44. ஸூரத்துத் துகான் (புகை)
மக்கீ, வசனங்கள்: 59
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
44:1 حٰمٓ ۛۚ
حٰمٓ ۛۚ ஹா மீம்
44:2 وَالْكِتٰبِ الْمُبِيْنِ ۛۙ
وَالْكِتٰبِ இந்த வேதத்தின் மீது சத்தியமாக! الْمُبِيْنِ ۛۙ தெளிவான(து)
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
44:2. தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
44:3 اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் فِىْ لَيْلَةٍ ஓர் இரவில் مُّبٰـرَكَةٍ அருள்நிறைந்த(து) اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருந்தோம் مُنْذِرِيْنَ அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக
44:3. நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
44:3. நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்.
44:3. நாம் இதனை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில், நாம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம்!
44:3. நிச்சயமாக நாம், இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாம் (இவ்வேதத்தின் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியோராய் இருந்து கொண்டிருக்கிறோம்.
44:4 فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ
فِيْهَا இதில்தான் يُفْرَقُ முடிவு செய்யப்படுகின்றன كُلُّ اَمْرٍ எல்லாக்காரியங்களும் حَكِيْمٍۙ ஞானமிக்க(து)
44:4. அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
44:4. உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம் கட்டளையின்படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
44:4. அது எத்தகைய இரவு எனில், அதில்தான் ஒவ்வொரு விவகாரத்துக்கும் விவேக மிக்க தீர்ப்பு நம்முடைய கட்டளையினால் பிறப்பிக்கப்படுகின்றது.
44:4. அந்த இரவில் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் (பிரித்துத்) தெளிவு செய்யப்படுகிறது.
44:5 اَمْرًا مِّنْ عِنْدِنَاؕ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَۚ
اَمْرًا கட்டளையின்படி مِّنْ عِنْدِنَاؕ நம்மிடமிருந்து اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருந்தோம் مُرْسِلِيْنَۚ தூதராக அனுப்பக்கூடியவர்களாகவே
44:5. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
44:5. (நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம் தூதராக) அனுப்புகிறோம்.
44:5. நாம் ஒரு தூதரை அனுப்புகிறவர்களாய் இருந்தோம்.
44:5. நம்மிடமிருந்துள்ள கட்டளையாக (அது நடந்தேறும்) நிச்சயமாக நாம் (தூதர்களை) அனுப்புகிறவர்களாக இருந்தோம்.
44:6 رَحْمَةً مِّنْ رَّبِّكَؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُۙ
رَحْمَةً ஓர் அருளாக مِّنْ رَّبِّكَؕ உமது இறைவனிடமிருந்து اِنَّهٗ நிச்சயமாக هُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُۙ நன்கறிந்தவன்
44:6. (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
44:6. (அது) உமது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனும் ஆவான்.
44:6. உம் இறைவனுடைய கருணையின் அடிப்படையில்! திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்கக்கூடியவனாகவும், அறியக்கூடியவனாகவும் இருக்கின்றான்
44:6. உமதிரட்சகனிடமிருந்துள்ள அருளாக (இதை இறக்கினோம்) நிச்சயமாக அவனே (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
44:7 رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ
رَبِّ இறைவனாவான் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَاۘ இன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றின் اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால்
44:7. நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
44:7. நீங்கள் (உண்மையை) உறுதி கொள்பவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்).
44:7. நீங்கள் உண்மையில் உறுதியான நம்பிக்கையுடையவர்களாய் இருந்தால்! அவன் வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகவும் அவ்விரண்டிற்கிடையே உள்ள அனைத்திற்கும் அதிபதியாகவும் இருக்கின்றான் (என்பதைக் காண்பீர்கள்).
44:7. (இவ்வேதத்தை இறக்கிவைத்தவனாகிய அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளுக்கும் இரட்சகன் (என்பதை) நீங்கள் உறுதியுடையவர்களாக இருப்பின் (அறிவீர்கள்).
44:8 لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُؕ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ
لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ அவனை يُحْىٖ உயிர்ப்பிக்கின்றான் وَيُمِيْتُؕ இன்னும் மரணிக்க வைக்கிறான் رَبُّكُمْ உங்கள் இறைவனும் وَرَبُّ இறைவனும் اٰبَآٮِٕكُمُ உங்கள் மூதாதைகளின் الْاَوَّلِيْنَ முன்னோர்களான
44:8. அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
44:8. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்.
44:8. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. வாழ்வளிப்பவன் அவனே; மரணத்தை அளிப்பவனும் அவனே! அவனே உங்களுக்கும் அதிபதி; முன்னர் வாழ்ந்து சென்ற உங்கள் முன்னோர்களுக்கும் அதிபதி.
44:8. அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே இறக்குமாறும் செய்கிறான், (அவனே) உங்களின் இரட்சகனும், முன்னோர்களான உங்கள் மூதாதையரின் இரட்சகனுமாவான்.
44:9 بَلْ هُمْ فِىْ شَكٍّ يَّلْعَبُوْنَ
بَلْ மாறாக هُمْ அவர்கள் فِىْ شَكٍّ சந்தேகத்தில் يَّلْعَبُوْنَ விளையாடுகின்றனர்
44:9. ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
44:9. எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்!
44:9. (ஆனால், உண்மையில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை.) ஏனெனில், இவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
44:9. எனினும், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
44:10 فَارْتَقِبْ يَوْمَ تَاْتِى السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيْنٍۙ
فَارْتَقِبْ ஆகவே, எதிர்ப்பார்ப்பீராக! يَوْمَ நாளை تَاْتِى வருகின்ற(து) السَّمَآءُ வானம் بِدُخَانٍ புகையைக் கொண்டு مُّبِيْنٍۙ தெளிவான(து)
44:10. ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
44:10. (நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக.
44:10. சரி, இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும்.
44:10. ஆகவே, (நபியே!) வானம் தெளிவானதொரு புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பார்ப்பீராக!
44:11 يَغْشَى النَّاسَؕ هٰذَا عَذَابٌ اَلِيْمٌ
يَغْشَى அது சூழ்ந்துகொள்ளும் النَّاسَؕ மக்களை هٰذَا இது عَذَابٌ வேதனையாகும் اَلِيْمٌ வலி தரக்கூடிய(து)
44:11. (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; “இது நோவினை செய்யும் வேதனையாகும்.”
44:11. மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்து கொள்ளும். அது ஒரு துன்புறுத்தும் வேதனையாகும்.
44:11. அது மக்கள் மீது மூடிக்கொள்ளும். இது துன்புறுத்தக்கூடிய தண்டனையாகும்.
44:11. மனிதர்களை அ(ப்புகையான)து சூழ்ந்து கொள்ளும், “இது துன்புறுத்தும் வேதனையாகும்”.
44:12 رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ
رَبَّنَا எங்கள் இறைவா! اكْشِفْ அகற்றி விடுவாயாக عَنَّا எங்களை விட்டு الْعَذَابَ வேதனையை اِنَّا நிச்சயமாக நாங்கள் مُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள்
44:12. “எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்” (எனக் கூறுவர்).
44:12. (அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம்'' (என்று கூறுவார்கள்).
44:12. (அப்போது கூறுவார்கள்:) “எங்கள் அதிபதியே! எங்களை விட்டு இந்த வேதனையை நீக்கி அருள். நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்.”
44:12. “எங்கள் இரட்சகனே! நீ எங்களைவிட்டும் இவ்வேதனையை நீக்கி விடுவாயாக, நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசங்கொண்டவர்களாக இருக்கின்றோம்” (என்று அந்நாளில் மனிதர்கள், அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்).
44:13 اَنّٰى لَهُمُ الذِّكْرٰى وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِيْنٌۙ
اَنّٰى எப்படி? لَهُمُ அவர்களுக்கு الذِّكْرٰى நல்லறிவு பெறுவது وَقَدْ திட்டமாக جَآءَ வந்தார் هُمْ அவர்களிடம் رَسُوْلٌ ஒரு தூதர் مُّبِيْنٌۙ தெளிவான(வர்)
44:13. நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
44:13. (அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கிறார்.
44:13. இவர்களின் உணர்வில்லாத நிலை எங்கே மாறப்போகிறது? வெளிப்படையான இறைத்தூதர் இவர்களிடம் வந்தும்,
44:13. (அந்நேரத்தில்) அவர்களுக்கு நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்? நிச்சயமாக (சத்தியத்தை) விளக்குபவரான (நம்முடைய) தூதர் (இதற்குமுன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார்.
44:14 ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌۘ
ثُمَّ பிறகு تَوَلَّوْا அவர்கள் விலகிவிட்டனர் عَنْهُ அவரை விட்டு وَقَالُوْا இன்னும் , கூறினர் مُعَلَّمٌ கற்பிக்கப்பட்டவர் مَّجْنُوْنٌۘ பைத்தியக்காரர்
44:14. அவர்கள் அவரை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) “கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” எனக் கூறினர்.
44:14. எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து, (அவரைப்பற்றி ‘‘இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்'' என்று கூறினர்.
44:14. இவர்கள் அவர் பக்கம் கவனம் செலுத்தவில்லை என்பதுதானே இவர்களின் நிலை! “இவர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பைத்தியக்காரர்!” என்று சொன்னார்கள்.
44:14. பின்னர் அவர்கள் அவரைப் புறக்கணித்தனர், (அவரைப் பற்றி, “இவர் பிறரால்) கற்றுக்கொடுக்கப்பட்டவர், பைத்தியக்காரர்” என்றும் கூறினர்.
44:15 اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِيْلًا اِنَّكُمْ عَآٮِٕدُوْنَۘ
اِنَّا நிச்சயமாக நாம் كَاشِفُوا நீக்குவோம் الْعَذَابِ இந்த வேதனையை قَلِيْلًا கொஞ்சம் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் عَآٮِٕدُوْنَۘ திரும்புவீர்கள்
44:15. நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
44:15. (மெய்யாகவே நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்கள் என்று) அவ்வேதனையை மேலும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகிறீர்கள்.
44:15. நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். அப்போது நீங்கள் முன்னர் செய்து கொண்டிருந்ததைத்தான் மீண்டும் செய்வீர்கள்.
44:15. நிச்சயமாக அவ்வேதனயை(ப் பின்னும்) சிறிது (காலத்திற்கு) நாம் நீக்குவோராய் இருக்கிறோம், (எனினும்) நிச்சயமாக நீங்கள், (நிராகரிப்பின்பாலே) மீளக்கூடியவர்களாக இருக்கிறீர்கள்.
44:16 يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْـرٰىۚ اِنَّا مُنْتَقِمُوْنَ
يَوْمَ நாளில் نَبْطِشُ தாக்குவோம் الْبَطْشَةَ தாக்குதல் الْكُبْـرٰىۚ பெரிய اِنَّا நிச்சயமாக நாம் مُنْتَقِمُوْنَ பழிவாங்குவோம்
44:16. ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
44:16. மிக்க பலமாக (அவர்களை) நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம்.
44:16. நாம் பலத்த அடி கொடுக்கும் நாளில் நாம் உங்களிடம் பழி வாங்கியே தீருவோம்.
44:16. மிகப் பெரும்பிடியாக அவர்களை நாம் பிடிக்கும் (அந்) நாளில் நிச்சயமாக (அவர்களைத்) தண்டிப்போராய் இருக்கிறோம்.
44:17 وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَ جَآءَهُمْ رَسُوْلٌ كَرِيْمٌۙ
وَلَقَدْ திட்டவட்டமாக فَتَنَّا சோதித்தோம் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمَ மக்களை فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய وَ جَآءَهُمْ அவர்களிடம் வந்தார் رَسُوْلٌ ஒரு தூதர் كَرِيْمٌۙ கண்ணியமான(வர்)
44:17. அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
44:17. இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்) தூதர் ஒருவர் வந்தார்.
44:17. திண்ணமாக, நாம் இவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமூகத்தை சோதித்திருக்கிறோம். அவர்களிடம் கண்ணியமான ஓர் இறைத்தூதர் வந்தார்.
44:17. மேலும், இவர்களுக்கு முன்னர் ஃபிர் அவ்னுடைய சமூகத்தவரை திட்டமாக நாம் சோதித்தோம் அவர்களிடம் கண்ணியமான (நம்முடைய) தூதரும் வந்தார்.
44:18 اَنْ اَدُّوْۤا اِلَىَّ عِبَادَ اللّٰهِؕ اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ
اَنْ اَدُّوْۤا ஒப்படைத்துவிடுங்கள்! اِلَىَّ என்னிடம் عِبَادَ اللّٰهِؕ அல்லாஹ்வின் அடியார்களை اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ தூதர் اَمِيْنٌۙ நம்பிக்கைக்குரிய(வர்)
44:18. அவர் (கூறினார்:) “என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
44:18. ‘‘அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான தூதர் ஆவேன்.
44:18. மேலும், அவர் கூறினார்: “அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் உங்களுக்காக அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய இறைத்தூதராவேன்.
44:18. (அவர்) “அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் மக்)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு (அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள) நம்பிக்கைக்குரிய ஒரு தூதனாவேன் (என்றும்),
44:19 وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَى اللّٰهِۚ اِنِّىْۤ اٰتِيْكُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍۚ
وَّاَنْ لَّا تَعْلُوْا அழிச்சாட்டியம் செய்யாதீர்கள் عَلَى اللّٰهِۚ அல்லாஹ்விற்கு முன் اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰتِيْكُمْ உங்களிடம் வருவேன் بِسُلْطٰنٍ ஆதாரத்தைக் கொண்டு مُّبِيْنٍۚ தெளிவான(து)
44:19. அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
44:19. அல்லாஹ்வுக்கு (முன் ஆணவம் கொள்ளாதீர்கள், அவனுக்கு) நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார். (அதற்கவர்கள் ‘‘நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்'' என்று கூறினார்கள்.)
44:19. மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். நான் உங்களிடம் (என்னுடைய நியமனம் பற்றிய) தெளிவான ஒரு சான்றினைக் கொண்டு வந்திருக்கின்றேன்.
44:19. மேலும், அல்லாஹ்வின் (கட்டளைகளுக்குக் கீழ்ப் படிவதை விட்டுவிடுவதன் மூலம் அவன்) மீது உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளாதீர்கள், நிச்சயமாக நான், உங்களிடம் தெளிவான ஒரு சான்றைக் கொண்டுவந்திருக்கிறேன்” (என்றும் கூறினார்.)
44:20 وَاِنِّىْ عُذْتُ بِرَبِّىْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۚ
وَاِنِّىْ நிச்சயமாக நான் عُذْتُ பாதுகாவல் தேடினேன் بِرَبِّىْ எனது இறைவனிடம் وَرَبِّكُمْ இன்னும் உங்கள் இறைவனிடம் اَنْ تَرْجُمُوْنِ ۚ நீங்கள் என்னை கொல்வதில் இருந்து
44:20. அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
44:20. (அதற்கு மூஸா) ‘‘என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்வதை விட்டும் எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றார்.
44:20. நீங்கள் என்மீது தாக்குதல் தொடுப்பதைவிட்டு என்னுடையவும் உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றேன்.
44:20. “என்னை நீங்கள் கல்லாலெறிந்து (கொன்று) விடுவதைவிட்டும் என் இரட்சகனும், உங்கள் இரட்சகனுமாகியவனிடம் நிச்சயமாக, நான் பாதுகாவல் தேடிக்கொண்டுவிட்டேன்” (என்றும்),
44:21 وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْ فَاعْتَزِلُوْنِ
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْ நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் فَاعْتَزِلُوْنِ என்னை விட்டு விலகிவிடுங்கள்
44:21. “மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).
44:21. ‘‘நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்'' (என்றும் கூறி),
44:21. நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் என் மீது கைவைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.”
44:21. இன்னும், நீங்கள் என்னை (அல்லாஹ்வின்) நபியென) நம்பிக்கைக் கொள்ளவில்லையாயின், என்னை விட்டு நீங்கிவிடுங்கள் (என்றும் கூறினார்.)
44:22 فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَاۤءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ
فَدَعَا அவர் அழைத்தார் رَبَّهٗۤ தனது இறைவனை اَنَّ நிச்சயமாக هٰۤؤُلَاۤءِ இவர்கள் قَوْمٌ மக்கள் مُّجْرِمُوْنَ குற்றம் செய்கின்றவர்கள்
44:22. (அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). “நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
44:22. தன் இறைவனை அழைத்து ‘‘நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கிறார்கள்'' என்று கூறினார்.
44:22. இறுதியில், “இவர்கள் குற்றம் புரியக்கூடிய மக்களாய் இருக்கின்றனர்” என்று அவர் தம் இறைவனிடம் முறையிட்டார்.
44:22. பின்னர், நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தவராகவே இருக்கிறார்கள் என தன் இரட்சகனை அவர் அழைத்துப் பிரார்த்தித்தார்.
44:23 فَاَسْرِ بِعِبَادِىْ لَيْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَۙ
فَاَسْرِ நீங்கள் அழைத்துச் செல்லுங்கள் بِعِبَادِىْ என் அடியார்களை لَيْلًا இரவில் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مُّتَّبَعُوْنَۙ பின்தொடரப்படுவீர்கள்
44:23. “என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” (என்று இறைவன் கூறினான்.)
44:23. (அதற்கு இறைவன்) ‘‘நீர் (இஸ்ரவேலர்களாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்.
44:23. (பதிலளிக்கப்பட்டது:) “என் அடியார்களை இரவோடிரவாக அழைத்துச் சென்றுவிடும்! திண்ணமாக, நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.
44:23. (அதற்கு அல்லாஹ்,) “நீர் (இஸ்ராயீலீன் மக்களாகிய) என்னுடைய அடியார்களை (அழைத்து)க்கொண்டு இரவில் செல்வீராக, நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்_
44:24 وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًاؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ
وَاتْرُكِ விட்டுவிடுங்கள்! الْبَحْرَ கடலை رَهْوًاؕ அமைதியாக اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் جُنْدٌ ராணுவம் مُّغْرَقُوْنَ மூழ்கடிக்கப்படுகின்ற
44:24. “அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
44:24. (நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும்'' (என்று கூறி, அவ்வாறே மூழ்கடித்தான்.)
44:24. கடலினை அதன் பிளந்த நிலையிலேயே விட்டுவிடும். திண்ணமாக, இந்தப் படையினர் அனைவரும் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்களாவர்!”
44:24. “அன்றியும், (பிளந்த) அக்கடலை பிளவுபட்டதாக விட்டு (நீங்கள் அதை கடந்து) விடுங்கள், நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராக இருக்கிறார்கள் (என்று கூறி, அவ்விதமே மூழ்கடித்தான்).
44:25 كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ
كَمْ எத்தனையோ تَرَكُوْا விட்டுச் சென்றார்கள் مِنْ جَنّٰتٍ தோட்டங்களையும் وَّعُيُوْنٍۙ ஊற்றுகளையும்
44:25. எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
44:25. (அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும் விட்டுச் சென்றனர்.
44:25. எத்தனையோ தோட்டங்களையும், நீரூற்றுகளையும்,
44:25. எத்தனை(யோ) தோட்டங்களையும், நீரூற்றுகளையும், அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர்.
44:26 وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ
وَّزُرُوْعٍ விவசாய நிலங்களையும் وَّمَقَامٍ இடங்களையும் كَرِيْمٍۙ கண்ணியமான
44:26. இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
44:26. இன்னும் எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).
44:26. வயல்களையும், மிகச்சிறப்பான இல்லங்களையும்,
44:26. இன்னும் (எத்தனையோ) விவசாய (நில)ங்களையும், (அழகுமிகுந்த) மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).
44:27 وَّنَعْمَةٍ كَانُوْا فِيْهَا فٰكِهِيْنَۙ
وَّنَعْمَةٍ வசதிகளையும் كَانُوْا இருந்த(னர்) فِيْهَا அவற்றில் فٰكِهِيْنَۙ இன்புற்றவர்களாக
44:27. இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
44:27. அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்).
44:27. அவர்கள் பயன்படுத்தி மகிழ்ந்த எத்தனையோ வாழ்க்கைச் சாதனங்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்.
44:27. இன்னும், அவர்கள் எதில் இன்பம் அனுபவித்துக்கொண்டிருந்தனரோ அத்தகைய (எத்தனையோ) சுகானுபவப் பொருளையும் (விட்டுச் சென்றனர்).
44:28 كَذٰلِكَ وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِيْنَ
كَذٰلِكَ இப்படித்தான் وَاَوْرَثْنٰهَا இவற்றை சொந்தமாக்கினோம் قَوْمًا மக்களுக்கு اٰخَرِيْنَ வேறு
44:28. அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
44:28. இவ்வாறே (நடைபெற்றது). அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம்.
44:28. இதுவே அவர்கள் அடைந்த கதி. மேலும், இந்தப் பொருள்களுக்கு வேறு மக்களை நாம் வாரிசுகளாக்கினோம்
44:28. இவ்வாறே_(நடந்தேறியது), அவற்றிக்கு வேறு சமூகத்தாரையும் அனந்தரக்காரர்களாக்கினோம்.
44:29 فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِيْنَ
فَمَا بَكَتْ அழவில்லை عَلَيْهِمُ அவர்கள் மீது السَّمَآءُ வானமும் وَالْاَرْضُ பூமியும் وَمَا كَانُوْا அவர்கள் இருக்கவில்லை مُنْظَرِيْنَ தவணைத் தரப்படுபவர்களாக(வும்)
44:29. ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை; (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.
44:29. (அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட வில்லை.
44:29. பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை, பூமியும் அழவில்லை. இன்னும் சிறிதளவு அவகாசம் கூட அவர்களுக்குத் தரப்படவில்லை.
44:29. (அழிந்துபோன) அவர்களுக்காக வானமும், பூமியும் (துக்கித்து) அழவில்லை, (தப்பிச் செல்ல) அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.
44:30 وَلَقَدْ نَجَّيْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مِنَ الْعَذَابِ الْمُهِيْنِۙ
وَلَقَدْ திட்டவட்டமாக نَجَّيْنَا நாம் காப்பாற்றினோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களை مِنَ الْعَذَابِ வேதனையிலிருந்து الْمُهِيْنِۙ இழிவுபடுத்தும்
44:30. நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
44:30. (இவ்வாறே) இழிவு தரும் வேதனையில் இருந்து இஸ்ராயீலின் சந்ததிகளை பாதுகாத்துக் கொண்டோம்.
44:30. இவ்வாறு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நாம் கடும் இழிவுபடுத்தும் வேதனையிலிருந்து அதாவது ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினோம்.
44:30. மேலும், (ஃபிர் அவ்ன் இழைத்த) இழிவுதரும் வேதனையிலிருந்து இஸ்ராயீலின் மக்களை நாம் திட்டமாகக் காப்பாற்றினோம்.
44:31 مِنْ فِرْعَوْنَؕ اِنَّهٗ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِيْنَ
مِنْ فِرْعَوْنَؕ ஃபிர்அவ்னிடமிருந்து اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் عَالِيًا அழிச்சாட்டியம் செய்பவனாக(வும்) مِّنَ الْمُسْرِفِيْنَ வரம்புமீறிகளில்
44:31. ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்); நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.
44:31. ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் வரம்பு மீறிகளில் ஓர் ஆணவம் கொண்டவனாக இருந்தான்.
44:31. உண்மையில், அவன் வரம்பு மீறுவோரில் அனைவரையும்விட மிகக் கொடியவனாக இருந்தான்.
44:31. ஃபிர் அவ்னைவிட்டும் (காப்பாற்றிவிட்டோம்), நிச்சயமாக, அவன் (அடக்கி ஆளுதல், ஆணவம் கொள்ளுதல் ஆகியவற்றில்) உயர்ந்தவனாக (நிராகரிப்பில்) வரம்பு மீறியவர்களில் (உள்ளவனாக) இருந்தான்.
44:32 وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰى عِلْمٍ عَلَى الْعٰلَمِيْنَۚ
وَلَقَدِ اخْتَرْنٰهُمْ திட்டவட்டமாக அவர்களை நாம் தேர்ந்தெடுத்தோம் عَلٰى عِلْمٍ அறிந்தே عَلَى الْعٰلَمِيْنَۚ அகிலத்தாரை விட
44:32. நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
44:32. (இவ்வாறு ஃபிர்அவ்னை மூழ்கடித்த பின்னர்) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் தன்மையை அறிந்தே உலகத்தார் அனைவரிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
44:32. மேலும், அவர்களின் நிலைமையை அறிந்தே உலகின் பிற சமுதாயங்களைவிட அவர்களுக்கு முன்னுரிமை அளித்தோம்.
44:32. (இஸ்ராயீலின் மக்களாகிய) அவர்களை நன்கு அறிந்தே அகிலத்தாரை விடவும் அவர்களை நாம் திட்டமாகத் தெரிவு செய்தோம்.
44:33 وَاٰتَيْنٰهُمْ مِّنَ الْاٰيٰتِ مَا فِيْهِ بَلٰٓؤٌا مُّبِيْنٌ
وَاٰتَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கொடுத்தோம் مِّنَ الْاٰيٰتِ அத்தாட்சிகளில் مَا எது فِيْهِ அதில் بَلٰٓؤٌا சோதனை مُّبِيْنٌ தெளிவான(து)
44:33. அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
44:33. இன்னும், அவர்களுக்கு (மன்னு ஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவற்றில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது.
44:33. மேலும், அவர்களுக்கு எத்தகைய அத்தாட்சிகளை காண்பித்தோம் எனில் அவற்றில் வெளிப்படையான சோதனை இருந்தது.
44:33. மேலும், எதில் தெளிவான சோதனை இருந்ததோ அத்தகைய அத்தாட்சிகளை (மன்னு, ஸல்வா என்னும் உணவை இறக்கிவைத்தது, கடலை பிளக்கவைத்தது போன்றவற்றை) அவர்களுக்கு நாம் கொடுத்தோம்.
44:34 اِنَّ هٰٓؤُلَاۤءِ لَيَقُوْلُوْنَۙ
اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் لَيَقُوْلُوْنَۙ கூறுகின்றனர்
44:34. நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்:
44:34. (எனினும்,) நிச்சயமாக (நிராகரிப்பாளர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:
44:34. இந்த மக்கள் கூறுகின்றார்கள்:
44:34. நிச்சயமாக (காஃபிர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்.
44:35 اِنْ هِىَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُنْشَرِيْنَ
اِنْ هِىَ இது இல்லை اِلَّا مَوْتَتُنَا நமது மரணமே தவிர الْاُوْلٰى முதல் وَمَا نَحْنُ இன்னும் நாங்கள் இல்லை بِمُنْشَرِيْنَ எழுப்பப்படுபவர்களாக
44:35. “எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை; நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்.”
44:35. ‘‘இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) நாம் உயிர் கொடுத்து எழுப்பப்பட மாட்டோம்''
44:35. “எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அதன் பிறகு நாங்கள் மீண்டும் எழுப்பப்பட மாட்டோம்.
44:35. “அது (இவ்வுலகில்) எங்களுக்கு ஏற்படும் முதல் மரணத்தைத் தவிர வேறில்லை, இன்னும், (மரணித்த பின்னர்) நாங்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்களுமல்லர்.”
44:36 فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்! اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
44:36. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.”
44:36. (மேலும், நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்'' (என்றனர்).
44:36. நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், எங்களுடைய முன்னோரை எழுப்பிக் கொண்டு வாருங்கள்.”
44:36. (என்று கூறுவதுடன் விசுவாசிகளிடம்) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இறந்துபோன) எங்கள் மூதாதையரைக் கொண்டுவாருங்கள்” (என்றனர்).
44:37 اَهُمْ خَيْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍۙ وَّ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ اَهْلَكْنٰهُمْ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ
اَهُمْ خَيْرٌ இவர்கள் சிறந்தவர்களா اَمْ قَوْمُ மக்களா? تُبَّعٍۙ துப்பஃ உடைய وَّ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? اَهْلَكْنٰهُمْ அவர்களை நாம் அழித்துவிட்டோம் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் مُجْرِمِيْنَ குற்றவாளிகளாக
44:37. இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
44:37. (நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது ‘துப்பஉ' என்னும் மக்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் மேலானவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தனர்.
44:37. இவர்கள் சிறந்தவர்களா? ‘துப்பஃஉ’ சமூகத்தாரும் அவர்களுக்கு முந்தியவர்களும் சிறந்தவர்களா? நாம் அவர்களை அழித்தோம். அவர்கள் குற்றம் புரிவோராய் இருந்த காரணத்தால்!
44:37. (நபியே!) அவர்கள் மிகச் சிறந்தவர்களா? அல்லது “துப்பஃஉ“ சமூகத்தாரும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? அவர்களை(யும்) நாம் அழித்துவிட்டோம், (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்.
44:38 وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ
وَمَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் لٰعِبِيْنَ விளையாட்டாக
44:38. மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
44:38. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
44:38. இந்த வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
44:38. வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் விளையாடுவோராய் நாம் படைக்கவில்லை.
44:39 مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ
مَا خَلَقْنٰهُمَاۤ அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை اِلَّا بِالْحَقِّ உண்மையான காரணத்திற்கே தவிர وَلٰكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
44:39. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
44:39. நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே தவிர, இவற்றை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்துகொள்வதில்லை.
44:39. அவற்றைச் சத்தியத்துடன் படைத்திருக்கின்றோம். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
44:39. (நிச்சயமாக) அவ்விரண்டையும் உண்மையைக்கொண்டே தவிர_நாம் படைக்கவில்லை, எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள்.
44:40 اِنَّ يَوْمَ الْفَصْلِ مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَۙ
اِنَّ يَوْمَ الْفَصْلِ நிச்சயமாக தீர்ப்பு நாள் مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَۙ இவர்கள் அனைவரின் நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்
44:40. நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
44:40. நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
44:40. இவர்கள் அனைவரையும் எழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் காலம் தீர்ப்பளிக்கும் நாளாகும்.
44:40. நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள் அவர்கள் அனைவருக்கும் (குறிப்பிடப்பட்ட) தவணையாகும்.
44:41 يَوْمَ لَا يُغْنِىْ مَوْلًى عَنْ مَّوْلًى شَيْــٴًــا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ
يَوْمَ அந்நாளில் لَا يُغْنِىْ தடுக்க மாட்டான் مَوْلًى நண்பன் عَنْ مَّوْلًى நண்பனை விட்டு شَيْــٴًــا எதையும் وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
44:41. ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
44:41. அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது.
44:41. அந்நாளில் எந்த நண்பரும் தன்னுடைய நெருங்கிய எந்த நண்பருக்கும் எந்தப் பயனையும் அளிக்கமாட்டார். மேலும், அவர்களுக்கு எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைக்காது;
44:41. அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய (உதவியும் புரிந்து) பயனும் அளிக்கமாட்டான், அன்றியும், அவர்கள் (மற்றவர்களிடமிருந்து) உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
44:42 اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُؕ اِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
اِلَّا தவிர مَنْ எவர்கள் (மீது) رَّحِمَ கருணை புரிந்தான் اللّٰهُؕ அல்லாஹ் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ மகா கருணையாளன்
44:42. (எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
44:42. ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்). நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
44:42. ஆனால், அல்லாஹ்வே யாருக்காவது கருணை புரிந்தாலே தவிர! திண்ணமாக, அவனோ மிக வலிமை வாய்ந்தவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
44:42. (ஆயினும்) அல்லாஹ் அருள் புரிந்தோர் தவிர (அவர்களுக்கு சகல உதவியும் கிடைக்கும்) நிச்சயமாக அவனே (யாவரையும்) மிகைத்தவன், மிகக் கிருபையுடையவன்.
44:43 اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِۙ
اِنَّ شَجَرَتَ நிச்சயமாக மரம் الزَّقُّوْمِۙ ஸக்கூம்
44:43. நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
44:43. நிச்சயமாக (நரகத்திலிருக்கும்)கள்ளி மரம்தான்
44:43. நிச்சயமாக (நரகத்திலிருக்கும்) கள்ளிமரம்.
44:44 طَعَامُ الْاَثِيْمِ ۛۚ ۖ
طَعَامُ உணவாகும் الْاَثِيْمِ ۛۚ ۖ பாவிகளின்
44:44. பாவிகளுக்குரிய உணவு;
44:44. பாவியின் உணவாக இருக்கும்.
44:44. (அதுவே) பாவிகளின் ஆகாரமாகும்.
44:45 كَالْمُهْلِ ۛۚ يَغْلِىْ فِى الْبُطُوْنِۙ
كَالْمُهْلِ ۛۚ உருக்கப்பட்ட செம்பைப் போல் இருக்கும் يَغْلِىْ அது கொதிக்கும் فِى الْبُطُوْنِۙ வயிறுகளில்
44:45. அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
44:45. (அது) உருகிய செம்பைப்போல் அவனுடைய வயிற்றில் கொதிக்கும்.
44:45. அது எண்ணெய்க் கசடு போலிருக்கும்.
44:45. (அது) உருகிய செம்பைப்போல் (அவர்களுடைய) வயிறுகளில் கொதிக்கும்.
44:46 كَغَلْىِ الْحَمِيْمِ
كَغَلْىِ கொதிப்பதைப் போல் الْحَمِيْمِ கொதிக்கின்ற தண்ணீர்
44:46. வெந்நீர் கொதிப்பதைப் போல்.
44:46. சூடான தண்ணீர் கொதிப்பதைப் போல் (அது கொதித்துப் பொங்கி வரும்).
44:46. சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் அது கொதிக்கும்.
44:46. கடுமையாகக் காய்ச்சப்பட்ட நீர் கொதிப்பதைபோல் (அது கொதித்துப் பொங்கிவரும்).
44:47 خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰى سَوَآءِ الْجَحِيْمِ ۖ
خُذُوْهُ அவனைப் பிடியுங்கள்! فَاعْتِلُوْهُ அவனை இழுத்து வாருங்கள்! اِلٰى سَوَآءِ நடுவில் الْجَحِيْمِ நரகத்தின்
44:47. “அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
44:47. ‘‘அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள்.
44:47. “பிடியுங்கள் அவனை! நரகத்தின் நடுப்பகுதியில் இழுத்துச் செல்லுங்கள்.
44:47. (குற்றவாளியான) அவனைப் பிடியுங்கள்; பின்னர், நரகத்தின் மையத்திற்கு இழுத்துக்கொண்டு செல்லுங்கள்.
44:48 ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِيْمِؕ
ثُمَّ பிறகு صُبُّوْا ஊற்றுங்கள் فَوْقَ மேல் رَاْسِهٖ அவனது தலைக்கு مِنْ عَذَابِ வேதனையை الْحَمِيْمِؕ கொதிக்கின்ற நீரின்
44:48. “பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
44:48. பிறகு, அவனுடைய தலைக்குமேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்'' (என்று கூறப்படுவதுடன், அவனை நோக்கி ஏளனமாக,)
44:48. அவனது தலைமீது கொதிக்கும் நீரை ஊற்றி வேதனைப்படுத்துங்கள்.
44:48. பின்னர், அவனுடைய தலைக்கு மேல், கொதித்த நீரின் வேதனையிலிருந்து ஊற்றுங்கள், (என்று நரகக்காவலாளிகளுக்குக் கூறப்படுவதுடன், அதிலிருக்கும் பாவிகளிடம்.)
44:49 ذُقْ ۖۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْكَرِيْمُ
ذُقْ ۖۚ நீ சுவை! اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ கண்ணியமானவன் الْكَرِيْمُ மதிப்பிற்குரியவன்
44:49. “நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
44:49. ‘‘நிச்சயமாக நீ மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவன். ஆதலால், நீ (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பார்'' (என்றும் கூறப்படும்)
44:49. நீ சுவைத்துப் பார், இதன் சுவையை! பெரும் வல்லமை படைத்த கண்ணியமிக்கவனல்லவா நீ
44:49. “நீ (இவ்வேதனையைச்) சுவைத்துப்பார், நிச்சயமாக, நீ தான் மிக்க கண்ணியமும் மரியாதையுமுடையவன், (என்று ஏளனமாகக் கூறப்படும்).
44:50 اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ
اِنَّ هٰذَا நிச்சயமாக இதுதான் مَا எது كُنْتُمْ இருந்தீர்கள் بِهٖ அதை تَمْتَرُوْنَ சந்தேகிப்பவர்களாக
44:50. “நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
44:50. நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தவை.
44:50. நீங்கள் எதன் வருகையை சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!”
44:50. நிச்சயமாக இது எதை நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுவேயாகும் (என்றும் கூறப்படும்).
44:51 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ مَقَامٍ اَمِيْنٍۙ
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்கள் فِىْ مَقَامٍ இடத்தில் اَمِيْنٍۙ பாதுகாப்பான
44:51. பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
44:51. இறையச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில்,
44:51. இறையச்சமுடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள்;
44:51. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் அச்சமற்ற இடத்திலிருப்பார்கள்.
44:52 فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ ۚ
فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّعُيُوْنٍ ۙ ۚ இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்
44:52. சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
44:52. அதுவும் சொர்க்கச் சோலைகளில், ஊற்றுகளின் சமீபமாக,
44:52. தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
44:52. சுவனபதி(யின் சோலை)களிலும், நீர் ஊற்றுக்களிலே (அவற்றினிடையே)யும் (இருப்பார்கள்).
44:53 يَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِيْنَۚ ۙ
يَّلْبَسُوْنَ அணிவார்கள் مِنْ سُنْدُسٍ மென்மையான பட்டு وَّاِسْتَبْرَقٍ இன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளை مُّتَقٰبِلِيْنَۚ ۙ ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
44:53. ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
44:53. மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.
44:53. தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகளை அணிந்து கொண்டு எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்.
44:53. ஒருவரையொருவர் முன் நோக்கியவர்களாக மெல்லியதும், திடமானதுமான பட்டாடைகளை அணிந்து கொண்டிருப்பார்கள்.
44:54 كَذٰلِكَ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍؕ
كَذٰلِكَ இவ்வாறுதான் وَزَوَّجْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம் بِحُوْرٍ வெண்மையான கண்ணிகளை عِيْنٍؕ கண்ணழகிகளான
44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
44:54. இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). மேலும், ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளாகிய கன்னி)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.
44:54. இதுதான் அவர்களின் நிலைமையாகும். மேலும், நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்.
44:54. இவ்வாறே (அது நடைபெறும்), மேலும், “ஹூருல்ஈன்” (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்போம்.
44:55 يَدْعُوْنَ فِيْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيْنَۙ
يَدْعُوْنَ கேட்பார்கள் فِيْهَا அதில் بِكُلِّ எல்லா فَاكِهَةٍ பழங்களையும் اٰمِنِيْنَۙ நிம்மதியானவர்களாக
44:55. அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
44:55. அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்.
44:55. அங்கு அவர்கள் மன நிம்மதியுடன் எல்லாவிதமான சுவைமிகு பொருட்களையும் கேட்பார்கள்.
44:55. அச்சமற்றவர்களாக கனி வர்க்கங்கள் ஒவ்வொன்றையும், அங்கு கேட்டுக் கொண்டும் இருப்பார்கள்.
44:56 لَا يَذُوْقُوْنَ فِيْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰى ۚ وَوَقٰٮهُمْ عَذَابَ الْجَحِيْمِۙ
لَا يَذُوْقُوْنَ சுவைக்க மாட்டார்கள் فِيْهَا அதில் الْمَوْتَ மரணத்தை اِلَّا الْمَوْتَةَ மரணத்தை தவிர الْاُوْلٰى ۚ முதல் وَوَقٰٮهُمْ இன்னும் அவன் அவர்களைப் பாதுகாத்தான் عَذَابَ வேதனையை விட்டும் الْجَحِيْمِۙ நரகத்தின்
44:56. முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
44:56. முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு ஒரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்.
44:56. ஏற்கனவே உலகில் அடைந்த மரணம் தவிர, மறு மரணத்தை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். மேலும், உம் இறைவன் தன்னுடைய கருணையினால் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடுவான்.
44:56. முந்திய மரணத்தைத் தவிர, அவற்றில் அவர்கள் (வேறு யாதொரு) மரணத்தையும் சுவைக்கமாட்டார்கள், மேலும், நரக வேதனையை விட்டும் அவர்களை (அல்லாஹ்வாகிய) அவன் காத்துக்கொண்டான்.
44:57 فَضْلًا مِّنْ رَّبِّكَ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
فَضْلًا அருளினால் مِّنْ رَّبِّكَ ؕ உமது இறைவனின் ذٰ لِكَ هُوَ இதுதான் الْفَوْزُ الْعَظِيْمُ மகத்தான வெற்றி
44:57. (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும்.
44:57. (நபியே! இது) உமது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும்.
44:57. இதுவே மாபெரும் வெற்றியாகும்.
44:57. (நபியே! இது) உமதிரட்சகனின் பேரருளாக (வழங்கப்படுகிறது), அதுதான் மகத்தான வெற்றியாகும்.
44:58 فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ இதை நாம் இலேசாக்கினோம்/உமது மொழியில் لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
44:58. அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
44:58. (நபியே!) அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உமது மொழியில் (இறக்கி அதை) எளிதாக்கி வைத்தோம்.
44:58. (நபியே!) இவர்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் எளிமையாக்கித் தந்துள்ளோம்.
44:58. ஆகவே, (வேதமாகிய) இதனை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கி வைத்திருப்பதெல்லாம், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான்.
44:59 فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ
فَارْتَقِبْ ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக! اِنَّهُمْ நிச்சயமாக அவர்களும் مُّرْتَقِبُوْنَ எதிர்பார்க்கின்றார்கள்
44:59. ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
44:59. (இதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்.
44:59. இனி நீரும் எதிர்பாரும்! இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!
44:59. ஆகவே, (நல்லுபதேசம் பெறாவிடில், அதனால் ஏற்படும் தீயமுடிவை) நீர் எதிர்பார்த்திரும், நிச்சயமாக, அவர்களும் எதிர்ப்பார்க்கக் கூடியவர்கள்தாம்.