58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்)
மதனீ, வசனங்கள்: 22
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்
58:1 قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِىْ تُجَادِلُكَ فِىْ زَوْجِهَا وَ تَشْتَكِىْۤ اِلَى اللّٰهِ ۖ وَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ ۢ بَصِيْرٌ
قَدْ திட்டமாக سَمِعَ செவியுற்றான் اللّٰهُ அல்லாஹ் قَوْلَ பேச்சை الَّتِىْ تُجَادِلُكَ உம்மிடம் விவாதிக்கின்றவளின் فِىْ زَوْجِهَا தனது கணவரின் விஷயத்தில் وَ تَشْتَكِىْۤ முறையிடுகிறாள் اِلَى اللّٰهِ ۖ அல்லாஹ்விடம் وَاللّٰهُ அல்லாஹ் يَسْمَعُ செவியுறுகின்றான் تَحَاوُرَ உரையாடலை كُمَا ؕ உங்கள் இருவரின் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَمِيْعٌ ۢ நன்கு செவியுறுபவன் بَصِيْرٌ உற்று நோக்குபவன்
58:1. (நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
58:1. (நபியே!) எவள் தன் கணவரைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து (அவரைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டுக் கொண்டான். (அதைப்பற்றி) உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், (ஒவ்வொருவரின் செயலையும்) உற்று நோக்குபவன் ஆவான்.
58:1. தன்னுடைய கணவர் விஷயத்தில் உம்மிடம் விவாதித்துக் கொண்டும், அல்லாஹ்விடத்தில் முறையிட்டுக் கொண்டும் இருக்கின்ற பெண்ணின் சொல்லைத் திண்ணமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். உங்கள் இருவரின் உரையாடலை அல்லாஹ் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான்.
58:1. (நபியே!) தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, (அதைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளே அத்தகையவளுடைய கூற்றை (முறையீட்டை)த் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுக்கொண்டான், அல்லாஹ் உங்களிருவரின் (வாக்கு) வாதத்தையும் செவியேற்றான், நிச்சயமாக அல்லாஹ் மிக செவியேற்கிறவன், (அனைத்தையும்) பார்க்கிறவன்.
58:2 اَلَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآٮِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْؕ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـىِْٔ وَلَدْنَهُمْؕ وَاِنَّهُمْ لَيَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًاؕ وَ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ
اَلَّذِيْنَ எவர்கள் يُظٰهِرُوْنَ ளிஹார் செய்கின்றார்களோ مِنْكُمْ உங்களில் مِّنْ نِّسَآٮِٕهِمْ தங்கள் பெண்கள் இடம் مَّا هُنَّ அவர்கள் ஆகமுடியாது اُمَّهٰتِهِمْؕ அவர்களின் தாய்மார்களாக اِنْ اُمَّهٰتُهُمْ அவர்களின் தாய்மார்கள் இல்லை اِلَّا தவிர الّٰٓـىِْٔ எவர்கள் وَلَدْنَهُمْؕ அவர்களை பெற்றெடுத்தார்கள் وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் مُنْكَرًا மிகத் தீயதை مِّنَ الْقَوْلِ பேச்சில் وَزُوْرًاؕ இன்னும் பொய்யானதை وَ اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَعَفُوٌّ மிகவும் பிழை பொறுப்பவன் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன்
58:2. “உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.
58:2. உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன் தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகிவிடமாட்டாள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள்தான் (உண்மைத்) தாயாவார்கள். (இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் நிச்சயமாகத் தகாததும், பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பிழை பொறுப்பவன் ஆவான். (ஆகவே, இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரவும்.)
58:2. உங்களில் எவர்கள் தம்முடைய மனைவியரை ‘ளிஹார்’* செய்கின்றார்களோ, அவர்களின் மனைவியர் அவர்களுக்கு அன்னையராகிவிடமாட்டார்கள். அவர்களைப் பெற்றெடுத்தவர்களே அவர்களின் அன்னையர் ஆவர். அவர்கள் கடும் வெறுப்புக்குரிய, பொய்யான சொல்லைக் கூறுகின்றார்கள். மேலும், உண்மை யாதெனில், அல்லாஹ் பெரிதும் பிழை பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
58:2. உங்களில் தம் மனைவியரைத் தாய்க்கு ஒப்பிட்டு (நீ என் மீது என் தாயைப் போன்றவள் எனக்) கூறிவிடுகிறார்களே அத்தகையோர் (ஒப்பிட்டுக் கூறப்பட்ட மனைவியரான) அவர்கள் (ஒப்பிட்டுக் கூறிய) அவர்களுடைய தாய்மார்களல்லர், அவர்களைப் பெற்றெடுத்தார்களே அத்தகையோரைத் தவிர, (வேறு எவரும்) அவர்களுடைய தாய்மார்களல்லர், மேலும், நிச்சயமாக (தம் மனைவியரைத் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் சொல்லால் வெறுக்கத்தக்கதையும், பொய்யையும் கூறுகின்றனர், மேலும், நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிகவும் பொறுப்பவன், மிக்க மன்னிப்பவன்.
58:3 وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّا ؕ ذٰ لِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
وَالَّذِيْنَ எவர்கள் يُظٰهِرُوْنَ ளிஹார்செய்கிறார்கள் مِنْ نِّسَآٮِٕهِمْ தங்கள் பெண்களிடம் ثُمَّ பிறகு يَعُوْدُوْنَ மீளுகின்றார்களோ لِمَا قَالُوْا தாங்கள் கூறியதற்கு فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமையை مِّنْ قَبْلِ முன்னர் اَنْ يَّتَمَآسَّا ؕ அவர்கள் இருவரும் இணைவதற்கு ذٰ لِكُمْ இதுதான் تُوْعَظُوْنَ உபதேசிக் கப்படுகிறீர்கள் بِهٖ ؕ وَاللّٰهُ இதற்கு/அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை خَبِيْرٌ ஆழ்ந்தறிபவன்
58:3. மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
58:3. ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். இதை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன் ஆவான்.
58:3. எவர்கள் தங்களுடைய மனைவியரை ‘ளிஹார்’ செய்து பின்னர், தாங்கள் கூறிய சொல்லைவிட்டுத் திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தீண்டும் முன்பாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு உங்களுக்கு அறிவுரை கூறப்படுகின்றது. மேலும், நீங்கள் எவற்றைச் செய்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கின்றான்.
58:3. மேலும், தங்கள் மனைவியரைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக்கூறி, பின்னர் தாம் கூறியவற்றிலிருந்து (திரும்பி தாம்பத்திய வாழ்க்கையில்) மீண்டு கொள்வார்களே அத்தகையோர்_அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர், (பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும், இது (அல்லாஹ்வின் சட்டமாகும்) இதனைக் கொண்டு நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்.
58:4 فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّاؕ فَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّيْنَ مِسْكِيْنًاؕ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِؕ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِیْمٌ
فَمَنْ எவர் لَّمْ يَجِدْ வசதி பெறவில்லையோ فَصِيَامُ நோன்பிருக்க வேண்டும் شَهْرَيْنِ இரண்டு மாதங்கள் مُتَتَابِعَيْنِ தொடர்ந்து مِنْ قَبْلِ முன்னர் اَنْ يَّتَمَآسَّاؕ இருவரும் இணைவதற்கு فَمَنْ எவர் لَّمْ يَسْتَطِعْ சக்தி பெறவில்லையோ فَاِطْعَامُ உணவளிக்கட்டும் سِتِّيْنَ அறுபது مِسْكِيْنًاؕ ஏழைகளுக்கு ذٰلِكَ இது لِتُؤْمِنُوْا ஏனெனில்/நம்பிக்கை கொள்கின்றீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَرَسُوْلِهٖؕ அவனது தூதரையும் وَتِلْكَ இவை حُدُوْدُ சட்டங்களாகும் اللّٰهِؕ அல்லாஹ்வின் وَلِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌ தண்டனை اَلِیْمٌ வலி தரக்கூடிய(து)
58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
58:4. (விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். (இவ்வாறு நோன்பு நோற்க) சக்தி பெறாதவன். அறுபது ஏழைகளுக்கு (மத்திய தரமான) உணவளிக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக (இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான்). இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். (இதை) மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.
58:4. இனி, எவருக்கேனும் அடிமை கிடைக்கவில்லையானால், அவ்விருவரும் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். ஒருவர் இதற்கும் சக்தி பெறாவிட்டால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இந்தக் கட்டளை ஏன் அளிக்கப்படுகின்றது என்றால், அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்! இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். மேலும், நிராகரிப்பவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது.
58:4. பின்னர், (அடிமையை_) எவர் பெற்றிருக்கவில்லையோ அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் (அதற்குள்ள பரிகாரம்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்பதாகும், (இவ்வாறு நோன்பு நோற்க) எவர் சக்தி பெறவில்லையோ, அப்பொழுது அவர் அறுபது ஏழைகளுக்கு (மத்திய தரமான) ஆகாரமளித்தலாகும், இது அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் விசுவாசங்கொள்வதற்காக (இவ்வாறு இலேசாக்கி வைத்தான்), இன்னும், இவைகள் அல்லாஹ்வுடைய வரம்புகளாகும், நிராகரிப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
58:5 اِنَّ الَّذِيْنَ يُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ كُبِتُوْا كَمَا كُبِتَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ ؕ وَ لِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ ۚ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يُحَآدُّوْنَ முரண்படுகிறார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் كُبِتُوْا இழிவு படுத்தப்படுவார்கள் كَمَا போன்று كُبِتَ இழிவுபடுத்தப்பட்டது الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னுள்ளவர்கள் وَقَدْ திட்டமாக اَنْزَلْنَاۤ நாம் இறக்கினோம் اٰيٰتٍۢ அத்தாட்சிகளை بَيِّنٰتٍ ؕ தெளிவான(வை) وَ لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌ مُّهِيْنٌ ۚ இழிவுதரும்தண்டனை
58:5. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் - திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
58:5. எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவுபடுத்தப்பட்டபடியே இழிவுபடுத்தப் படுவார்கள். நிச்சயமாக (இதைப் பற்றி)த் தெளிவான வசனங்களையே நாம் இறக்கி இருக்கிறோம். (அதற்கு) மாறுசெய்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
58:5. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்படுவார்கள்; அவர்களுக்கு முன்பிருந்தவர்கள் இழிவுக்கு ஆளாக்கப்பட்டதைப் போன்று! நாம் தெள்ளத் தெளிவான சான்றுகளை இறக்கிவிட்டோம். இனி, நிராகரிப்பவர்களுக்கு இழிவுமிக்க வேதனை இருக்கின்றது.
58:5. நிச்சயமாக அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவாக்கப் பட்டது போன்றே அவர்கள் இழிவாக்கப்படுவார்கள், மேலும், திட்டமாக (இதைப்பற்றித்) தெளிவான வசனங்களை நாம் இறக்கியிருக்கின்றோம், நிராகரிப்போருக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு.
58:6 يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ اَحْصٰٮهُ اللّٰهُ وَنَسُوْهُ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ
يَوْمَ நாளில் يَبْعَثُهُمُ எழுப்புவான்/ அவர்களை اللّٰهُ அல்லாஹ் جَمِيْعًا அனைவரையும் فَيُنَبِّئُهُمْ அவர்களுக்கு அறிவிப்பான் بِمَا عَمِلُوْا ؕ அவர்கள் செய்தவற்றை اَحْصٰٮهُ அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் وَنَسُوْهُ ؕ அவற்றை மறந்துவிட்டார்கள் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் شَهِيْدٌ கண்காணிப்பவன்
58:6. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
58:6. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவற்றை அல்லாஹ் சேகரித்து வைக்கிறான். (அவர்கள் செய்யும்) அனைத்திற்கும் அல்லாஹ் (நன்கறிந்த) சாட்சியாளன் ஆவான்.
58:6. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பி, அவர்கள் என்னவெல்லாம் செய்துவிட்டு வந்திருக்கின்றார்கள் என்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொடுக்கும் நாளில் (இந்த இழிவுமிக்க வேதனை கிட்டும்.) அவர்கள் மறந்து போய்விட்டனர். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் எண்ணி எண்ணி பாதுகாத்து வைத்திருக்கின்றான். மேலும், அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாகவும் இருக்கின்றான்.
58:6. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அவன் அறிவிப்பான், அல்லாஹ் (அவர்கள் செய்த) அவற்றைக் கணக்கிட்டுவைத்துள்ளான், (ஆனால்,) அவர்களோ அவற்றை மறந்து விட்டார்கள். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
58:7 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْاۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவற்றை(யும்) وَمَا فِى الْاَرْضِؕ பூமியில் உள்ளவற்றையும் مَا يَكُوْنُ இருக்காது مِنْ نَّجْوٰى உரையாடல் ثَلٰثَةٍ மூன்று நபர்களின் اِلَّا தவிர هُوَ அவன் رَابِعُهُمْ அவர்களில் நான்காமவனாக وَلَا இருக்காது خَمْسَةٍ ஐந்து நபர்களின் اِلَّا தவிர هُوَ அவன் سَادِسُهُمْ அவர்களில் ஆறாவதாக وَلَاۤ இன்னும் இருக்காது اَدْنٰى குறைவாக مِنْ ذٰ لِكَ அதை விட وَلَاۤ اَكْثَرَ இன்னும் அதிகமாக இருக்காது اِلَّا தவிர هُوَ அவன் مَعَهُمْ அவர்களுடன் اَيْنَ مَا كَانُوْاۚ அவர்கள் எங்கிருந்தாலும் சரியே ثُمَّ பிறகு يُنَبِّئُهُمْ அவர்களுக்கு அறிவிப்பான் بِمَا عَمِلُوْا அவர்கள் செய்தவற்றை يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ நன்கறிந்தவன்
58:7. நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.
58:7. (நபியே!) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவர்களில் மூன்று பேர்கள் (கூடிப் பேசும்) ரகசியத்தில் அவன் நான்காவதாக இல்லாமல் இல்லை. ஐந்து பேர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்தில் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளவர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்திலும், அவன் அவர்களுடன் இல்லாமல் இல்லை. இவ்வாறு அவர்கள் எங்கிருந்த போதிலும் (ரகசியம் பேசினால் அவன் அவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்கிறான்). பின்னர், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் அறிவி(த்து அதற்குரிய கூலியைக் கொடு)க்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
58:7. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றையும் அல்லாஹ் அறிகின்றான் என்பது உமக்குத் தெரியாதா, என்ன? மூன்று மனிதர்களிடையே இரகசியப் பேச்சுவார்த்தை எதுவும் நடப்பதில்லை; அவர்களிடையே நான்காவதாக அல்லாஹ் இருந்தே தவிர! அல்லது ஐந்து மனிதர்களிடையே இரகசியப் பேச்சு எதுவும் நடப்பதில்லை; அவர்களிடையே ஆறாவதாக அல்லாஹ் இருந்தே தவிர! இரகசிய பேச்சுக்களைப் பேசுவோர் இதனைவிடக் குறைவாக இருந்தாலும், கூடுதலாக இருந்தாலும், அவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். பின்னர், அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கின்றார்கள் என்பதை அவன் மறுமைநாளில் அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
58:7. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும், பூமிலுள்ளவற்றையும் நன்கறிகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூவரின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்கவதாக இல்லாமலில்லை, ஐவருடைய (இரகசியத்)தில் அவன் அவர்களில் ஆறாவதாக இல்லாமலில்லை, அதைவிடக் குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ அவர்கள் எங்கிருந்தபோதிலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை, (எந்நிலையிலும் அவன் அவர்களுடைய இரகசியங்களை அறிந்து கொள்கிறான்.) பின்னர், அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு மறுமை நாளில் அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளைப்பற்றியும் நன்கறிந்தவன்.
58:8 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ نُهُوْا عَنِ النَّجْوٰى ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَيَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَاِذَا جَآءُوْكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللّٰهُۙ وَيَقُوْلُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُؕ حَسْبُهُمْ جَهَنَّمُۚ يَصْلَوْنَهَاۚ فَبِئْسَ الْمَصِيْرُ
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى الَّذِيْنَ نُهُوْا தடுக்கப்பட்டவர்களை عَنِ النَّجْوٰى கூடிப் பேசுவதை விட்டும் ثُمَّ பிறகு يَعُوْدُوْنَ திரும்புகிறார்கள் لِمَا نُهُوْا எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ عَنْهُ அதிலிருந்து وَيَتَنٰجَوْنَ கூடிப் பேசுகிறார்கள் بِالْاِثْمِ பாவத்தையும் وَالْعُدْوَانِ வரம்புமீறுவதையும் وَمَعْصِيَتِ மாறுசெய்வதையும் الرَّسُوْلِ وَاِذَا جَآءُوْكَ தூதருக்கு/அவர்கள் உம்மிடம் வந்தால் حَيَّوْكَ உமக்கு முகமன் கூறுகிறார்கள் بِمَا لَمْ يُحَيِّكَ உமக்கு எதை முகமன் கூறவில்லையோ بِهِ அதை اللّٰهُۙ அல்லாஹ் وَيَقُوْلُوْنَ கூறுகிறார்கள் فِىْۤ اَنْفُسِهِمْ தங்கள் மனதிற்குள் لَوْلَا يُعَذِّبُنَا நம்மை வேதனை செய்யாமல் இருக்க வேண்டுமே اللّٰهُ بِمَا نَقُوْلُؕ அல்லாஹ்/நாம் சொல்வதைக் கொண்டு حَسْبُهُمْ அவர்களுக்கு போதும் جَهَنَّمُۚ நரகமே يَصْلَوْنَهَاۚ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள் فَبِئْسَ الْمَصِيْرُ அது மீளுமிடங்களில் மிகக் கெட்டதாகும்
58:8. இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் “நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை” என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும்; அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.
58:8. (நபியே!) ரகசியமே கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும், தடுக்கப்பட்டதை நோக்கியே செல்லும் அவர்களை நீர் கவனித்தீரா? பாவத்திற்கும், வரம்பு மீறுவதற்கும், (நம்) தூதருக்கு மாறு செய்வதற்குமே, அவர்கள் ரகசியமாகச் சதி ஆலோசனை செய்கின்றனர். பின்னர் அவர்கள் உங்களிடம் வந்தாலோ, அல்லாஹ் உங்களுக்குக் கூறாத வார்த்தையைக் (கொண்டு, அதாவது: ‘‘அஸ்ஸலாமு அலைக்க' உம்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! என்று கூறுவதற்குப் பதிலாக, ‘‘அஸ்ஸாமு அலைக்க' உமக்கு மரணம் உண்டாவதாக! என்று) கூறிவிட்டு, அவர்கள் தங்களுக்குள் (இவர் உண்மையான தூதராக இருந்தால் ‘‘பரிகாசமாக) நாம் கூறியதைப் பற்றி, அல்லாஹ் நம்மை வேதனை செய்யமாட்டானா?'' என்றும் கூறுகின்றனர். நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதில் அவர்கள் நுழைந்தே தீருவார்கள். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது.
58:8. எவர்கள் இரகசியப் பேச்சுகள் பேசுவதைவிட்டுத் தடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? அவர்கள் தடுக்கப்பட்டிருந்த செயல்களையே மீண்டும் செய்கின்றார்கள். மேலும், இவர்கள் தங்களிடையே ஒளிந்து ஒளிந்து பாவமான வரம்பு மீறுகின்ற, தூதருக்கு மாறு செய்கின்ற பேச்சுகளையே பேசுகின்றார்கள். மேலும், இவர்கள் உம்மிடம் வரும்போது எந்த முறையில் அல்லாஹ் உமக்கு வாழ்த்து (ஸலாம்) கூறவில்லையோ அந்த முறையில் இவர்கள் உமக்கு ஸலாம் சொல்கின்றார்கள். மேலும், தங்களுடைய உள்ளங்களில் கூறிக்கொள்கின்றார்கள்: “நம்முடைய இந்தப் பேச்சுகளுக்காக அல்லாஹ் நமக்கு ஏன் தண்டனை தருவதில்லை?” அவர்களுக்கு நரகமே போதுமானது! அதற்கே அவர்கள் எரிபொருளாகுவார்கள். அவர்களின் கதி எத்துணைத் தீயது!
58:8. (நபியே!) இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டார்களே அத்தகையோரை நீர் பார்க்கவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ, அதன்பாலே அவர்கள் திரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் (தங்களுக்கு மத்தியில்) பாவ(மானவிஷய)த்தையும், (மற்றவர்கள் விஷயத்தில்) வரம்பு மீறுதலையும், (நம்முடைய) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு அவர்கள் இரகசியமாகப் பேசுகின்றனர், மேலும், அவர்கள் உம்மிடம் வந்தால், அல்லாஹ் எவ்வார்த்தையைக் கொண்டு, முகமன் கூறவில்லையோ அதைக்கொண்டு உமக்கு முகமன் கூறுகிறார்கள், நாம் கூறியதைப் பற்றி (அவர் தன் தூதில் உண்மையாளராக இருந்தால்) அல்லாஹ் நம்மை வேதனை செய்யக்கூடாதா?” என்றும் தங்கள் மனங்களில் கூறுகின்றனர், நரகம் அவர்களுக்குப் போதுமானதாகும், அதில் அவர்கள் நுழைவார்கள், அது திரும்பிச் செல்லுமிடத்தால் மிகக் கெட்டது.
58:9 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَـتَـنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰىؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا تَنَاجَيْتُمْ நீங்கள் கூடிப்பேசினால் فَلَا تَـتَـنَاجَوْا கூடிப்பேசாதீர்கள் بِالْاِثْمِ பாவமானதையும் وَالْعُدْوَانِ வரம்புமீறும் காரியத்தையும் وَمَعْصِيَتِ மாறுசெய்வதையும் الرَّسُوْلِ தூதருக்கு وَتَنَاجَوْا கூடிப்பேசுங்கள்! بِالْبِرِّ நன்மையான விஷயத்தையும் وَالتَّقْوٰىؕ இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் وَاتَّقُوا அஞ்சிக் கொள்ளுங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْۤ எவன் اِلَيْهِ அவனிடம்தான் تُحْشَرُوْنَ நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
58:9. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
58:9. நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் நீங்கள் ரகசியம் பேசினால் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்) தூதருக்கு மாறுசெய்வதற்காகவும், ரகசியம் பேசாதீர்கள். ஆயினும், நன்மை செய்வதற்காகவும் இறையச்சத்திற்காகவும் இரகசியம் பேசலாம். (அனைத்தையும் அறிந்த) அல்லாஹ்வின் சமூகத்திற்கு நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்துகொள்ளுங்கள்.
58:9. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் உங்களுக்குள் இரகசியம் பேசுவீர்களாயின் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், தூதருக்கு மாறு செய்வதற்காகவும் இரகசியம் பேசாதீர்கள்; மாறாக, நன்மையானதும் இறையச்சமுடையதுமான பேச்சுகளையே பேசுங்கள்! மேலும், எந்த இறைவன் முன்னிலையில் நீங்கள் ஒன்று சேர்க்கப்பட இருக்கின்றீர்களோ அந்த இறைவனுக்கு அஞ்சியவாறு இருங்கள்.
58:9. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரகசியம் பேசினால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள், நன்மையையும், பயபக்தியையும் கொண்டு நீங்கள் இரகசியம் பேசுங்கள் மேலும், எவன் பக்கம் ஒன்று திரட்டப் படுவீர்களோ அத்தகைய அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.
58:10 اِنَّمَا النَّجْوٰى مِنَ الشَّيْطٰنِ لِيَحْزُنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيْسَ بِضَآرِّهِمْ شَيْـٴًـــا اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
اِنَّمَا النَّجْوٰى கூடிப்பேசுவது مِنَ الشَّيْطٰنِ ஷைத்தான் புறத்திலிருந்து தூண்டப்படுகிறது لِيَحْزُنَ கவலைப்படுத்து வதற்காக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَلَيْسَ அது இல்லை بِضَآرِّهِمْ அவர்களுக்கு தீங்கு செய்வதாக شَيْـٴًـــا அறவே اِلَّا بِاِذْنِ அனுமதி இல்லாமல் اللّٰهِؕ அல்லாஹ்வின் وَعَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீதே فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கட்டும் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள்
58:10. ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய(ப் பேச்சாகு)ம்; ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (அவர்களுக்கு) அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது; எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும்.
58:10. (அவர்களை) ஷைத்தான் இரகசியமாகப் பேச வைப்பதெல்லாம், நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கவலையை உண்டுபண்ணுவதற்காகவே. அல்லாஹ்வுடைய நாட்டமின்றி, அவர்களுக்கு அது (-இரகசியம்) அறவே தீங்கிழைக்காது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே நம்பியிருக்கவும்.
58:10. கிசுகிசுப்பது ஷைத்தானியச் செயலாகும். இறைநம்பிக்கை கொண்டோரை மனம் நோகச் செய்வதற்காகத்தான் அது செய்யப்படுகின்றது. ஆயினும், இறைவனின் அனுமதியின்றி அதனால் அவர்களுக்குச் சிறிதும் நஷ்டம் ஏற்படுத்த முடியாது. மேலும், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும்.
58:10. (பாவமானதையும், வரம்பு மீறுதலையும் கொண்டு) இரகசியம் பேசுவதெல்லாம் விசுவாசங்கொண்டவர்களை கவலையடையச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதாகும், அல்லாஹ்வுடைய அனுமதியின்றி அவர்களுக்கு அவன் யாதொன்றையும் தீங்கிழைத்துவிடக்கூடிய (சக்தி பெற்ற)வன் அல்லன், ஆகவே, விசுவாசங் கொண்டவர்கள் அல்லாஹ்வின் மீதே (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை கொள்ளவும்.
58:11 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ ۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا قِيْلَ கூறப்பட்டால் لَـكُمْ உங்களுக்கு تَفَسَّحُوْا இடம் கொடுங்கள் فِى الْمَجٰلِسِ சபைகளில் فَافْسَحُوْا இடம் கொடுங்கள்! يَفْسَحِ விசாலப்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ ۚ உங்களுக்கு وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் انْشُزُوْا நீங்கள் புறப்படுங்கள் فَانْشُزُوْا நீங்கள் புறப்படுங்கள் يَرْفَعِ உயர்த்துவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை مِنْكُمْ ۙ உங்களில் وَالَّذِيْنَ اُوْتُوا இன்னும் கொடுக்கப்பட்டவர்களை الْعِلْمَ கல்வி دَرَجٰتٍ ؕ பல அந்தஸ்துகள் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை خَبِيْرٌ ஆழ்ந்தறிபவன்
58:11. ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
58:11. நம்பிக்கையாளர்களே! (நீங்கள் ஒரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் ‘‘சபையில் நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் நகர்ந்து இடம் கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் ஒரு காரணத்திற்காக உங்களை நோக்கி) ‘‘எழுந்து (சென்று) விடுங்கள்'' என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்துகொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான்.
58:11. இறைநம்பிக்கைகொண்டவர்களே! அவைகளில் நகர்ந்து இடம் ஏற்படுத்திக் கொடுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால், இடம் ஏற்படுத்திக் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடம் ஏற்படுத்தித் தருவான். மேலும், “எழுந்து செல்லுங்கள்!” என உங்களிடம் சொல்லப்பட்டால், எழுந்து செல்லுங்கள். உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ, மேலும், எவர்கள் ஞானம் வழங்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உயர்ந்த பதவிகளை வழங்குவான். மேலும், நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறியக்கூடியவனாக இருக்கின்றான்.
58:11. (விசுவாசங்கொண்டோரே!) “சபைகளில் விசாலமாக இடமளியுங்கள்” என்று உங்களுக்குக் கூறப்பட்டால், (அவ்வாறே) நீங்கள் விசாலமாக இடமளியுங்கள், அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி வைப்பான், தவிர, (சபையிலிருந்து) ”எழுந்து விடுங்கள்” எனக் கூறப்பட்டால், அப்போது எழுந்து விடுங்கள், உங்களிலுள்ள விசுவாசிகளுக்கும், கல்வி அறிவு கொடுக்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்.
58:12 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً ؕ ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا نَاجَيْتُمُ நீங்கள் கூடிப்பேசினால் الرَّسُوْلَ தூதரிடம் فَقَدِّمُوْا முற்படுத்துங்கள் بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ நீங்கள் கூடிப்பேசுவதற்கு முன்னர் صَدَقَةً ؕ தர்மத்தை ذٰ لِكَ அது خَيْرٌ لَّكُمْ உங்களுக்கு மிகச் சிறந்தது(ம்) وَاَطْهَرُ ؕ மிக பரிசுத்தமானதும் فَاِنْ لَّمْ تَجِدُوْا நீங்கள் வசதி பெறவில்லை என்றால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ மகா கருணையாளன்
58:12. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
58:12. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம் தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்து விடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதையும்) நீங்கள் அடைந்திரா விட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
58:12. இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் தூதருடன் தனிமையில் பேசுவதாயின் அவ்வாறு பேசுவதற்கு முன் சிறிது தானதர்மம் செய்யுங்கள். இது உங்களுக்கு நன்மையானதும் மிகத் தூய்மையானதுமாகும். ஆனால், தர்மம் செய்வதற்கு எதுவும் உங்களிடம் இல்லையென்றால் திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
58:12. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (நம்முடைய) தூதருடன் இரகசியம் பேசினால், உங்கள் இரகசியப்பேச்சிற்கு முன்னர் தர்மத்தை முற்படுத்துங்கள், இது உங்களுக்கு மிகச்சிறந்ததும், மிகப்பரிசுத்தமானதுமாகும், (தர்மம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லையானால், (அது குற்றமல்ல,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக்கிருபையுடைவன்.
58:13 ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقٰتٍ ؕ فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَيْكُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
ءَاَشْفَقْتُمْ நீங்கள் பயப்படுகிறீர்களா? اَنْ تُقَدِّمُوْا நீங்கள் முற்படுத்துவதற்கு بَيْنَ يَدَىْ முன்னர் نَجْوٰٮكُمْ உங்கள் உரையாடலுக்கு صَدَقٰتٍ ؕ தர்மங்களை فَاِذْ لَمْ تَفْعَلُوْا நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் وَتَابَ மன்னித்துவிட்டதால் اللّٰهُ அல்லாஹ்வும் عَلَيْكُمْ உங்களை فَاَقِيْمُوا நிலை நிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَ اٰتُوا இன்னும் கொடுங்கள்! الزَّكٰوةَ ஸகாத்தை وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள்! اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗ ؕ அவனது தூதருக்கும் وَاللّٰهُ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை
58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
58:13. நீங்கள் உங்கள் இரகசியத்திற்கு முன்னர், நீங்கள் தானம் கொடுப்பதைப் பற்றிப் பயந்துவிட்டீர்களா? (மெய்யாகவே) உங்களால் (தானம்) செய்ய முடியாவிடில், அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். எனினும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (உண்மையாகவே) கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
58:13. தனிமையில் உரையாடுவதற்கு முன் தான தர்மங்கள் வழங்க வேண்டியிருக்குமே என்று நீங்கள் பயந்துவிட்டீர்களா? பரவாயில்லை. நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால் அதற்காக அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான் நீங்கள் தொழுகையை நிலைநாட்டிக் கொண்டும் ஜகாத்தைக் கொடுத்துக் கொண்டும் இருங்கள். மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வாழுங்கள். நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
58:13. நீங்கள் உங்களுடைய இரகசியப்பேச்சிற்கு முன்னர், தர்மங்களை முற்படுத்த வேண்டுமென்று நீங்கள் பயந்துவிட்டீர்களா? எனவே, அச்சமயம் நீங்கள் செய்யாதபோது, அல்லாஹ் உங்களை மன்னித்தும் விட்டான், ஆகவே, தொழுகையை முறையாக நிறைவேற்றுங்கள் ஜகாத்தையும் கொடுங்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடந்து கொள்ளுங்கள் அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்குணர்பவன்.
58:14 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْؕ مَّا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْۙ وَيَحْلِفُوْنَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُوْنَ
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا நண்பர்களாக எடுத்துக் கொண்டவர்களை قَوْمًا மக்களை غَضِبَ கோபப்பட்டானோ اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْؕ அவர்கள் மீது مَّا هُمْ مِّنْكُمْ அவர்கள் உங்களை சேர்ந்தவர்கள் இல்லை وَلَا مِنْهُمْۙ அவர்களை சேர்ந்தவர்களும் இல்லை وَيَحْلِفُوْنَ இன்னும் சத்தியம் செய்கின்றனர் عَلَى الْكَذِبِ பொய்யான விஷயத்தின் மீது وَهُمْ يَعْلَمُوْنَ அவர்கள் அறிந்து கொண்டே
58:14. எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
58:14. (நபியே!) அல்லாஹ் எவர்கள் மீது கோபமானானோ, அந்த மக்களுடன் உறவாடுகிறவர்களை நீர் பார்த்தீரா? இவர்கள் உங்களிலும் உள்ளவர்களல்ல; அவர்களிலும் உள்ளவர்களல்ல. இவர்கள் நன்கறிந்திருந்தும் (உங்களுடன் இருப்பதாக) வேண்டுமென்றே பொய் சத்தியம் செய்கின்றனர்.
58:14. அல்லாஹ்வின் சினத்திற்குள்ளான ஒரு கூட்டத்தாருடன் தோழமை பாராட்டியவர்களை நீர் பார்க்கவில்லையா, என்ன? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களும் அல்லர்; அவர்களைச் சார்ந்தவர்களும் அல்லர். மேலும் அவர்கள் அறிந்துகொண்டே பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கின்றார்கள்.
58:14. (நபியே!) அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டுவிட்டானோ, அக்கூட்டத்தினரை சிநேகிதர்களாக ஆக்கிகொண்டார்களே அத்தகையோர் பக்கம் நீர் பார்க்கவில்லையா? அவர்கள் உங்களில் உள்ளவர்களல்லர், (நீங்கள்) அவர்களிலும் உள்ளவர்களல்லர், அவர்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் (உங்களைச் சேர்ந்தவர்களென) பொய்யின் மீது சத்தியம் செய்கின்றனர்.
58:15 اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًا ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
اَعَدَّ ஏற்படுத்தி இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனையை شَدِيْدًا ؕ கடுமையான(து) اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் سَآءَ மிகக் கெட்டவையாகும் مَا كَانُوْا يَعْمَلُوْنَ அவர்கள் செய்துகொண்டிருந்தவை
58:15. அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.
58:15. இவர்களுக்காக அல்லாஹ், கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். நிச்சயமாக இவர்கள் செய்யும் காரியம் மகா கெட்டது.
58:15. அல்லாஹ் அவர்களுக்குக் கடும்வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான். அவர்கள் செய்து கொண்டிருப்பவை மிகவும் தீயசெயல்களே!
58:15. அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையை தயாராக்கி வைத்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள்_ அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக்கெட்டது.
58:16 اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ
اِتَّخَذُوْۤا எடுத்துக் கொண்டனர் اَيْمَانَهُمْ தங்கள் சத்தியங்களை جُنَّةً ஒரு கேடயமாக فَصَدُّوْا தடுக்கின்றனர் عَنْ سَبِيْلِ மார்க்கத்தை விட்டும் اللّٰهِ அல்லாஹ்வின் فَلَهُمْ ஆகவே, அவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை مُّهِيْنٌ இழிவுதரக்கூடிய(து)
58:16. அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்; ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
58:16. இவர்கள் தங்கள் (பொய்) சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுத்துவிட்டனர். ஆகவே, இவர்களுக்கு மிக்க இழிவு தரும் வேதனையுண்டு.
58:16. அவர்கள் தங்களுடைய சத்தியங்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களைத் தடுக்கின்றார்கள். இதற்காக அவர்களுக்கு இழிவுதரும் வேதனை இருக்கின்றது.
58:16. அவர்கள் தங்களுடைய (பொய்யான) சத்தியங்களைக் கேடயமாக எடுத்துக் கொண்டுவிட்டனர், ஆகவே (மனிதர்களை) அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் தடுத்து விட்டனர். எனவே, அவர்களுக்கு இழிவுடைய வேதனையுண்டு.
58:17 لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْــٴًـــا ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
لَنْ تُغْنِىَ அறவே தடுக்க மாட்டார்கள் عَنْهُمْ அவர்களை விட்டும் اَمْوَالُهُمْ அவர்களின் செல்வங்களோ وَلَاۤ اَوْلَادُهُمْ அவர்களின் பிள்ளைகளோ مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடம் شَيْــٴًـــا ؕ எதையும் اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِ ؕ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ நிரந்தரமாக
58:17. அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது; அவர்கள் நரகவாதிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
58:17. இவர்களுடைய பொருள்களும், இவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து எதையும் இவர்களை விட்டும் தடுத்துவிடாது. இவர்கள் நரகவாசிகள்தான்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
58:17. அவர்களின் செல்வங்களும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவாது; அவர்களின் பிள்ளைகளும் உதவ மாட்டார்கள். அவர்கள் நரகத்தின் தோழர்கள்! அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
58:17. அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்களும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து யாதொன்றையும், அவர்களை விட்டுத் தடுத்துவிடவே மாட்டாது, அத்தகையவர்கள் நரகவாசிகள் அவர்கள் அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்.
58:18 يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيَحْلِفُوْنَ لَهٗ كَمَا يَحْلِفُوْنَ لَـكُمْ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰى شَىْءٍ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ
يَوْمَ நாளில் يَبْعَثُهُمُ எழுப்புவான்/ அவர்களை اللّٰهُ அல்லாஹ் جَمِيْعًا அனைவரையும் فَيَحْلِفُوْنَ அவர்கள் சத்தியம் செய்வார்கள் لَهٗ அவனுக்கு முன் كَمَا போன்று يَحْلِفُوْنَ அவர்கள் சத்தியம் செய்வது لَـكُمْ உங்களுக்கு முன் وَيَحْسَبُوْنَ அவர்கள் எண்ணுவார்கள் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் عَلٰى شَىْءٍ ؕ ஒரு செயலின் மீது اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ هُمُ நிச்சயமாக அவர்கள்தான் الْكٰذِبُوْنَ பொய்யர்கள்
58:18. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள்; அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
58:18. அல்லாஹ் இவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளிலும் (இன்றைய தினம்) உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்ததைப் போன்று, அல்லாஹ்விடத்திலும் சத்தியம் செய்துவிட்டு, நிச்சயமாகத் தாங்கள் ஏதோ (தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல) காரியத்தைச் செய்து விட்டதாகவும் எண்ணிக் கொள்வார்கள். மெய்யாகவே இவர்கள்தான் பொய்யர்களன்றோ!
58:18. எந்நாளில் அல்லாஹ், அவர்கள் அனைவரையும் உயிர்கொடுத்து எழுப்புவானோ அந்நாளில் அவனது திருமுன் சத்தியம் செய்வார்கள் உங்கள் முன் சத்தியம் செய்வது போல்! அதனால் தங்களுக்குச் சிறிது பயன் கிடைக்குமென்றும் எண்ணிக் கொள்வார்கள். நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் பெரும் பொய்யர்கள்.
58:18. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்புகின்ற (மறுமை) நாளில், அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்ததைப்போன்று, அவனிடத்திலும் (பொய்ச்) சத்தியம் செய்வார்கள், நிச்சயமாக தாங்கள் (உண்மையான) ஏதோ ஒன்றின்மீது இருப்பதாகவும் எண்ணிக்கொள்வார்கள், அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அவர்கள்_அவர்கள் தாம் பொய்யர்கள்.
58:19 اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطٰنُ فَاَنْسٰٮهُمْ ذِكْرَ اللّٰهِؕ اُولٰٓٮِٕكَ حِزْبُ الشَّيْطٰنِؕ اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّيْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ
اِسْتَحْوَذَ ஆதிக்கம் செலுத்துகின்றான் عَلَيْهِمُ அவர்கள் மீது الشَّيْطٰنُ ஷைத்தான் فَاَنْسٰٮهُمْ அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான் ذِكْرَ நினைவை اللّٰهِؕ அல்லாஹ்வின் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் حِزْبُ கட்சியினர் الشَّيْطٰنِؕ ஷைத்தானின் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ حِزْبَ நிச்சயமாக கட்சியினர்தான் الشَّيْطٰنِ ஷைத்தானின் هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ நஷ்டவாளிகள்
58:19. அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க; ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!
58:19. ஷைத்தான் இவர்களை ஜெயித்து, அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்தையே இவர்களுக்கு மறக்கடித்து விட்டான். இவர்கள்தான் ஷைத்தானுடைய கூட்டத்தினர். ஷைத்தானுடைய கூட்டத்தினர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
58:19. ஷைத்தான் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்திவிட்டான்; இறைவனைப் பற்றிய நினைப்பை அவர்களின் உள்ளங்களிலிருந்து மறக்கடித்து விட்டான். அவர்கள் ஷைத்தானுடைய கட்சியினராவர். தெரிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய கட்சியினர்தாம் நஷ்டம் அடையக் கூடியவர்கள்.
58:19. ஷைத்தான் அவர்களை மிகைத்துவிட்டான், ஆகவே, அல்லாஹ்வைப்பற்றிய நினைவை அவர்களுக்கு மறக்கச் செய்துவிட்டான், இவர்கள் ஷைத்தானுடைய கூட்டத்தினர், அறிந்து கொள்வீராக! நிச்சயமாக ஷைத்தானுடைய கூட்டத்தினர்_அவர்கள் தான் நஷ்டமடைந்தோர்.
58:20 اِنَّ الَّذِيْنَ يُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اُولٰٓٮِٕكَ فِى الْاَذَلِّيْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يُحَآدُّوْنَ முரண்படுகிறார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗۤ அவனது தூதருக்கும் اُولٰٓٮِٕكَ அவர்கள் فِى الْاَذَلِّيْنَ மிக இழிவானவர்களில்
58:20. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.
58:20. எவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, அவர்கள் இழிவுக்குள்ளாவார்கள்.
58:20. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, அவர்கள் திண்ணமாக, மிகவும் கேவலமான படைப்பினங்களைச் சேர்ந்தவர்களாவர்.
58:20. நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் (அவர்களின் கட்டளைகளுக்கு மாறுசெய்வதன் மூலம்) விரோதிக்கின்றார்களே அத்தகையோர்_அவர்களே இழிவுகுள்ளானவர்களில் இருப்பர்.
58:21 كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِىْؕ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ
كَتَبَ விதித்துவிட்டான் اللّٰهُ அல்லாஹ் لَاَغْلِبَنَّ நிச்சயமாக வெல்வோம் اَنَا நானும் وَرُسُلِىْؕ எனது தூதரும்தான் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் قَوِىٌّ மிக வலிமை உள்ளவன் عَزِيْزٌ மிகைத்தவன்
58:21. “நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்” என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்; யாவரையும் மிகைத்தவன்.
58:21. தானும், தன் தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்கள் என்று அல்லாஹ் விதித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.
58:21. நானும் என்னுடைய தூதர்களுமே நிச்சயமாக வெல்லுவோம் என்று அல்லாஹ் எழுதிவிட்டான். உண்மையில், அல்லாஹ் பேராற்றல் உடையோனும் வலிமைமிக்கோனுமாய் இருக்கின்றான்.
58:21. “நிச்சயமாக நானும், என் தூதர்களும் மிகைத்து (வெற்றி பெற்று) விடுவோம்” என அல்லாஹ் எழுதிவிட்டான், நிச்சயமாக அல்லாஹ் பல மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.
58:22 لَا تَجِدُ قَوْمًا يُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ يُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِيْرَتَهُمْؕ اُولٰٓٮِٕكَ كَتَبَ فِىْ قُلُوْبِهِمُ الْاِيْمَانَ وَاَيَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ ؕ وَيُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ اُولٰٓٮِٕكَ حِزْبُ اللّٰهِ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ
لَا تَجِدُ நீர் காணமாட்டீர் قَوْمًا மக்களை يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கின்றனர் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَالْيَوْمِ الْاٰخِرِ மறுமை நாளையும் يُوَآدُّوْنَ நேசிப்பவர்களாக مَنْ எவரை حَآدَّ முரண்படுகின்றார் اللّٰهَ அல்லாஹ்விற்கும் وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் وَلَوْ كَانُوْۤا அவர்கள் இருந்தாலும் சரியே! اٰبَآءَهُمْ தங்கள் தந்தைகளாக اَوْ அல்லது اَبْنَآءَهُمْ தங்கள் பிள்ளைகளாக اَوْ அல்லது اِخْوَانَهُمْ தங்கள் சகோதரர்களாக اَوْ அல்லது عَشِيْرَتَهُمْؕ தங்கள் குடும்பத்தினராக اُولٰٓٮِٕكَ அவர்கள் كَتَبَ உறுதிபடுத்திவிட்டான் فِىْ قُلُوْبِهِمُ அவர்களின் உள்ளங்களில் الْاِيْمَانَ ஈமானை وَاَيَّدَهُمْ இன்னும் பலப்படுத்தினான்/அவர்களை بِرُوْحٍ உதவியைக் கொண்டு مِّنْهُ ؕ தன் புறத்தில் இருந்து وَيُدْخِلُهُمْ இன்னும் அவர்களை நுழைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமாக தங்குவார்கள் فِيْهَا ؕ அவற்றில் رَضِىَ பொருந்திக்கொள்வான் اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ அவர்களை وَرَضُوْا عَنْهُ ؕ இன்னும் பொருந்திக் கொள்வார்கள்/அவனை اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் حِزْبُ கட்சியினர் اللّٰهِ ؕ அல்லாஹ்வின் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக حِزْبَ கட்சியினர்தான் اللّٰهِ அல்லாஹ்வின் هُمُ அவர்கள் الْمُفْلِحُوْنَ வெற்றியாளர்கள்
58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.
58:22. (நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களிடம் நேசம் கொண்டு உறவாடுவதை நீர் காண மாட்டீர். அவர்கள், தங்கள் பெற்றோர்களாக அல்லது தங்கள் சந்ததிகளாக அல்லது தங்கள் சகோதரர்களாக அல்லது தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! (அவர்களை நம்பிக்கையாளர்கள் நேசிக்க மாட்டார்கள்.) இவர்களுடைய உள்ளங்களில்தான் அல்லாஹ் நம்பிக்கையை பதியவைத்துத் தன் அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கிறான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கி விடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தான் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
58:22. அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவதை (நபியே!) நீர் காணமாட்டீர்! அத்தகையோர் அவர்களுடைய தந்தையராயினும் அல்லது அவர்களுடைய தனயர்களாயினும் அல்லது அவர்களுடைய சகோதரர்களாயினும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராயினும் சரியே! அவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானை நம்பிக்கையைப் பதித்து வைத்துவிட்டான். மேலும், தன் சார்பிலிருந்து ரூஹை* வழங்கி அவர்களுக்கு வலிமை சேர்த்தான். மேலும், கீழே ஆறுகள் ஓடும் சுவனங்களில் அவன் அவர்களைப் புகச் செய்வான். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தான். அவர்களும் அல்லாஹ்வைக் கொண்டு திருப்தி அடைந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்சியினராவர். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் கட்சியினர்தாம் வெற்றி அடையக்கூடியவர்கள்.
58:22. அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசங்கொண்ட சமூகத்தினரை, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர், அவர்கள் தங்களின் பெற்றோர்களாயினும், அல்லது தங்களின் ஆண்மக்களாயினும், அல்லது தங்களின் சகோதரர்களாயினும் அல்லது தங்கள் குடும்பத்தவராயினும் சரியே! (காரணம்) அத்தகையோர்- அவர்களின் இதயங்களில் ஈமானை (விசுவாசத்தை அல்லாஹ்வாகிய) அவன் எழுதிவிட்டான், மேலும் தன்னிடமிருந்து (வெற்றி எனும்) ரூஹைக் கொண்டு அவர்களைப் பலப்படுத்தியிருக்கிறான், இன்னும் அவர்களைச் சுவனங்களில் நுழையச் செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள், அல்லாஹ் அவர்களை பொருத்திக் கொண்டான், அவனை அவர்களும் பொருத்திக் கொண்டார்கள், அவர்கள் தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்து கொள்வீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்_அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.