பக்கம் -64-

“நஜ்து“ போர் (ஹிஜ் 4, ரபீவுல் ஆகிர் (அ) ஜுமாதா அல்ஊலா)

சண்டையும், உயிர்ப் பலியுமின்றி நழீர் போல் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றி முஸ்லிம்களின் வலிமையை மீண்டும் மதீனாவில் நிலைநாட்டியது. நயவஞ்சகர்கள் தங்களது சூழ்ச்சிகளை வெளிப்படுத்துவதைக் கைவிட்டனர். அதனால் முஸ்லிம்களுக்கு உள்நாட்டுக் குழப்பம் குறைந்தது. ஆகவே, இப்போது மதீனாவிற்கு வெளியில் விஷமம் செய்து வந்த கிராம அரபிகளின் அக்கிரமத்தை அடக்க நபி (ஸல்) அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இந்த கிராம அரபிகள்தான் உஹுத் போருக்குப் பின் முஸ்லிம்களுக்கு பெரும் இன்னல்கள் விளைவித்து வந்தனர். அழைப்புப் பணிக்காக அனுப்பப்படும் குழுக்களை வஞ்சகமாகக் கொன்று குவித்தனர். இவ்வாறு செய்து வந்த இவர்களுக்கு, அடுத்தபடியாக மதீனாவில் தாக்குதல் நடத்தும் அளவுக்குத் துணிவும் பிறந்தது.

முஸ்லிம் குழுக்களுக்கு மோசடி செய்து வந்த அந்தக் கிராம அரபிகளைத் தண்டிப்பதற்கு முன் கத்ஃபான் கோத்திரத்தைச் சேர்ந்த ‘பனூ ஸஅலபா’ என்ற பிரிவினரும், ‘பனூ முஹாப்’ என்ற பிரிவினரும் மதீனாவின் மீது படையெடுக்க ஒன்று சேருகின்றனர் எனும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. இந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக நபியவர்கள் படையை திரட்டிக்கொண்டு நஜ்து பகுதியிலுள்ள கிராமங்களுக்குச் சென்றார்கள். அங்குள்ள அனைத்து இடங்களையும், கிராமங்களையும் படையுடன் சுற்றி வந்தார்கள்.

முஸ்லிம்களின் வருகையை அறிந்த அந்த ஊர்வாசிகள், தங்களின் இல்லங்களிலிருந்து வெளியேறி மலை உச்சிக்குச் சென்று தப்பித்துக் கொண்டனர். இவ்வாறு அழிச்சாட்டியம் செய்யும் இந்தக் கூட்டங்களையெல்லாம் முஸ்லிம்கள் பதிலுக்கு மிரட்டி அவர்களது உள்ளங்களில் தங்களைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்திவிட்டு பாதுகாப்புடன் மதீனா திரும்பினர்.

மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக நடந்த குறிப்பிட்ட ஒரு போரைப் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருப்பதின் விவரமாவது: ஹிஜ்ரி 4, ரபீஉல் ஆகிர் அல்லது ஜுமாதா அல்ஊலா மாதம் ஒரு போர் நடைபெற்றது. அதற்கு ‘தாதுர் காஃ’ என்று கூறப்படும். இந்தப் போர் காலத்தின் சூழ்நிலைக்கேற்ப அவசியமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், உஹுதிலிருந்து திரும்பச் செல்லும் போது அபூஸுஃப்யான் அடுத்த வருடம் (ஹிஜ் 4ல்) பத்ரு மைதானத்தில் சந்திப்போம் என்று கூறி சென்றிருந்தார். அந்த நாளும் மிக நெருக்கமாக இருந்தது. இந்நேரத்தில் மதீனாவை முற்றிலுமாக காலி செய்துவிட்டு செல்வதும் உசிதமானதல்ல. ஏனெனில், கிராம வாசிகளின் அட்டகாசம் அத்துமீறி இருந்தது. இவர்களின் கொடுக்கை நறுக்காமல், இவர்களின் விஷமத்தனத்திற்கு முடிவு கட்டாமல் மதீனாவை காலியாக விட்டுச் செல்வது நல்லதல்ல. இவர்கள் மதீனா காலியாகி விட்டதை தங்களுக்கு வாய்ப்பாகக் கருதி மதீனாவின் மீது கொள்ளையிட அல்லது தாக்குதல் நடத்த வரலாம். எனவே, அபூஸுஃப்யானின் படையைப் பத்ரில் சந்திக்க செல்லும் முன் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்டி இவர்களை அடக்க வேண்டும் என நபியவர்கள் முடிவெடுத்தார்கள். அதற்குப் பின் கிராமவாசிகளை அவர்களது கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்திவிட்டு நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். இப்பயணத்தில் சண்டை ஏதும் நடைபெறவில்லை. ஆக, இந்தப் போருக்கு வரலாற்று ஆசிரியர்கள் ‘தாதுர் காஃ’ என்று கூறுகின்றனர்.

ஆனால், இக்கூற்று சயல்ல! இப்போருக்கு ‘தாதுர் காஃ’ என்று சொல்வது தவறாகும். ஏனெனில் ‘தாதுர் காஃ’ போரில் அபூஹுரைராவும் அபூமூஸாவும் (ரழி) கலந்து கொண்டனர். அபூஹுரைரா (ரழி) கைபர் போருக்கு சில நாட்கள் முன்புதான் முஸ்லிமானார்கள். அவ்வாறே அபூமூஸாவும் நபி (ஸல்) அவர்களை கைபர் போரில்தான் சந்தித்தார்கள்.

கைபர் போருக்கு பின்புதான் ‘தாதுர் காஃ’ நடைபெற்றது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. கைபர் போர் ஹிஜ்ரி 7ஆம் ஆண்டில் நடைபெற்றது. எனவே, ஹிஜ்ரி 4ல் நடைபெற்ற யுத்தத்தை ‘தாதுர் காஃ’ என்று சொல்வது தவறாகும். இதற்கு மேலும் ஓர் ஆதாரத்தைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தாதுர் காஃ போரில்தான் ‘ஸலாத்துல் கவ்ஃப்’ (அச்சம் ஏற்படும்போது தொழுதல்) முறைப்படி தொழுகை நடத்தினார்கள். இத்தொழுகை அஸ்ஃபான் போரில்தான் முதன் முதலில் அனுமதிக்கப்பட்டது. அஸ்ஃபான் போர் அகழ்ப் போருக்குப் பின் நடைப்பெற்றது. அகழ்ப் போர் ஹிஜ்ரி 5ன் இறுதியில் நடைபெற்றது. இதிலிருந்து ஹிஜ்ரி 4ல் நடந்த போரை தாதுர் காஃ என்று குறிப்பிடுவது தவறாகும். தாதுர் காஃ போர் வேறு, ஹிஜ்ரி 4ல் நடைபெற்ற போர் வேறு.

இரண்டாம் பத்ர் போர் (ஹிஜ் 4, ஷஃபான் மாதம், கி.பி. 626, ஜனவரி)

இவ்வாறு முஸ்லிம்கள் கிராமவாசிகளின் கொடுக்கை வெட்டி, அவர்களது விஷமத்தை ஒழித்து விட்டார்கள். இதற்குப் பின் பெரிய எதிரியான அபூ ஸுஃப்யானையும் குறைஷிகளையும் சந்திக்கத் தயாராகினர். ஏனெனில், உஹுத் போரில் குறிப்பிடப்பட்ட காலம் நெருங்கி விட்டது. அதன்படி மீண்டும் ஒருமுறை போர் செய்து, சத்தியவான்கள் யார்? யாருக்கு அல்லாஹ்வின் உதவி? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் பிரதிநிதியாக நியமித்தார்கள். பிறகு 1500 தோழர்கள் மற்றும் 10 குதிரைகளுடன் பத்ரை நோக்கி புறப்பட்டார்கள். படையின் கொடி அலீ (ரழி) அவர்களிடம் இருந்தது. பத்ரில் சென்று குறைஷிகளின் வருகையை எதிர்பார்த்து தங்கியிருந்தார்கள்.

அபூஸுஃப்யான் 2000 மக்காவாசிகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார். இவர்களிடம் 50 குதிரைகள் இருந்தன. அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து ஒரு நாள் பயண தூரமுள்ள ‘மர்ருள் ளஹ்ரான்’ என்ற பகுதியிலுள்ள ‘மஜன்னா’ என்ற கிணற்றருகில் தங்கினார்.

அபூஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்படும் போதே போரின் முடிவு எப்படி அமையும் என்று ஆழ்ந்து சிந்தித்தவராகவே பயணித்துக் கொண்டிருந்தார். இவரது உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இறுதியாக ‘மர்ருள் ளஹ்ரான்’ வந்தவுடன் அவரது உறுதி முற்றிலும் நிலைகுலைந்து விட்டது. அவர் திரும்பிவிட முடிவு செய்தவராக தனது தோழர்களிடம் “குறைஷியர்களே நல்ல பசுமையான செழிப்பான காலத்தில் நாம் போர் செய்யலாம். இது மிக பஞ்சமான ஆண்டு. எனவே இவ்வாண்டு நமக்கு ஏற்றமாகாது. நான் திரும்பிவிட நாடுகிறேன். நீங்களும் திரும்பி விடுங்கள்” என்று கூறினார்.

பொதுவாக, படையினர் அனைவரும் பயத்தால் உள்ளுக்குள் நடுங்கி கொண்டுதான் இருந்தனர். எனவேதான், அபூஸுஃப்யான் இந்த யோசனையைக் கூறியவுடன் பிடிவாதம் பிடிக்காமல், ஆட்சேபனை ஏதும் செய்யாமல் அனைவரும் திரும்பி விட்டனர்.

முஸ்லிம்கள் பத்ர் மைதானத்தில் 8 நாட்கள் தங்கி வியாபாரம் செய்தனர். ஒரு திர்ஹத்திற்கு இரண்டு திர்ஹம் அவர்களுக்கு இலாபமாக கிடைத்தது. அதற்குப் பின் எதிரிகள் மைதானத்திற்கு வராததால் சண்டையின்றி திரும்பி விட்டனர். மீண்டும் முஸ்லிம்கள் மீது மக்களுக்கு பயமும் மரியாதையும் ஏற்பட்டது. நிலைமைகள் அனைத்தையும் முஸ்லிம்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

இப்போருக்கு, “இரண்டாம் பத்ரு, சிறிய பத்ரு, மற்றொரு பத்ரு, வாக்களித்துச் சென்ற பத்ரு” என பல பெயர்கள் வரலாற்றில் கூறப்படுகின்றன. (இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது)

தூமத்துல் ஜன்தல் போர் (ஹிஜ் 5, ரபீஉல் அவ்வல் 25)

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் பத்ரில் இருந்து திரும்பிய பிறகு, மதீனாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமைதி மற்றும் பாதுகாப்பு மிக்க சூழ்நிலை நிலவியது. முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆகவே, இப்போது அரபு நாடு முழுவதும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்காகவும், முஸ்லிம்களை நேசிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் முஸ்லிம்களின் பலத்தை அறிந்து கொள்வதற்காகவும் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர நபியவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தினார்கள்.

இரண்டாம் பத்ர் போரிலிருந்து திரும்பிய பிறகு மதீனாவில் 6 மாதங்கள் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தார்கள். இந்நிலையில் ஷாம் நாட்டிற்கருகில் உள்ள ‘தூமத்துல் ஜன்தல்’ என்ற இடத்தைச் சுற்றி வாழும் கோத்திரத்தினர் வழிப்பறி, கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் மேலும், மதீனாவின் மீது திடீர் தாக்குதல் நடத்த பெரும் கூட்டம் ஒன்றையும் தயார் செய்து வருகிறார்கள் என்ற செய்தி நபியவர்களுக்கு எட்டியது. எனவே, நபியவர்கள் மதீனாவில் ‘ஸிபா இப்னு உர்ஃபுத்தா கிஃபா’ என்ற தோழரைப் பிரதிநிதியாக நியமித்து விட்டு 1000 முஸ்லிம்களுடன் ஹிஜ்ரி 5, ரபீஉல் அவ்வல், பிறை 25ல் தூமத்துல் ஜன்தல் நோக்கி கிளம்பினார்கள். உத்ரா கிளையைச் சேர்ந்த ‘மத்கூர்’ என்ற நபரைத் தனக்கு வழிகாட்டியாக நபியவர்கள் அழைத்துச் சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணிப்பதும் பகலில் பதுங்குவதுமாக பயணத்தைத் தொடர்ந்தார்கள். எதிரிகள் கொள்ளையிடும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நபியவர்கள் பயணத்தை இவ்வாறு தொடர்ந்தார்கள். நபியவர்கள் அங்கு சென்ற போது அம்மக்கள் அங்கு இல்லை, வெளியில் சென்றிருந்தார்கள். நபியவர்கள் அவர்களின் கால்நடைகளைக் கைப்பற்றினார்கள். அங்கிருந்த சிலர் தப்பித்து விட்டனர் மற்ற சிலர் எதிர்த்து மடிந்தனர்.

இதற்குப் பின் ‘தூமத்துல் ஜன்தல்’ என்ற இடத்திற்கு சென்ற போது அங்குள்ள அனைவரும் தங்கள் இல்லங்களைக் காலி செய்து விட்டு தப்பித்து ஓடிவிட்டனர். நபியவர்கள் அங்கு பல நாட்கள் தங்கியிருந்து, சுற்றியுள்ள இடங்களுக்குப் படைகளை அனுப்பித் தேடியும் எவரும் காணக் கிடைக்கவில்லை. ஆகவே, மதீனாவிற்குத் திரும்ப ஆயத்தமானார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்போருக்குச் சென்றிருந்த சமயத்தில் அங்குள்ள ‘உயய்னா இப்னு ஸ்னு’ என்பவருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ‘தூமா’ என்பது ‘மஷாஃபுஷ் ஷாம்’ என்ற இடத்திலுள்ள புகழ்பெற்ற இடமாகும். இங்கிருந்து ‘திமஷ்க்’ நகரம் ஐந்து இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது. இந்நகரம் மதீனாவிலிருந்து 15 இரவுகள் பயணித்துச் செல்லும் தூரத்தில் உள்ளது.

இதுபோன்ற மதிநுட்பமான, தீர்க்கமான நடவடிக்கைகளினால் அமைதி மற்றும் பாதுகாப்பை அனைத்து பகுதிகளிலும் நிறுவி, நிலைமையைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் நபி (ஸல்) அவர்கள் வெற்றி கண்டார்கள். மேலும், இதன் மூலம் முஸ்லிம்களுக்குச் சாதகமான நல்ல சூழ்நிலையை உருவாக்கினார்கள். பல பக்கங்களிலிருந்து முஸ்லிம்களுக்கு வந்து கொண்டிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சிரமங்களை அகற்றினார்கள். நயவஞ்சகர்களும் அடங்கி அமைதியாகி விட்டார்கள். யூதர்களில் ஒரு முக்கிய பிரிவினரான ‘நழீர்’ என்ற கோத்திரத்தினரை மதீனாவிலிருந்து முற்றிலும் நாடு கடத்தப்பட்டதை பார்த்து பயந்துபோன மற்றொரு கோத்திரத்தினர், தாங்கள் நபியவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒழுங்காக நிறைவேற்றினர். கிராம அரபிகளும் தங்களது அட்யூழியங்களையும் வம்புத்தனங்களையும் அடக்கிக் கொண்டு முஸ்லிம்களுக்குப் பணிந்து நடந்தனர். மக்காவிலிருந்த குறைஷிகளும் முஸ்லிம்களைத் தாக்கும் திட்டத்தைக் கைவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். இதுபோன்ற சாதகமான நல்ல சூழ்நிலை ஏற்பட்டதால் இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செம்மையாக நிறைவேற்றுவதற்குரிய நல்ல வாய்ப்பை முஸ்லிம்கள் பெற்றனர்.