பக்கம் -96-
மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள்
நபி (ஸல்) மக்காவில் 19 நாட்கள் தங்கியிருந்தார்கள். அக்காலக் கட்டத்தில் இஸ்லாமை எடுத்துரைத்தார்கள்
அதன் சட்டதிட்டங்களை விவரித்தார்கள் மக்களுக்கு நேர்வழி மற்றும் இறை அச்சத்தை போதித்தார்கள்
ஹரமின் எல்லைகளில் அடையாளக் கம்பங்களை புதுபிக்கும் பணியை குஜாஆ வமிசத்தவரான அபூஉஸைதுக்கு
வழங்கினார்கள் அவர் நபி (ஸல்) கட்டளைப்படி அவற்றை செய்து முடித்தார். மேலும், இஸ்லாமிய
அழைப்புப் பணிக்காகவும், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிலைகளை உடைத்தெறிவதற்காகவும்
தோழர்களின் குழுக்களை அனுப்பினார்கள் அவை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன. நபியவர்களின்
அறிவிப்பாளர், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் வீடுகளிலுள்ள
சிலைகளை உடைத்தெறிய வேண்டும்” என்று அறிவித்துக் கொண்டிருந்தார்.
படைப் பிரிவுகளும் குழுக்களும்
1) ‘நக்லா’ என்ற இடத்தில் ‘உஜ்ஜா’ என்ற சிலை இருந்தது. இதுவே குறைஷிகளுடைய சிலைகளில்
மகத்துவம் மிக்கதாக இருந்தது. ஷைபான் கிளையினர் அந்தச் சிலையின் பூசாரிகளாக இருந்தனர்.
மக்காவில் வெற்றிப் பணிகள் முடிந்து முழு அமைதி நிலவிய பின்பு (ஹிஜ்ரி 8) ரமழான் மாதம்
முடிய ஐந்து நாட்கள் மீதமிருக்கும், நபி (ஸல்) காலித் இப்னு வலீதை முப்பது வீரர்களுடன்
அந்தச் சிலைiயை உடைத்தெறிய அனுப்பினார்கள். அதை உடைத்து வந்த காலிதிடம் “ஏதாவது அங்கு
கண்டீர்களா?” என்று நபி (ஸல்) கேட்க, அவர் “நான் எதையும் காணவில்லை” என்றார். “அப்படியானால்
நீ அதனைச் சரியாக உடைக்கவில்லை. திரும்பச் சென்று அதனை உடைத்து வா!” என்று அனுப்பி
வைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் இப்பேச்சைக் கேட்டு வெகுண்டெழுந்த காலித் (ரழி) வாளை உருவியவாறு
தனது தோழர்களுடன் உஜ்ஜாவை நோக்கி பறந்தார். அச்சிலையருகே சென்றவுடன் தலைவிரி கோலமாக
நிர்வாண நிலையில் கருத்த பெண் உருவம் ஒன்று காலிதை நோக்கி வந்தது. அங்குள்ள பூசாரி
உஜ்ஜாவின் பெயரைக் கூறி சப்தமிட்டு அழைத்தான். காலித் (ரழி) தன் முன் தோன்றிய அவ்வுருவத்தை
இரண்டாகப் பிளந்தார். பின்பு நபியவர்களிடம் திரும்பி வந்து நடந்த நிகழ்ச்சியை விவரித்தார்.
“ஆம்! அதுதான் உஜ்ஜா. இனி, உங்கள் ஊர்களில் யாரும் அதனை வணங்குவதிருந்து நிராசையடைந்து
விட்டது” என நபி (ஸல்) நவின்றார்கள்.
2) மக்காவின் வட கிழக்கே 150 கி.மீ. தொலைவில் ‘ருஹாத்’ என்னுமிடத்தில் ஹுதைல் கிளையினர்
வணங்கும் ‘சுவா’ என்ற சிலை இருந்தது. அதனை உடைக்கும்படி இதே ரமழான் மாதத்தில் அம்ர்
இப்னு ஆஸை நபி (ஸல்) அனுப்பினார்கள். அம்ரு சிலையருகே வந்தவுடன் அதன் பூசாரி “நீ எதற்கு
வந்துள்ளாய்?” என வினவினான். “இச்சிலையை உடைத்து வர நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்”
என அம்ர் பதில் தந்தார். பூசாரி, “உன்னால் அது முடியாது” என்று வீராப்பு பேசினான்.
அம்ரு (ரழி) “ஏன் முடியாது?” என்றார். “உன்னால் அதனை நெருங்கவே முடியாது” என்றான்.
“இன்னுமாடா வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கிறாய்? உனக்கென்ன கேடு? அது கேட்குமா? அதனால்
பார்க்கத்தான் முடியுமா?” என்று கூறியவாறு சிலையருகே வந்து அதனை அம்ருப்னு ஆஸ் (ரழி)
உடைத்துத் தள்ளினார். அந்தக் கோயிலையும் அங்குள்ள உண்டியலையும் உடைத்து பார்க்கும்படி
தோழர்களுக்குக் கட்டளையிட்டார். ஆயினும் எதுவுமே கிட்டவில்லை. “இப்பொழுது உன் கருத்து
என்ன?” என பூசாரியிடம் அம்ரு (ரழி) வினவ “நான் அல்லாஹ்விடம் சரணடைந்தேன். இஸ்லாமை ஏற்றுக்
கொண்டேன்” என பூசாரி கூறினார்.
3) ‘குதைத்’ என்ற ஊரருகே ‘முஷல்லல்’ என்ற இடத்தில் ‘மனாத்’ எனும் சிலை இருந்தது. அதனை
‘அவ்ஸ்“, ‘கஸ்ரஜ்“, ‘கஸ்ஸான்’ மற்றும் சில குலத்தவர் வணங்கிக் கொண்டிருந்தனர். அதனை
இடித்து வர ஸஅத் இப்னு ஜைத் அஷ்ஹலி (ரழி) என்பவன் தலைமையில் இருபது பேர் கொண்ட படையை
இதே மாதத்தில் நபி (ஸல்) அனுப்பினார்கள். ஸஅது (ரழி) அங்கு சென்றபோது அங்குள்ள பூசாரி
“நீ எந்த நோக்கத்தில் வந்திருக்கின்றாய்?” என்று வினவ “மனாத்தை உடைக்க வந்துள்ளேன்”
என்று பதிலளித்தார். “நீ விரும்பியதைச் செய்து கொள்” என பூசாரி மறுமொழி கூறினார். ஸஅது
அச்சிலையருகே வந்தபோது கருநிற பெண்ணொருத்தி தலைவிரி கோலமாக மார்பில் அடித்துக் கொண்டு
வெளியேறி வந்தாள். அதைக் கண்ட பூசாரி “மனாத்தே! நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்! இதோ
உனது எதிரிகள் உன்னை ஒழித்துக் கட்ட வந்து விட்டனர்” எனக் கூக்குரலிட, ஸஅது (ரழி) அச்சிலையை
வெட்டிச் சாய்த்தார். அங்கும் உண்டியல்களில் எதுவும் காணப்படவில்லை.
4) உஜ்ஜா சிலையை உடைத்துவிட்டுத் திரும்பிய காலித் (ரழி) அவர்களுக்கு ஜுதைமா சமூகத்தாரை
இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கும் மற்றொரு பணியை நபி (ஸல்) வழங்கினார்கள். அதே
ஆண்டு ஷவ்வால் மாதம் 350 தோழர்களுடன் புறப்பட்ட அப்படையில் முஹாஜிர்களும், அன்சாரிகளும்,
ஸுலைம் கூட்டத்தினரும் கலந்திருந்தனர். ஜுதைமா கூட்டத்தாரை அணுகி இஸ்லாமிய மார்க்கத்தை
ஏற்றுக் கொள்ளும்படி கூறியதும் அம்மக்கள் இஸ்லாமை ஏற்று “முஸ்லிமாக மாறினோம்” என்று
கூறத் தெரியாமல், “மதம் மாறினோம்” என்று கூறினர். இதனை தவறாகப் புரிந்து கொண்ட காலித்
(ரழி) அவர்களில் சிலரைக் கொன்றுவிட்டு மற்றும் சிலரைச் சிறைபிடித்து ஒவ்வொரு கைதிகளையும்
படை வீரர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கு தங்கியிருக்கும்போது ஒரு நாள் “ஒவ்வொரு படைவீரரும்
தங்களுடைய கைதிகளைக் கொன்று விடுக” என காலித் (ரழி) கட்டளை பிறப்பித்தார்கள். அப்படையில்
பங்கு கொண்ட மூத்த நபித்தோழர்களான இப்னு உமர் (ரழி) போன்றோர் அங்ஙனம் கொலை புரிவதற்கு
மறுத்து விட்டனர். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. “அல்லாஹ்வே! காலித் செய்துவிட்ட
இக்காரியத்திலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என இருமுறை வருத்தமாகக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)
படையில் கலந்திருந்த ஸுலைம் கூட்டத்தார் மட்டும் தளபதி காலிதின் ஆணைக்கிணங்கி கைதிகளைக்
கொன்று விட்டனர். கொல்லப்பட்டவர்களின் சொந்தங்களுக்கு தியத் வழங்குவதற்காக நபி (ஸல்)
அலீயை அனுப்பி வைத்தார்கள்.
இப்பிரச்சனையில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபுக்கும் காலிதுக்கும் பேச்சு முற்றிப்போய்
வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த நபி (ஸல்), “காலிதே! கொஞ்சம் பொறுங்கள்! எனது தோழர்களை
விட்டுவிடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உஹுத் மலை தங்கமாக மாறி அதனை முழுவதும்
அல்லாஹ்வுடைய பாதையில் நீ செலவு செய்தாலும், அவர்கள் ஒரு காலை அல்லது ஒரு மாலை அல்லாஹ்வின்
பாதையில் சென்ற நன்மையை உம்மால் அடைய முடியாது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
இதுவே மக்கா வெற்றியின் சுருக்கமான வரலாறு. இப்போர் முஸ்லிம்களுக்கு நிரந்தர வெற்றியை
நிர்ணயித்தது மட்டுமல்ல இம்மாபெரும் போராட்டம் இறைநிராகரிப்புடைய கோட்டையை சுவடு தெரியாமல்
நிர்மூலமாக்கியது. அரபு தீபகற்பத்தில் இறைநிராகரிப்பின் வாடையே வீசாமல் அழித்தொழித்து
விட்டது. முழு அரபுலகமே முஸ்லிம்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் இடையே நடைபெற்று வந்த
போர்களின் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது. ஏனெனில், ஹரமை நிச்சயமாக சத்தியவாதிகள்
(உண்மையாளர்கள்) மட்டுமே கைப்பற்ற முடியும் என்பதை நன்றாக அறிந்திருந்தனர். கஅபாவை
அழிப்பதற்கு யானைப் படையுடன் வந்த அப்ரஹாவும் அவனது படையினரும் அடையாளம் தெரியாது சின்னா
பின்னமாகி தின்னப்பட்ட வைக்கோல் போன்று ஆன அவர்களின் வீழ்ச்சி வரலாறு, சத்தியத்தில்
உள்ளவர் மட்டுமே கஅபாவை வெற்றி கொள்ள முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை கடந்த ஐம்பது
ஆண்டு காலமாக அவர்களின் உள்ளத்தில் வேரூன்றச் செய்திருந்தது.
இது மட்டுமல்ல! இதற்கு முன் ஏற்பட்ட ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் மகத்தான மக்கா வெற்றியின்
தொடக்கமாக அமைந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து பழைய
உறவுகளைப் புதுப்பித்து மெருகேற்றிக் கொண்டனர். இஸ்லாமிய மார்க்கத்தை மற்றவருக்கும்
எடுத்து விளக்கிக் கூறினர். அதனைப் பற்றி தங்களிடையேயும் கருத்துப் பரிமாற்றம் செய்து
கொண்டனர். இந்நாள் வரை மக்காவில் திரைமறைவில் இஸ்லாமிய நெறியைக் கடைபிடித்து வாழ்ந்த
முஸ்லிம்கள், இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்திக் கொண்டதுடன்
மற்றவர்களையும் மார்க்கத்தின் பக்கம் அழைக்க, பெரும் பாலானவர்கள் இஸ்லாமியப் பூங்காவிற்குள்
இன்முகத்துடன் நுழைந்தனர். இதுவரை நடந்த போர்களில் முஸ்லிம் படையினர் எண்ணிக்கை மூவாயிரம்,
நான்காயிரத்தைத் தாண்டாத நிலை. ஆனால், ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நடந்த மக்கா
போலோ பத்தாயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போர் மக்களின் அறிவுக் கண்களைத் திறந்தது.
இஸ்லாமை ஏற்பதற்கு குறுக்கிட்ட தடைக் கல்லைத் தகர்த்தெறிந்தது.
அரபு தீபகற்பத்தில் முழு அளவில் அரபுலகத்தை அரசியல் மற்றும் மார்க்க ரீதியாக தங்களது
கட்டுப்பாட்டில் முஸ்லிம்கள் கொண்டு வந்தனர். ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்பட்ட
முஸ்லிம்களுக்கு சாதாகமான சூழ்நிலை இம்மகத்தான வெற்றியால் முழுமை பெற்றது. இதன்பின்
ஏற்பட்ட கால நிலைமைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கே சாதகமாக அமைந்தன. அங்கு அனைத்தையும்
முஸ்லிம்கள் தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முஸ்லிம்களின் நற்பண்புகளால்
கவரப்பட்ட ஏனைய அரபு வமிசத்தினர், இஸ்லாமில் இணைய ஆர்வம் காட்டினர். அதிலிருந்து தடுத்து
வந்த தீய சக்திகளும் அழிந்துவிட்டதால் இஸ்லாமை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு இலகுவானது.
அவர்களும் நபித்தோழர்களுடன் சேர்ந்து இஸ்லாமைப் பரப்புவதற்காக புறப்பட்டனர். இந்த அழைப்புப்
பணிக்காக வரும் ஈராண்டுகளில் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டது.