னு உமையா “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவனுக்கு புத்தி சரியில்லை. இவனைச் சோதித்துப் பார்ப்போம், இவனிடம் நான் இப்போது எங்கே இருக்கிறேன் என்று கேளுங்கள்! சரியாகக் கூறுகிறானா என பார்ப்போம்” என்றார். அதேபோல் மக்கள் “ஸஃப்வான் இப்னு உமைய்யா எங்கே இருக்கிறார்” என்று ஹைசுமானிடம் வினவினர். அதற்கவர் “இதோ! ஸஃப்வான் ஹஜருல் அஸ்வதிற்கு அருகில் அமர்ந்திருக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரது தந்தையும், இவரது சகோதரரும் கொல்லப்படுவதை நான் பார்த்தேன்” என்றார்.

நபி (ஸல்) அவர்களின் அடிமை அபூராபிஃ (ரழி) கூறுகிறார்கள்: நான் ஆரம்பத்தில் அப்பாஸ் (ரழி) அவர்களின் அடிமையாக இருந்தேன். அப்பாஸ் (ரழி) அவர்கள் வீட்டில் அனைவரும் இஸ்லாமை ஏற்றிருந்தனர். அதாவது அப்பாஸ் (ரழி), உம்முல் ஃபழ்ல் (ரழி) மற்றும் நான் ஆக அனைவரும் இஸ்லாமை ஏற்றிருந்தோம். ஆனால், அப்பாஸ் (ரழி) தான் முஸ்லிமானதை மறைத்திருந்தார். அபூலஹப் பத்ரில் கலந்துகொள்ளாமல் மக்காவில் தங்கியிருந்தான். பத்ருடைய செய்தியினால் அல்லாஹ் அவனது அகம்பாவத்தை அழித்து அவனை அவமானப்படுத்தினான். அச்செய்தியினால் எங்கள் உள்ளத்தில் துணிவும் வலிமையும் பிறந்தது. ஆனால், நானோ ஒரு பலவீனமானவன். ஜம்ஜம் கிணற்றுக்கு அருகிலுள்ள அறையில் அமர்ந்து அம்புகள் செய்வது எனது தொழிலாக இருந்தது. ஒரு நாள் நான் அம்புகள் செய்வதில் ஈடுபட்டிருந்தேன். உம்முல் ஃபழ்லு எனக்கருகில் அமர்ந்திருந்தார். பத்ரிலிருந்து வந்த செய்தியால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தோம். அதுசமயம் அபூலஹப் தனது கால்களை மிக மோசமாக பூமியில் தேய்த்தவனாக வந்து எங்களது அறையின் ஓரத்தில் அமர்ந்தான். அவனது முதுகு எனது முதுகைப் பார்த்தவாறு இருந்தது.

அப்போது “இதோ! அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் வருகிறார்” என்று மக்கள் கூறினர். அபூலஹப் அபூஸுஃப்யானிடம் “எனக்கருகில் வா! உன்னிடம் உண்மையான செய்திகள் இருக்கலாம்” என்று கூறினான். அபூஸுஃப்யான் இப்னு ஹாரிஸ் அபூலஹபுக்கு அருகில் வந்து அமர்ந்தார். மக்கள் அவரை சுற்றி நின்றுகொண்டனர். அபூஸுஃப்யானிடம் அபூலஹப் “எனது சகோதரன் மகனே! மக்களின் செய்தி என்னவானது?” என்றான். அதற்கு அபூஸுஃப்யான் “முஸ்லிம்களை நாங்கள் சந்தித்த போது அவர்களுக்கு எங்களது புஜங்களைத் தந்தோம். முஸ்லிம்கள் நாடியவாறு எங்களைக் கொன்றனர் நாடியவாறு சிறைபிடித்தனர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமது மக்கள் இந்தளவு பலம் இழந்ததற்கு நான் அவர்களைக் குறை கூறவில்லை. வானத்திற்கும், பூமிக்கும் மத்தியில் சிறந்த குதிரைகளின் மீது வீற்றிருந்த வெள்ளை நிறத்தில் பலரை நாங்கள் பார்த்தோம். அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. எங்களால் அவர்களை எதிர்க்கவும் முடியவில்லை” என்று கூறினார்.

அபூராஃபிஃ (ரழி) தொடர்ந்து கூறுகிறார்: நான் அறையின் ஓரத்தை விலக்கி, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் வானவர்கள்” என்றேன். இதைக் கேட்ட அபூலஹப், தன் கையை உயர்த்தி எனது கன்னத்தில் கடுமையாக அறைந்தான். நானும் அவன் மீது பாய்ந்தேன், அவனை எதிர்த்தேன். அவன் என்னை தூக்கி பூமியில் வீசினான். பின்பு என் மீது அமர்ந்து என்னை அடித்தான். என்னால் ஒன்றும் செய்ய முடியாத வகையில் நான் வலுவிழந்தவனாக இருந்தேன். எனது நிலையைப் பார்த்த உம்முல் ஃபழ்ல் கூடாரத்தின் ஒரு தடியை உருவி பயங்கரமாக அவனது தலையில் அடித்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. “ஏண்டா! இவரது எஜமானன் இல்லாததால் இவரை ஆதரவற்றவர் என்று நீ கருதிவிட்டாயா?” என்று கேட்டார். அதற்குப் பிறகு அங்கிருந்து கேவலப்பட்டு அபூலஹப் எழுந்து சென்றான். இந்நிகழ்ச்சிக்குப் பின் ஏழு நாட்கள் கழித்து அல்லாஹ் அவனது உடலில் அம்மையைப் போன்ற ஒரு நோயை ஏற்படுத்தினான். அந்நோய் அவனைக் கொன்றது. அதாவது, இந்நோயை அரபியர்கள் மிக துர்க்குறியாக கருதியதால் அவனது பிள்ளைகள் யாரும் அவனுக்கருகில் நெருங்கவில்லை. அவன் செத்த பிறகும் அவனைப் புதைப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. மக்கள் தங்களை பழிப்பார்கள் என்று பயந்தவுடன் ஒரு பெரும் குழியைத் தோண்டி, ஒரு குச்சியால் அவனை அக்குழியில் தள்ளினர். பின்பு தூரத்தில் இருந்து கற்களை எறிந்து அக்குழியை மூடினர்.

இவ்வாறுதான் பத்ர் மைதானத்தில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியின் செய்திகளை மக்கா பெற்றது. இச்செய்தி அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் ஆனந்தமடையக் கூடாது என்பதற்காக கொல்லப்பட்டவர்கள் மீது ஒப்பாரி வைப்பதையும் மக்காவாசிகள் தடை செய்தனர்.

நகைச்சுவை செய்தி ஒன்றைப் பார்ப்போம்: அஸ்வத் இப்னு முத்தலிபின் மூன்று ஆண் பிள்ளைகளும் பத்ர் போரில் கொல்லப்பட்டனர். எனவே, அவர்களுக்காக அழ வேண்டுமென்று அவர் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு கண் தெரியாது. ஒரு நாள் ஒப்பாரி வைக்கும் ஒரு பெண்ணின் சப்தத்தைக் கேட்ட அவர் தனது அடிமையை அனுப்பி “என்ன! ஒப்பாரியிடுவதற்கு அனுமதி கிடைத்து விட்டதா? போரில் கொல்லப்பட்டவர்களுக்காக குறைஷிகள் அழுகிறார்களா? என்று பார்த்து வாரும். நான் எனது மகன் அபூ ஹகீமாவிற்காக அழவேண்டும். அவனது மரணத்தால் எனது உள்ளம் எரிந்துவிட்டது” என்று கூறினார். அவரது அடிமை அவரிடம் திரும்பி வந்து “அது தனது ஒட்டகத்தை தொலைத்துவிட்ட ஒரு பெண்ணின் அழுகை” என்றார். இதனைக் கேட்ட அஸ்வத் தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல் இக்கவிதைகளைப் படித்தார்.

அவள் ஒட்டகம் காணவில்லை என அழுகிறாளா?
அதற்காக கண்விழித்து தூக்கத்தைத் துறந்து விட்டாளா?
ஒட்டகத்திற்காக அழாதே! விதிகள் ஏமாற்றிய பத்ர் போருக்காக அழு!
ஆம்! பத்ரின் மீது அழு! ஹுசைஸ், மஃக்ஜும் கூட்டத்தினர் மீது அழு!
அழ வேண்டுமானால் அக்கீல் மீது அழு!
சிங்கங்களின் சிங்கம் ஹாரிஸின் மீது அழு!
ஆம்! இவர்களுக்காக நீ அழத்தான் வேண்டும்!
அனைவரையும் நீ பெயர் குறிப்பிடத் தேவையில்லை.
அபூ ஹகீமுக்கு நிகர் எவருமில்லையே!
என்ன கேடு? அவர்களுக்குப் பிறகு சிலர் தலைவராகி விட்டனர்!
பத்ர் என்றொரு தினம் இல்லையென்றால்...
அவர்கள் ஒருக்காலும் தலைவர்களாக ஆகியிருக்க முடியாது!!

வெற்றியை மதீனா அறிகிறது

முஸ்லிம்களுக்கு முழு வெற்றி கிடைத்தது. இந்த நற்செய்தி மதீனாவாசிகளுக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) அவர்களை மதீனாவின் மேட்டுப்பகுதியில் வசிப்பவர்களுக்கும், ஜைத் இப்னு ஹாஸா (ரழி) அவர்களை மதீனாவின் கீழ்ப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள்.

யூதர்களும், நயவஞ்சகர்களும் மதீனாவில் பல பொய்யான வதந்திகளைப் பரப்பினர். “நபி (ஸல்) கொல்லப்பட்டார்கள்” என்று பொய் பிரச்சாரம் செய்தனர். நயவஞ்சகர்களில் ஒருவன் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகமான ‘கஸ்வா“வில் ஜைது இப்னு ஹாஸா வருவதைப் பார்த்து “நிச்சயமாக முஹம்மது கொல்லப்பட்டார். அதற்கு ஆதாரம், இதோ... முஹம்மதின் ஒட்டகம். நாங்கள் இதை நன்கு அறிவோம். பயத்தால் என்ன கூறுவது என்றே ஜைதுக்கு தெரியவில்லை. இவர் போரில் தோற்று வருகிறார்” என்று உளறினான்.

இரண்டு தூதர்களும் மதீனாவிற்கு வந்தவுடன் முஸ்லிம்கள் அவர்களைச் சூழ்ந்து அவர்கள் கூறும் செய்திகளைக் கேட்டனர். முஸ்லிம்கள் வெற்றி அடைந்தார்கள் என்ற செய்தி அவர்களுக்கு உறுதியானவுடன் மகிழ்ச்சி மிகுதியால் தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழங்கினர். மதீனாவில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இம்மகத்தான வெற்றிக்காக வாழ்த்துக் கூற பத்ரின் பாதையை நோக்கி விரைந்தனர்.

உஸாமா இப்னு ஜைது (ரழி) கூறுகிறார்: நபி (ஸல்) தங்களது மகள் ருகையாவை கவனித்துக் கொள்வதற்காக அவரது கணவராகிய உஸ்மான் (ரழி) அவர்களுடன் என்னையும் விட்டுச் சென்றிருந்தார்கள். ருகையா (ரழி) இறந்துவிடவே அவர்களை அடக்கம் செய்து மண்ணைச் சமப்படுத்துகையில் “பத்ர் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்” என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது.

இஸ்லாமியப் படை மதீனா புறப்படுகிறது

நபி (ஸல்) போர் முடிந்த பிறகு பத்ர் மைதானத்தில் மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு போரில் கிடைத்த பொருட்கள் விஷயத்தில் கருத்து வேற்றுமைகள் எழுந்தன. கருத்து வேற்றுமை பலமாகவே, அனைவரும் தங்களிடம் இருக்கும் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டுமென நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். அதற்கிணங்க அனைவரும் தங்கள் வசம் இருந்த அனைத்தையும் நபியவர்களிடம் ஒப்படைத்தனர். பின்பு இப்பிரச்சனைக்குத் தீர்வை அல்லாஹ் குர்ஆனில் கூறினான்.

இந்நிகழ்ச்சி பற்றி விரிவாக உபாதா இப்னு ஸாமித் (ரழி) கூறுவதைக் கேட்போம். அவர்கள் கூறுவதாவது:

“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் போருக்குச் சென்றோம். போரில் அல்லாஹ் எதிரிகளைத் தோற்கடித்து முஸ்லிம்களுக்கு வெற்றியளித்தான். முஸ்லிம்களில் ஒரு சாரார் எதிரிகளை விரட்டி அடிப்பதிலும் அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டு அவர்களைக் கொல்வதிலும் மும்முரமாக இருந்தனர். இன்னொரு சாரார் எதிரிகளின் பொருட்களை ஒன்று திரட்டினர். மற்றுறொரு சாரார் நபி (ஸல்) அவர்களை எதிரிகள் தாக்காமல் இருக்க அவர்களைச் சுற்றி பாதுகாத்தனர்.

இரவில் போர் முடிந்து மக்கள் ஒன்று சேர்ந்த போது பொருட்களை சேகரித்தவர்கள் “நாங்கள்தான் பொருட்களை ஒன்று சேர்த்தோம். எனவே, அதில் வேறு யாருக்கும் எவ்வித பங்கும் கிடையாது” என்றனர்.

எதிரிகளை விரட்டியவர்கள், “எங்களைப் பார்க்கிலும் அதிகமாக உங்களுக்கு அதில் உரிமை இல்லை, நாங்கள்தான் எதிரிகளை துரத்தினோம், தோற்கடித்தோம். எனவே, எங்களுக்கே அது உரிமையானது. எங்களைவிட நீங்கள் அதற்கு உரிமையுடையவர்களாக இருக்க முடியாது” என்றனர்.

நபியவர்களை பாதுகாக்கும் பணியில் இருந்தவர்கள், “நபி (ஸல்) அவர்களை எதிரிகள் தாக்கிடுவர் என்ற பயத்தாhல் நாங்கள் அவர்களை பாதுகாப்பதில் இருந்தோம். எனவேதான் உங்களுடன் எங்களால் செயல்படமுடியவில்லை. ஆகவே எங்களுக்கும் அதில் பங்கு வேண்டும்” என்றனர்.

இந்த சர்ச்சைக்குரிய தீர்வை அல்லாஹ் குர்ஆனில் கூறினான்:

(நபியே!) ‘அன்ஃபால்’ (என்னும் போரில் கிடைத்த பொருட்களைப்) பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ‘அன்ஃபால்’ அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். (அல்குர்ஆன் 8:1)

நபி (ஸல்), இந்த வசனத்திற்கேற்ப முஸ்லிம்கள் அனைவருக்கும் பொருட்களை பங்கு வைத்தார்கள். (முஸ்னது அஹ்மது, முஸ்தத்ரகுல் ஹாகிம்)

பொருட்களை பத்ர் மைதானத்திலேயே பங்கு வைக்கவில்லை. மாறாக, அனைத்து பொருட்களையும் ஒன்றுசேர்த்து அதற்கு அப்துல்லாஹ் இப்னு கஅபை பொறுப்பாக நியமித்தார்கள். பிறகு பொருட்களுடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். செல்லும் வழியில் ‘மழீக்’ மற்றும் ‘நாஜியா’ என்ற இடங்களுக்கு மத்தியிலுள்ள மணல் மேட்டுக்கருகில் தங்கினார்கள். அங்குதான் போரில் கிடைத்த பொருட்களைப் பங்கிட்டார்கள். ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்விற்காக ஒதுக்கினார்கள். மீதமிருந்த அனைத்தையும் போரில் கலந்த அனைத்து வீரர்களுக்கும் சட்டப்படி பங்கு வைத்தார்கள்.

பிறகு புறப்பட்டு ‘ஸஃப்ரா’ என்ற இடத்தை அடைந்தார்கள். அங்கு நழ்ர் இப்னு ஹாஸைக் கொன்றுவிடுமாறு அலீ இப்னு அபூதாலிப் (ரழி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். காரணம், இவன் பத்ர் போரில் எதிரிகளின் கொடியை ஏந்தியவன். இவன் குறைஷி குற்றவாளிகளில் ஒரு பெரும் குற்றவாளி! இஸ்லாமுக்கு எதிராகப் பெரும் சூழ்ச்சிகள் செய்தவன். நபி (ஸல்) அவர்களுக்கு கடும் நோவினை செய்தவன்.

பிறகு ‘இர்க்குல் ளுபியா’ என்ற இடத்தை அடைந்த போது உக்பா இப்னு அபூ முயீத்தையும் கொன்றுவிட ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரி (ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். சிலர் அலீ (ரழி) என்றும் கூறுகின்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு உக்பா செய்த தீங்கைப் பற்றி நாம் முன்பே கூறியிருக்கின்றோம். இவன்தான் நபி (ஸல்) தொழுகையில் இருந்த சமயம் அவர்களின் முதுகில் ஒட்டகத்தின் குடலைப் போட்டவன். நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக அவர்களின் கழுத்தைப் போர்வையால் இறுக்கியவன். அது சமயம் அபூபக்ர் (ரழி) அவர்கள் குறுக்கிட்டு நபி (ஸல்) அவர்களைப் பாதுகாத்தார்கள். அவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) கட்டளையிட்ட பின்பு அவன் நபியவர்களிடம் “முஹம்மதே! எனது பிள்ளைகள் என்ன ஆவார்கள்?” என்று கேட்டான். அதற்கு நபி (ஸல்) “அவர்களுக்கு நெருப்புதான்” என்றார்கள்.(ஸுனன் அபூதாவூது)

இவ்விருவரும் இதற்குமுன் செய்த குற்றங்கள் மிக மோசமானவை மறக்க முடியாதவை. அதுமட்டுமல்ல இவர்கள் தங்களின் குற்றங்களுக்காக வருந்தவுமில்லை. இவர்களை விடுதலை செய்தால் மீண்டும் இஸ்லாமிற்குக் கெடுதிகள் பல செய்வர். எனவே, இவர்களைக் கொல்வது அவசியமான ஒன்றே! கைதிகளில் இவ்விருவரைத் தவிர வேறு எவரையும் நபி (ஸல்) கொலை செய்யவில்லை.